வியாழன், 5 டிசம்பர், 2013

சென்னை பள்ளிகளில் ஜனவரி 7 முதல் கண்காணிப்பு கேமரா

சென்னை பள்ளிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து விவரம்: சென்னையில் 153 அரசு உதவி பெறும் பள்ளிகள், 298 மெட்ரிக் பள்ளிகள், 50 சி.பி.எஸ்.சி. பள்ளிகள், 314 மாநகராட்சி பள்ளிகள் என மொத்தம் 1,330 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சென்னையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளை பணத்துக்காகவும், முன் பகையின் காரணமாகவும், குடும்பப் பிரச்னைக்காகவும் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெறுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில பள்ளிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பதும் கடத்தலுக்கு ஏதுவாக உள்ளது என கருதப்படுகிறது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபலமான தனியார் பள்ளியில் படித்த பள்ளி மாணவன் 3 மாதத்துக்கு முன்பு கடத்தப்பட்டு, மீட்கப்பட்டான்.
இச் சம்பவத்துக்குப் பின்னர், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியது.
ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.
இதையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மாநகரம் முழுவதும் இருந்து 450 பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் தலைமை ஏற்று நடத்தினார்.
கூட்டத்தில் பள்ளிகளில் அனைத்து வாசல்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனத்தின் டிரைவர், வாகனத்தின் பதிவு எண் போன்ற தகவல்கள் பள்ளி நிர்வாகத்திடம் இருக்க வேண்டும், அதேபோல இந்தத் தகவலை பெற்றோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே பள்ளி மாணவர்களை ஏற்ற பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் வலியுறுத்த வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் கூறப்பட்டது.
அரசு, மாநகராட்சி பள்ளிகளிலும் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தினர்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக