திங்கள், 16 டிசம்பர், 2013

2G ஸ்பெக்ட்ரம் ! திமுகவை அழிக்க பின்னப்பட்ட சதிவலை ! சி.பி.ஐ. யாருடைய கைவாள்?


திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற் கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று நம்முடைய தம்பி ராஜாவை, சிறையிலே வைத்து - இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறது. ஆனால் வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடுபவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.ஐ. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.ஐ. யாருடைய கைவாள்? திமுகவை அழிக்க பின்னப்பட்ட சதிவலை தான் ஸ்பெக்ட்ரம் 
அந்தச் சி.பி.ஐ. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.ஐ. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?
அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதை யெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சியிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை.
ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா?
எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன். நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், நம்முடைய பேராசிரியரும், நம்முடைய கழகத்தின் தளபதி, அத்தனை பேரும் இவைகளையெல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள் என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறைபட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும். ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக