ஞாயிறு, 5 ஜனவரி, 2014

அழகிரி ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் ஏன்?


 மதுரை:மதுரையில் தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியின் பிறந்த நாளுக்கு, 25 நாட்கள் இருக்கும் நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் விவகாரம் எதிரொலியாக, அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக நகர் அமைப்பையே கலைத்து புதிய பொறுப்புக்குழுவை தலைமை நியமித்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று(ஜூன் 5) பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பல நகரங்களில் தி.மு.க.,வின் இலக்கியமே, இலக்கணமே, எங்கள் தலைவியே, ஜான்சி ராணியே என போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டினர். இதனால் அதிர்ச்சியுற்ற அழகிரி ஆதரவாளர்கள், அவரது (அழகிரி) பிறந்த நாளுக்கு 25 நாட்கள் இருக்கும் நிலையில் மதுரை முழுவதும் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர்.

பொதுக்குழு போஸ்டர்கள்:

'கிங் ஆப் தமிழ்நாடு' என்ற அடைமொழியுடன் தேவர் மகன் திரைபடத்தில் நடிகர் கமல், நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போஸில் அழகிரியை சித்தரித்திருந்தனர். சிலரோ, இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் 'ஜன., 30ல் தி.மு.க., பொதுக்குழு கூட்டம்' என போஸ்டர் ஒட்டினர். தி.மு.க., மாநாடு நடக்க உள்ள திருச்சியிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.சென்னை பொதுக்குழுவில் அழகிரி பங்கேற்காத நிலையில், இந்த புதிய பொதுக்குழு போஸ்டர் கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை கண்டித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'இப்படி விஷமத்தனம் செய்தவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் அதிகம் பொறுப்பு வகித்த, மாநகர் அமைப்பையே கூண்டோடு கலைத்து 'அதிர்ச்சி வைத்தியம்' தந்துள்ளது தலைமை.


95 சதவீதம் பேர் அழகிரி ஆதரவாளர்கள்:

மதுரை மாநகர் அமைப்பில் 9 பகுதி செயலாளர்களில் ஜெயராமன், சேது தவிர மற்றவர்கள் அழகிரி ஆதரவாளர்கள். 10 பொதுக்குழு உறுப்பினர்களில் 8 பேர், 5 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் வேலுச்சாமி, வி.கே.குருசாமி தவிர மற்றவர்கள், 72 வார்டு செயலாளர்களில் 65 பேர், 3 துணை செயலாளர்கள், அவை தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் பாண்டியன் ஆகியோர் அழகிரி ஆதரவாளர்கள். மாநகர் செயலாளரான தளபதி முன்பு அழகிரியின் ஆதரவாளர். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவர் ஸ்டாலின் அணிக்கு தாவி விட்டார்.மாநகர செயலாளர் என சில முக்கிய பதவிகள் தவிர, 95 சதவீதம் பேர் அழகிரி ஆதரவாளர்களாக இருந்த நிலையில், இப்போது அவர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர்.


தலைமையின் ஓரவஞ்சனை:

பதவி இழந்த அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சிக்காக உழைத்த எங்களை வௌியேற்றும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியை கலந்து ஆலோசிக்காமல், அவசரமாக நீக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்கமாக அழகிரி பிறந்த நாளையொட்டி தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் திரள்வர். ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 'தி.மு.க.,பொதுக்குழுவை போல' கூட்டம் கூடும் என்பதற்காக தான் அந்த மாதிரி போஸ்டர் அச்சிட்டிருந்தனர். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. பெரிய குற்றமும் இல்லை. மார்ச் மாதம் நடக்கவுள்ள ஸ்டாலின் பிறந்த நாளுக்காக இப்போதே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். எங்கள் மீது மட்டும் நடவடிக்கை பாய்வது ஏன்? இதுகுறித்து அழகிரியின் முடிவுக்காக காத்திருக்கிறோம், என்றனர்.


மீண்டும் பிளவுபடுமா:

தி.மு.க.,வில் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்னை, மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்துமோ என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.


எல்லோரும் ஸ்டாலின் ஆட்களே!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள தளபதி (தலைவர்), வேலுச்சாமி, குழந்தைவேலு, ஜெயராமன், சேது ராமலிங்கம், பாக்கியநாதன், சின்னம்மாள் ஆகியோர் ஸ்டாலின் ஆதரவாளர்களே. இதில் வேலுச்சாமி முன்னாள் மாநகர் செயலாளர்-ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். குழந்தைவேலு - அழகிரி ஆதரவாளராக மாறி மேயரானவர். 'மாஜி' ஆகி விட்ட இவர், இப்போது ஸ்டாலின் ஆதரவாளர். சேதுராமலிங்கம்- அழகிரியின் தீவிர எதிர்ப்பாளரான பொன்முத்துராமலிங்கத்தின் மகன்.

அழகிரிக்கு பதவி தந்த தலைமை, அதிகாரம் தரவில்லையே! நீக்கப்பட்ட அவைத் தலைவர் ஆதங்கம்: ''அழகிரிக்கு பதவி தந்த தலைமை, அதிகாரம் தரவில்லையே,'' என நேற்று பதவி இழந்த தி.மு.க., அவைத் தலைவர் இசக்கிமுத்து ஆதங்கம் தெரிவித்தார்.

மதுரை மாநகரில் கூண்டோடு நீக்கப்பட்ட, தி.மு.க., நிர்வாகிகளில் முக்கியமானவர் இசக்கிமுத்து. இவர் அழகிரியின் அதிதீவிர ஆதரவாளர்.


நமது நிருபரிடம் இசக்கிமுத்து கூறியதாவது:

தென் மாவட்டங்களில் ம.தி.மு.க., உதயமானபோது தி.மு.க.,வை கட்டிக்காப்பாற்றியதில் தென் மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரியின் பங்கு முக்கியமானது. அதை எளிதில் யாரும் மறந்து விடக்கூடாது. தென் மாவட்ட அளவில் நடந்த ஆறு சட்டசபை இடைத்தேர்தலில் அழகிரியின் உழைப்பால் வெற்றி கிடைத்தது. அதற்காக, அவருக்கு மண்டல அமைப்பாளர் பதவியை தலைமை தந்தது. ஆனால், பதவியை தந்த தலைமை, அதிகாரத்தை தரவில்லை.2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், தலைமை அறிவித்த நிதி தொடர்பான பிரச்னையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, தலைமையிடம் அழகிரி கேட்டு கொண்டார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன், கட்சியின் இடத்தை சொந்தம் கொண்டாடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அழகிரி கோரினார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லை முன்னாள் எம்.எல்.ஏ., மாலைராஜா ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர் குறித்து அழகிரியிடம் தலைமை ஆலோசிக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால், ஒரு கட்டத்தில் தென் மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் பக்கம் சென்றனர்.

சாத்தூர் ராமச்சந்திரன், வேலு உள்ளிட்ட மூத்த தலைவர்களை கையில் வைத்து கொண்டு ஸ்டாலின் தனியாக செயல்பட துவங்கினார். 'அழகிரி பிறந்த நாளான ஜன., 30ல் தி.மு.க., பொதுக்குழு' என தொண்டர்கள் போஸ்டர் ஒட்டினர். ஸ்டாலின், அழகிரி இணைந்து செயல்பட வலியுறுத்தித்தான் தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டினார்களே தவிர வேறு காரணங்கள் இல்லை. ஆனால், இதற்காக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றியது ஏற்புடையதல்ல. நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான முடிவு எடுப்பதற்கு முன் நிர்வாகிகளிடம் தலைமை கலந்தாலோசித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. தலைமை எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.


'இனிமேல் தான் எனக்கு பொறுப்பு அதிகம்'-தி.மு.க., பொறுப்புக்குழு தலைவர் தளபதி கூறுகிறார்:''கட்சியில் புதிய பதவி எதுவும் வழங்கவில்லை. ஏற்கனவே உள்ள கட்சி பதவி தான். பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. எனினும், இனி மேல் தான் எனக்கு பொறுப்பு அதிகம்,'' என மதுரை தி.மு.க., பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி கூறினார்.

தென் மாவட்ட அமைப்பாளர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தளபதி. ஸ்டாலின் ஆதரவாளராக இருந்த வேலுச்சாமி வகித்த மதுரை நகர செயலாளர் பதவியை, தளபதிக்கு பெற்றுத்தந்தவர் அழகிரி. ஆனால், தற்போது ஸ்டாலின் ஆதரவாளராக தளபதி உள்ளார். இவருக்கு, மதுரை தி.மு.க., பொறுப்புக்குழு தலைவர் பதவியை தலைமை நேற்று வழங்கியது.

அவர், நமது நிருபரிடம் கூறியதாவது:கட்சியில் புதிய பதவி எதுவும் எனக்கு வழங்கவில்லை. ஏற்கனவே உள்ள செயலாளர் பதவி தான். பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. எனினும், இனிமேல் தான் எனக்கு பொறுப்பு அதிகம். ஏற்கனவே உள்ள கட்சிப்பணியை விட, தற்போது தலைமை தந்துள்ள பதவி என்பது சற்று கூடுதலாக உழைக்கக்கூடியது. இதுதான் பழைய பதவிக்கும், புதிய பதவிக்கும் உள்ள வேறுபாடு. தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்போம். மதுரையை பொறுத்தமட்டில் நகர அமைப்பில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறநகர் அமைப்பில் மாற்றம் இல்லை, என்றார்.


மதுரையில் கட்சி பதவிகள் விரைவில் நியமனம் :

''மதுரை நகர கட்சி பதவிகள், தலைமையின் கட்டளைப்படி விரைவில் நியமனம் செய்யப்படும்,'' என பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராமன் கூறினார்.அவர், நமது நிருபரிடம் கூறியதாவது: தி.மு.க., வில் மதுரையை பொறுத்தமட்டில் மாநிலத் தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர பகுதி செயலாளர்கள், நகர நிர்வாகிகள் பதவிகளுக் கான நியமனம் தலைமையின் கட்டளைப்படி விரைவில் நடக்கும்.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், நகர பொறுப்புக்குழு தலைவர் தளபதி தலைமையில் இன்று (ஜன.,5) நடத்த உள்ளோம். தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினுக்கு கட்டுப்பட்டு நடப்போம், என்றார்.

அண்ணனுக்கு ஒரு நீதி; தம்பிக்கு ஒரு நீதியா? தலைமையை கேள்வி கேட்கும் அழகிரி ஆதரவாளர்கள்:விஷமத்தனமான போஸ்டர் விவகாரத்தால், அழகிரி ஆதரவாளர்கள் அதிகம் பொறுப்பு வகித்த, மதுரை மாநகர், தி.மு.க., அமைப்பை கூண்டோடு கலைத்து, 'அதிர்ச்சி வைத்தியம்' தந்துள்ளது, அந்தக் கட்சி தலைமை.


தாவினார்:

மதுரை மாநகரில், ஒன்பது பகுதி செயலர்களில், ஜெயராமன், சேது தவிர மற்றவர்கள் அழகிரி ஆதரவாளர்கள். 10 பொதுக்குழு உறுப்பினர்களில், எட்டு பேர், தலைமை செயற்குழு உறுப்பினர்களில், மூன்று பேர், 72 வார்டு செயலர்களில், 65 பேர், மூன்று துணை செயலர்கள், அவை தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் பாண்டியன் ஆகியோர் அழகிரி ஆதரவாளர்கள். மாநகர் செயலராக இருந்த, தளபதி முன்னர், அழகிரியின் ஆதரவாளர். 2011ல், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், ஸ்டாலின் அணிக்கு, அவர் தாவி விட்டார்.மாநகர செயலர் என, சில முக்கிய பதவிகள் தவிர, 95 சதவீதம் பேர் அழகிரி ஆதரவாளர்களாக இருந்த நிலையில், இப்போது அவர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர்.

கட்சித் தலைமையின் அதிரடி குறித்து, பதவி இழந்த அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சிக்காக உழைத்த, எங்களை வெளியேற்றும் நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரியை கலந்து ஆலோசிக்காமல், எங்களை அவசரமாக நீக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை.


உள்நோக்கம் இல்லை:

வழக்கமாக அழகிரி பிறந்த நாளையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் திரள்வர். ஆயிரக்கணக்கான நபர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 'தி.மு.க., பொதுக்குழுவை போல' கூட்டம் கூடும் என்பதற்காகவே, அந்த மாதிரி போஸ்டர் அச்சிட்டிருந்தனர். இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.மார்ச்சில் நடக்கவுள்ள, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் பிறந்த நாளுக்காக, இப்போதே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அவர்களை விட்டு விட்டு, எங்கள் மீது மட்டும் பாய்வது ஏன்?இந்த விவகாரத்தில், அழகிரியின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு ஆதரவாளர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக