வியாழன், 5 டிசம்பர், 2013

கருத்து கணிப்பு ! ம பி ,ராஜஸ்தான் சதிஷ்காரில் BJP வெற்றி ? டெல்லியில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை

புதுடெல்லி, நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தல் டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நேற்றுடன் நடந்து முடிந்தன. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் நிலவுகிறது எனவே, இந்த தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். 5 மாநில சட்டசபை தேர்தலும் முடிவடைந்துவிட்ட நிலையில் ‘இந்திய டுடே’ இணையதளம் உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகள், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டெல்லி
நாட்டின் தலைநகரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் டெல்லி சட்டமன்ற தேர்தல், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் 3–வது முறையாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 2008–ல் நடந்த தேர்தலில் இங்குள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜனதா 23 இடங்களையே பெற்றிருந்தது.
ஆனால் தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்களும், பா.ஜனதாவுக்கு 29 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 18 இடங்களும், பிற கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று ‘ஏ.பி.பி–நீல்சன்’ அமைப்பின் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இங்கு ‘டைம்ஸ் நவ்–சி’ தொலைக்காட்சி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 21 இடங்களையும், பா.ஜனதா 29 இடங்களையும், ஆம் ஆத்மி 16 இடங்களையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியா 4–யு.ஆர்.ஜி. என்ற மற்றொரு அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா 41, காங்கிரஸ் 20, ஆம் ஆத்மி 6, மற்றவை 3 இடங்களை கைப்பற்றும் என்றும், ‘இந்திய டுடே’ இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 22 இடங்களும், பா.ஜனதாவுக்கு 36 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளன.
இவ்வாறு டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி இழப்பு ஏற்படும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் புதிய அரசு அமைப்பதில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றும் என்பதும் தெளிவாகிறது.
சத்தீஷ்கார்–ராஜஸ்தான்
சத்தீஷ்காரில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் முதல்–மந்திரி ராமன்சிங் 3–வது முறையாக ஆட்சி அமைப்பார் எனறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதன்படி மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜனதா 53 தொகுதிகளையும், காங்கிரஸ் 33 இடங்களையும், மற்றவை 4 இடங்களையும் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதைப்போல ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு, பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், பா.ஜனதா சார்பில் வசுந்தர ராஜே ஆட்சி அமைப்பார் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இங்கு பா.ஜனதாவுக்கு 120 இடங்களும், காங்கிரசுக்கு வெறும் 76 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் ‘இந்தியா டுடே’ இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 240 இடங்களில் பா.ஜனதா 140 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இங்கு காங்கிரஸ் கட்சிக்கு முன்னேற்றம் காணப்பட்டாலும், பா.ஜனதாவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ‘டைம்ஸ் நவ்’ கருத்துக்கணிப்பிலும் கூறப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜனதாவுக்கு 161 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரசுக்கு 62 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 7 இடங்களும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தை காங்கிரஸ் தக்கவைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்து உள்ளது.
இந்த கருத்துக்கணிப்புகள் பலிக்குமா? அல்லது பொய்க்குமா? என்பது வருகிற 8–ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும் dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக