சனி, 21 டிசம்பர், 2013

திமுக உண்மையாகவே காங்கிரசை கைகழுவி விட்டதா ? ஜி.ராமகிருஷ்ண


தி.மு.க. அறிவிப்பை இறுதி முடிவாகக் கருத முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்ற தி.மு.க. அறிவிப்பை இறுதியான முடிவாக கருத முடியாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவும், மக்கள் விரோதக் கொள்கைகளை அமலாக்கிய காங்கிரசும் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட அகில இந்திய அளவிலான ஒரு மாற்றை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசின் பொருளாதாரக்கொள்கைகளை எதிர்த்து வரக்கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு. இத்தகைய கட்சிகளோடு உடன்பாடு வைத்துக் கொள்வோம் என்பதைத்தான் தி.மு.க. தலைவர் விமர்சிக்கிறார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 4½ ஆண்டு காலத்தில் பல முறை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திய போதும், சாதாரண வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் முறையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதித்த போதும் காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடி, ஆதரவளித்து அவற்றை நிறைவேற்ற ஒத்துழைத்த காரியத்தை தி.மு.க. செய்து கொண்டிருந்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை காரணமாக்கி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறிவிட்ட பிறகும் இந்த விசுவாசம் தொடர்ந்தது. மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது காங்கிரஸ் எவ்வித தயக்கமும் இன்றி ஆதரவளித்தது. எனவே, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. அறிவித்திருப்பது இறுதியான முடிவாகக் கருத முடியாது.
ஆங்கில பத்திரிகையில் தி.மு.க. தலைவரின் நேர்காணல் வெளிவந்துள்ளது. பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தி.மு.க. தலைவர் ‘‘எனது சொந்த கருத்து மோடி நல்ல மனிதர். அவருடைய மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த சிறப்பான கவனம் எடுத்துக் கொண்டார். நிர்வாகத்தில் அவர் திறமையானவர் என்பதை குஜராத்தில் நிரூபித்திருக்கிறார். மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’’. இது தி.மு.க. தலைவர் நேற்று (19.12.2013) சொன்ன கருத்து.
இதை பார்த்தாலே தி.மு.க. வின் நிலைப்பாடு என்னவென்று புரிந்துவிடும். 1991–ல் துவங்கி இதுநாள் வரையிலும் பா.ஜ.க.வும் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மாறி மாறி அமலாக்கி வந்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. எனவே மூன்றாவது மாற்றே இன்றைய தேவையாக உள்ளது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக முன்வைக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக