ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வீரமணி : சிதம்பரம் கோவிலை அரசிடம் இருந்து பறித்து தீட்சிதர்களிடம் தாரைவார்க்க சதி ! சொத்துக்களை கொள்ளையடிக்க சு சுவாமி கூட்டு


சிதம்பரம் நடராஜன் கோயில் பிரச்சினை:
தீட்சதர்கள் அடித்த கொள்ளையை  தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்றமும் தடுத்துள்ளன உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து வாதாட வேண்டும்
பக்தர்கள் உள்பட தமிழ்நாட்டின் உணர்வுக்குரிய பிரச்சினை இது
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தட்டும்! கவனம் செலுத்தட்டும்!

சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டுக்குள் இருந்து வருகிறது. மீண்டும் தீட்சதர்கள் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிக்க உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர் - தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வழக்கில் வெற்றி காண வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் 2009 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வந்து சேர்ந்தது - தி.மு.க. ஆட்சியில். இதனை எதிர்த்துத் தீட்சதர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அவர்களுக்குப் பாதக மாகவே முடிந்தது. இப்பொழுது உச்சநீதி மன்றம் சென்றுள்ளார்கள்.

இம்மாதம் 25ஆம் தேதி முதல் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சுப்பிரமணியசாமி என்ற பார்ப்பனரும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இணைந்து கொண்டு தானே உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.
சுப்பிரமணிய சாமியின் அடாவடித்தனம்!
திராவிடர்  இயக்கத்தைப் பற்றி தேவையில் லாமல் உச்சநீதிமன்றத்தில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.
சீரங்கநாதனையும், தில்லை நடராசனை யும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று பாரதிதாசன் பாடினார் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் (பாரதிதாசன் இந்தப் பாடலைப் பாடினாரா? ஆதாரம் காட்ட முடியுமா?)
உண்மை வரலாறு என்ன?
சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர் களுக்குச் சொந்தமானது தானா? உண்மை வரலாறு என்ன?
முதலாம் ராஜராஜன் முதலாவது ராஜேந் திர சோழன் ஆகியோரின் மனைவிகள், தங்கைமார்கள் 50 வேலி நிலங்களை சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். எதற்காகத் தெரியுமா? நடராஜன் கடவுள் முன் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்காகத்தான்.
அவ்வாறு அங்கு ஓதப்படுகிறதா? தேவாரம், திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்கிற முதியவரான ஓதுவாரை இதே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைக்கவில்லையா? நீதிமன்றம் உத்தரவுப்படியல்லவா தேவாரம் திருவாசகம் ஓதுவதற்கு அனுமதி கிடைத்தது (2.3.2008).
சிதம்பரம் நடராஜன் கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து சிதம்பரத்தில் தனிக் கூட்டம் போட்டு பொது மக்களுக்கு உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறினேன் (5.4.1982) அது சிதம்பர ரகசியம் எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்
1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுதே சிதம்பரம் தீட்சதர்கள் கூக்குரல் போட்டதுண்டு.
அப்பொழுது இந்து அற நிலையத்துறை தலைவராக இருந்து நீதிபதி சதாசிவ அய்யர் தீட்சதர்களின் மனுவின்மீது கீழ்க்கண்ட தீர்ப் பினை அளித்தது குறிப்பிடத்தக்கது (31.12.1925).
இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துக்கள் எதுவுமேயில்லை யென்று தீட்சதர்கள் சொல்லுவதும்  சரி யல்ல. ஆகவே  தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர்.  மேற் கண்ட ஆலயத்திற்கு எந்தவித வரவு - செலவு கணக்குகளையும் வைக்காமல், தீட்சதர்கள் நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கு உள்ளாகிறார்கள் என்று இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த சதாசிவ அய்யரே எழுத்துப் பூர்வமாகக் கூறிவிட்டாரே!
நீதிபதி டி முத்துசாமி அய்யர் என்ன சொன்னார்?
1883இல் இந்தக் கோயில் தீட்சதர் களிடையே இரு குழுக்கள்- பிளவுகள் ஏற் பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்குச் சம்பளம், ஆலய பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றில் செலவு செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிணக்கு அது. வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது (ஓ.எஸ்.எஸ்.7/1887) அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் சென்றது.
1888இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி.முத்துசாமி அய்யர், ஷெப்பர்டு (Sheperd) என்ற வெள்ளைக்காரர் அடங்கிய அமர்வு (Division Bench) விசாரித்துத் தீர்ப்பும் கூறியது.
முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோ கப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்த சொத்து என்பதற் குச் சிறுதுளியும் ஆதாரம் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களே!
சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததே!
2009இல் திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறையின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், சிதம்பரம் தீட்சதர்களுடன் சுப்பிரமணிய சாமி இணைந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்; தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் மேல் முறையீடு செய்தனர்; இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிமன்றமும் நிராகரித்து விட்டது.
சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்ததும் அக்கோயிலின் உண்மையான வருமானம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒன்றரை ஆண்டுக்குப்பின் சிதம்பரம் கோயிலின் உண்டியல் வருமானம் (14.7.2010 வரை) ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தீட்சதர்கள் அடித்த கொள்ளை!
ஆனால் இதே கோயில் தீட்சதர்கள் இக் கோயிலின் மாத வருமானம் என்று உயர்நீதிமன்றத்தில் கணக்குக் காட்டியது எவ்வளவு தெரியுமா?
ஆண்டு வருமானம் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமேதான் என்றும். இத்தொகையில் 37 ஆயிரம் ரூபாய் செலவு என்றும் 199 ரூபாய் மிச்சம் என்றும் கணக்குக் காட்டினர் என்றால் - அரசு அதிகாரிகள் காட்டிய கணக்கோடு ஒப்பிடும்போது எவ்வளவு பெருந் தொகையைக் கொள்ளையடித்துள்ளனர், ஏப்பமிட்டுள்ளனர்  தீட்சதர்கள் என்பது விளங்கவில்லையா?
அரசின் கைக்குக் கோயில் சென்றது என்றவுடன் தங்களின் பகற்கொள்ளைக்கு மூடு விழா செய்யப்பட்டதே என்ற ஆத்திரத் தின் காரணமாக, ஆற்றாமையின் காரணமாக உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர் - ருசிகண்ட பூனையால் சும்மா இருக்க முடியுமா?
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...
இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு நமது வேண்டுகோள்:
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை நியமித்து தீட்சதர்களின்  பொய் வழக்கை முறி யடித்து, கோயில் சொத்துக்கள் தனிப்பட்டவர் களுக்குக் கொள்ளை போகாமல் காப்பாற்ற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.
ஏதோ திராவிடர் கழகம் சொல்லுகிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது; பொது மக்கள். பக்தர்கள், பொது நல விரும்பிகள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டி வந்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த இரு செயலாளர்கள் நாக. வெங்கடேச தீட்சதர், நடராஜ் தீட்சதர் ஆகியோர் கையொப்பமிட்டு, தில்லை நடராஜன் கோயில் தீட்சதர்கள் செய்யும் அட்டூழியங்களை ஊழல் களைப் பட்டியல் போட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இந்தியப் பிரதமர், காஞ்சிபரம் சங்கராச்சாரியார் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.


சென்னை  
29.11.2013
கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக