ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சிறீரங்கத்தில் தீண்டாமைக் கொடுமை! அக்கிரகாரப் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் அஞ்சல் ஊழியராகப் பணியாற்றக்கூடாதா?


சிறீரங்கம், ஜன.4- சிறீரங்கம் அஞ்சல் அலுவலகத் தில், அஞ்சல் பணியாளராகப் பணியாற்றிய தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை - அக்கிரகாரப் பகுதியில் பணியாற்றக் கூடாது - ரெங்கநாதர் கோவில் இருக்கும் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண் பணியாற் றுவதா? என்று கூறிப் பார்ப்பனர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறீரங்கம் திருச்சி மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சரஸ்வதி (36). கணவரை இழந்த இவர் கடந்த 28.7.2012 ஆம் ஆண்டு  சிறீரங்கம் சாத்தார வீதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் பட்டுவாடா ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். அப்பணியில் சேர்ந்த சரஸ்வதியை, பீட் எண் ஒன்றில் பணி செய்யும்படி அஞ்சல் அலுவலக அதிகாரி கூறியிருக்கிறார். அவரும் பணியில் ஈடு பட்டு வந்தார். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது?

இந்த பீட் எண் ஒன்று என்பது திருவரங்கம் ரங்கநாதன் கோவில் மற்றும் அதன் சுற்றுப் பகுதி யாகும். இதே அலுவலகத்தில் ஊழியராக பணி யாற்றி வருபவர் சேஷாத்திரி, இவர் பார்ப்பனர். சரஸ்வதி, பீட் ஒன்றில் பணியில் போடக் கூடாது, அவர் தாழ்த்தப்பட்டவர்  அவர் கோவில் உள்ளே சென்று அஞ்சல் கொடுக்க வேண்டியிருக்கும், அவரை எப்படி அனுமதிக்கிறது என்று தொடர்ந்து அஞ்சல் அதிகாரியிடம் பிரச்சினை செய்து வந்திருக்கிறார். அதிகாரி நாகராஜன் என்பவர் சேஷாத்திரி சொல்வதற்கு செவி சாய்க்காமல், சரஸ்வதியை அதே பகுதியில் பணியை பார்க்கும்படி கூறி யிருக்கிறார்.
வி.வி.அய்.பி
ரங்கநாதன் கோவிலுக்குப் பல்வேறு இடங் களிலிருந்து  சாஸ்திரி பார்ப்பனர் முதல் சவுண்டி பார்ப்பன அதிகாரி வரை வருவது வழக்கம். இதே போன்று பல் துறை அரசு அதிகாரிகள் பலரும் வருவதுண்டு. இப்படி வரும் அதிகாரிகளுக்கு அந்தந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோன்று அஞ்சல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வந்தால் சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த சேஷாத்திரி பார்ப்பனர் மற்றும் முத்துசாமி ஆகியோர் சரஸ்வதியை எப்படியாவது இட மாற்றம் செய்ய வேண்டும். அல்லது பணியிலிருந்து துரத்தி விடவேண்டுமென்று திட்டமிட்டிருந்தனர்.
பாஸ்போர்ட் திருட்டு
இந்நிலையில் சரஸ்வதி பட்டுவாடா செய்யக் கூடிய பதிவு அஞ்சல்களில்  இரண்டு பாஸ் போர்ட் வந்ததை அறிந்த சேஷாத்திரி இரண்டு பாஸ்போர்ட்டையும் திருடி மறைத்துவிட்டு தெரி யாததுபோல் நாடகமாடியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பாஸ்போர்ட் போய் சேரக் கூடிய நபரான சிறீரங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் சேஷாத்திரி நேரில் சென்று, உங்களது பாஸ்போர்ட் காணாமல்போனது பற்றி சரஸ்வதி மீது புகார் கொடுங்கள் என்று வலியுறுத்தியிருக் கிறார். அவரும் புகார் கொடுத்திருக்கிறார்.
இப்பிரச்சினையைக் காரணம் காட்டி அஞ்சல் துறை உயரதிகாரிகளை  பார்ப்பனர் சேஷாத்திரி நேரில் சென்று   சரஸ்வதியை   இடமாற்றம் செய்ய வேண்டுமென முறையிட்டிருக்கிறார். அதன்படி சரஸ்வதி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட் டிருக்கிறார்.
புகார்
இதனால் மனமுடைந்த சரஸ்வதி தீண்டாமை வன்கொடுமை பிரிவு அலுவலகத்திலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் சேஷாத்திரி மீதும் அவருக்குத் துணைபோகும் சிலர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், கணவரை இழந்து இரண்டு குழந்தை களுடன் வாழ்ந்து வரும் எனக்கு மீண்டும் அதே இடத்தில் பணி புரியவும்,  பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் புகாரின் பேரில் சேஷாத்திரிமீது காவல் துறையோ மற்றும் அஞ்சல் துறையோ  இதுவரை எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளாமல்  புகார் கொடுத்த சரஸ்வதிமீது பழி சுமத்தப்பட்டு, அவரை எப்படியாவது பணியிலிருந்து துரத்திவிடும் முடி வோடு பார்ப்பன சேஷாத்திரியும், அவருக்கு துணை போகும் அதிகாரிகளும் கங்கணம் கட்டி வருவதாக தெரிகிறது.
நடவடிக்கை இல்லை
சிறீரங்கத்தில் எந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் காவல்நிலையத்தில் புகார் எடுத்துக் கொள்வதில்லை. அதேபோன்று பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு வருகிறது. காரணம் அது முதல்வர் ஜெய லலிதா தொகு தியாகும்.   பிரச்சினை இல்லாத தொகுதி என்பதாக காட்டிக் கொள்ளவே மாவட்ட நிருவாக மும்,  காவல்துறையினரும், மற்ற அதிகாரிகளும் அனைத்துப் பிரச்சினை களையும் மூடிமறைக்கின்றார்கள்.
கண்டனம்
இப்பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழகம் உள்பட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, வழக்குரைஞர் பானுமதி தலைமையில், அனைத்து அமைப்புகள், கட்சி யினரும் இணைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்  நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மதச்சார்பின்மை நாட்டில் ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய தாழ்த்தப்பட்ட, கணவரை இழந்த பெண் ஊழியர் சரஸ்வதிக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்சினை சிறீரங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக