செவ்வாய், 21 ஜனவரி, 2014

வாசனுக்கு ஆதரவு கேட்க திட்டமிட்ட காங்.,க்கு தி.மு.க. 'செக்'

வாசனுக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் தூது விடப்போவது தெரிந்ததும், உஷாரான தி.மு.க., தலைமை, ராஜ்யசபா தேர்தலுக்கான <வேட்பாளரை, அவசரமாக அறிவித்துள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசைச் சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல், 2ம் தேதி நிறைவு பெறுகிறது. பரிசீலனை:அதனால், புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் தேதி, தேர்தல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதற்கான வேட்பு மனு தாக்கல், இன்று துவங்குகிறது. தேர்தல் அலுவலராக, சட்டசபை செயலர், ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை துணை செயலர், துணை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல், 28ம் தேதி வரை, வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்.தினமும் காலை, 11:00 மணியில் இருந்து, மாலை, 3:00 மணி வரை, மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள், 29ம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற, 31ம் தேதி கடைசி நாள். போட்டி இருந்தால், அடுத்த மாதம், 7ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெறும்.


முந்தியது:



தமிழக சட்டசபையில், அதிக பலமுடைய, அ.தி.மு.க., இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், வெறும், 23 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே கொண்டுள்ள தி.மு.க., அதிரடியாக, ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன் பின்னணியாக, 'தே.மு.தி.க.,வுக்கு, தி.மு.க., வைத்துள்ள, 'செக்' இது' என, காரணம் சொல்லப்பட்டது. தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசி வந்த தி.மு.க., தலைமை, அக்கட்சிக்கு ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு அளிக்கவும் முன்வந்தது. ஆனாலும், இரு கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில், இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.அதனால், அக்கட்சிக்கு, 'செக்' வைக்கும் விதமாக, ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., தன் வேட்பாளரை அறிவித்துள்ளது என, கூறப்பட்டது.கூட்டணிக்கு, தே.மு.தி.க., முன்வரும் நிலையில், தி.மு.க., தன் வேட்பாளரை வாபஸ் பெற்று, தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு அளிக்க, தயாராக உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், 'தி.மு.க.,வின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காங்கிரசே காரணம்' என்ற புதுத் தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வாசனை, மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க, காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம், இது பற்றி, பேசியதாகத் தெரிகிறது.கடந்த முறை நடந்த ராஜ்யசபா தேர்தலில், கனிமொழியை நிறுத்திய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, காங்கிரசின் ஆதரவை கோரினார். கூட்டணியில் இல்லாத நிலையிலும், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.அதேபோல், இப்போது காங்கிரசுக்கு தி.மு.க., ஆதரவு கொடுக்க வேண்டும் என, காங்கிரஸ் தரப்பில், டி.ஆர்.பாலுவிடம் பேசப்பட்டுள்ளது. இந்த தகவல், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு தெரியவந்ததும், அவசரம் அவசரமாக, திருச்சி சிவாவை வேட்பாளராக அறிவித்து, காங்கிரஸ் ஆதரவு கேட்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டார் என, தமிழக காங்கிரசார் கூறுகின்றனர்.


சிவாவுக்கு ஆதரவா?


இதற்கிடையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று, 65வது பிறந்த நாள் விழா கொண்டாடிய, தமிழக காங்., தலைவர், ஞானதேசிகன் அளித்த பேட்டி:தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு, இலங்கை அரசு, ஒரு குழுவை அனுப்புவதற்காக, ஒருவாரம் அவகாசம் கேட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, தமிழக அரசை வலியுறுத்தி, இந்த முடிவை எடுத்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தேர்தல் நேரத்தில், வலுவான கூட்டணிக்கு, காங்கிரஸ் வியூகம் அமைக்கும்.

தலைமை முடிவு:



ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக, திருச்சி சிவா போட்டியிடுகிறார். கடந்த ராஜ்யசபா தேர்தலின் போது, கனிமொழிக்காக, எங்களிடம், தி.மு.க., ஆதரவு கேட்டதால், ஆதரவு அளித்தோம். இந்த ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., ஆதரவு கேட்டால், ஆதரவு அளிப்பது குறித்து, காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து, அவரின் சொந்தக் கருத்து. சென்னையில் உள்ள, பா.ஜ., அலுவலகம் முன், இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, நான் தடுத்து நிறுத்தினேன். ஆனால், சத்தியமூர்த்திபவன் முன் டீ விற்பனை செய்யும் ஆர்ப்பாட்டத்தை, பா.ஜ.,வினர் நடத்தியது மோதலுக்கு தான் வழி வகுக்கும்.இவ்வாறு, ஞானதேசிகன் கூறினார். thinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக