வியாழன், 21 நவம்பர், 2013

கலைஞர் : தமிழக ராக்கெட் தயாரிப்பு பணிக்கு கேரளாவில் இருந்து ஏன் ஆட்கள் வருகிறார்கள்?

கேரளா, மற்றும் ஆந்திரா மாநிலங்களின் செல்வாக்குதான், இஸ்ரோவில் அதிகமாக உள்ளது
“குலசேகரபட்டனத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று நான் கடிதம் எழுதினேன். ஆனால், தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை” என கூறியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, “தமிழகத்தில் நடக்கும் ராக்கெட் தயாரிப்பு பணிக்கு, கேரளாவில் இருந்து ஏன் ஆள் கொண்டுவருகிறார்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய வான்வெளி, திரவ வாயு மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்றதாக நிச்சயம் மாற்றமடையும். நம் நாட்டில் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும்.
இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
ஆனால், குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப்படுகிறது.
கேரளா, மற்றும் ஆந்திரா மாநிலங்களின் செல்வாக்குதான், இஸ்ரோவில் அதிகமாக உள்ளது. தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; தமிழகத்திற்கு கிடைத்து விடக்கூடாது என்ற பிடிவாத மனநிலையில் சிலர் செயல்படுகின்றனர்.
ராக்கெட் தயாரிப்பில் 60 சதவீதப் பணி மகேந்திரகிரியில்தான் நடக்கின்றன. ஆனால் அதற்கான ஆள் எடுப்பு பணியோ, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால், சில குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிக்கு வருகின்றனர்.
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்காக நான் பிரதமருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்னதான் நாம் பிரதமருக்கு கடிதம் எழுதினாலும், தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைத்தால் தானே, அந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறும். இதற்கு தமிழக அரசு ஏன் முன்வரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக