திங்கள், 2 டிசம்பர், 2013

ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியா, சீனாவிற்கு உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி


ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியா, சீனாவிற்கு உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதிநியூயார்க்: ஈரான் மீது விதிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் தடையில் இருந்து விலக்களித்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்க விலக்களித்துள்ளது.
இதுகுறித்து, நேற்று முந்தினம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.



அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது, ‘ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை கணிசமான அளவு குறைத்துக் கொண்டுள்ளதால் சீனா, இந்தியா, கொரியா, துருக்கி, தைவான் ஆகிய நாடுகளுக்கு ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையிலிருந்து தேசிய பாதுகாப்பு ஆணையச் சட்டத்தின் என்டிஏஏ) கீழ் விலக்களிக்கப்படுகிறது.
கடந்த 6 மாதமாக இந்த நாடுகளின் கொள்முதல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு அதனடிப்படையில் அவற்றுக்கு இந்த விலக்கு அளிக்கப்படுகிறது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம், அடுத்த ஆறு மாதங்கள், அதாவது 180 நாட்கள் எந்தவித அபராதமுமின்றி இந்த நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம்.
இந்தியா, சீனா தவிர கூடுதலாக மலேசியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கெர்ரியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரானைத் தவிர மற்ற நாடுகளிலிருந்தும் தேவையான எண்ணெய் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் ஒபாமாவின் தீர்மானத்தின்படி இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், ‘தற்போது ஈரானைத் தவிர பிற நாடுகளில் இருந்து தேவையான அளவு எண்ணெய் பெறப்படுவதால், குறிப்பாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறைக்கப்படும்.
மேலும், தற்போதைய தேவை மதிப்பீடானது, ஈரானைத் தவிர கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பிற நாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உதிரி உற்பத்தியானது தேவையான அளவில் இருக்கும்' என்றார்.tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக