வியாழன், 5 டிசம்பர், 2013

நவீன சரஸ்வதி சபதம் ! லாஜிக்குகளை எல்லாம் கேலி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள் !

சித்த மருத்துவரின் வாரிசு ஜெய். அவர் தன் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருக்கிறார். அரசியல்வாதியின் மகன் சத்யன். அடுத்த எம்.எல்.ஏவாக தயாராகி கொண்டிருக்கிறார். ராஜ்குமாருக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை. வெங்கட்பிரபுவின் அடுத்த படத்துக்கு தேர்வாகி காத்திருக்கிறார். பெண் தாதாவின் கணவரான விடிவி கணேஷுக்கு மனைவியிடமிருந்து விடுதலை வேண்டும். இந்த நால்வரும் நண்பர்கள். நால்வருக்கும் இப்படி ஆளுக்கொரு கமிட்மென்ட் இருக்கிறது. இந்த நிலையில் ஜெய்யின் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட பாங்காக் போகிறார்கள். அங்கு ஒரு பாரில் விடிய விடிய குடிக்கிறார்கள். காலையில் பார்த்தால் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தீவில் கிடக்கிறார்கள்.அந்த தீவிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இனிமேல் குடிக்கவே மாட்டோம் என்று சத்தியம் செய்கிற அளவுக்கு படாதபாடுபடுகிறார்கள். அந்த தீவில் தென்னங்கள்ளை குடித்துவிட்டு தப்பிக்க வந்த வாய்ப்பையும் தவற விடுகிறார்கள். அவர்கள் அந்த தீவில் இருந்து தப்பித்தார்களா? அவர்களின் கமிட்மென்டுகள் நிறைவேறியதா என்பது மீதி கதை. மதுவால் உண்டாகும் தீமைகளை எடுத்துச் சொல்ல கயிலாயத்தில் இருந்து சிவன் ஆடும் திருவிளையாடல்தானாம் இதெல்லாம்.எந்த லாஜிக்கும் இல்லாமல் கலகலப்பாக படம் காட்டி கருத்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கேற்ப படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். சிவபெருமான் பேமிலியிடம் லேட்டஸ்ட் செல்போன், ஐபாட், கம்ப்யூட்டர், தமிங்கிலீஸ் டயலாக் என ஜாலியாக படம் தொடங்குவது, ஒவ்வொரு கேரக்டரையும் நாரதர் மனோபாலா, சிவபெருமானுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது, அவர்களின் இன்னொரு முகத்தை காட்டுவது என கலகலப்பாகச் செல்கிறது படம்.

இவர்கள் நால்வரும் தீவில் மாட்டிக் கொண்ட பிறகு ஹீரோயினுக்கு வேலையில்லாததால் படத்துக்கு கலர் குறைகிறது. அதனை விடிவி கணேஷ் காமெடியால் கொஞ்சம் சமாளிக்கிறார்கள். தலையில் தேங்காய் விழுந்து ஓல்டு சரஸ்வதி சபதம் வசனங்களை அவர் பேசித் திரிவது, அவருக்கு ஜெய் தவறான வைத்தியம் செய்வது, உதவ வந்தவர்களை போதையில் விரட்டி அடிப்பதுமாக அவர் பண்ணும் கலாட்டா கலக்கல் ரகம்.ஜெய், நிவேதா காதல் ஆரம்பிப்பதற்கு பெரிய காரணம் இல்லாவிட்டாலும் காதல் வந்த பிறகு அதை கவிதை மாதிரி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜெய்யின் பாலியல் வைத்திய டி.வி புரோக்ராம் பார்த்து நிவேதாவின் பேமிலி டெரர்ராவது செம காமெடி.

நிவேதாவுக்கு வாய்ப்பு குறைவு. ஆனாலும் அவர் அழகு படம் முழுக்க பயணிக்கிறது. ஜெய் காதல் ஏரியாவிலும், காமெடி ஏரியாவிலும் ஸ்கோர் பண்ணுகிறார். சத்யனும், ராஜ்குமாரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.தனி தீவில் 6 மாதம் மாட்டிக் கொண்டவர்கள், உடம்பு இளைத்து தளர்ந்து போயிருக்க வேண்டாமா? அடிக்கடி அவர்களே படத்தை பற்றி கமென்ட் அடித்துக் கொள்கிறார்கள். அது அப்படியே படத்துக்கு பொருந்தும்போது கைதட்டல்.தீவில் மாட்டிக் கொண்டவர்கள் தப்பிக்க சிவபெருமான் கொடுக்கும் வாய்ப்புகளில் புத்திசாலித்தனம் எதுவும் இல்லை. ஊருக்குத் திரும்பும் நால்வரும் சந்திக்கும் முடிவுகள் எதுவும் புதிதாக இல்லை. மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்க சிவபெருமானை கொண்டு நவீன திருவிளையாடலை நடத்திக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். விளையாட்டுகள், ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறது.- தினகரன் விமர்சனக்குழு. -cinema.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக