வியாழன், 21 நவம்பர், 2013

சுங்கச்சாவடியை நெருங்கும் முன் செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்

சுங்கச்சாவடியை நெருங்கும் முன் செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்த விரைவில் ஏற்பாடு: ஆஸ்கர் பெர்னாண்டஸ்
சுங்கச்சாவடியை நெருங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன் தங்கள் செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறினார்.
மத்திய தரைவழி போக்குவரத்து துறை, மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.) ஆகியவை இணைந்து கூட்டாக பெங்களூருவில் ஏற்பாடு செய்த கட்டுமான உபகரணங்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் குறித்த “எக்ஸ்கான்–2013“ கண்காட்சியை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பேசும்போது கூறியதாவது:–
“தொழில்துறை பயன் அடையும் வகையில் சில விரைவுச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த திட்டங்கள் முடிக்க வேண்டியுள்ளது. மும்பை–வடோதரா விரைவுச் சாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
கிழக்கு மற்றும் மேற்கு பகுதி சுற்று வட்டச்சாலைகள், டெல்லி–ஜெய்ப்பூர் விரைவு சாலை அமைக்கும் பணிகளும் வேகமாக முடிக்கப்படும். இந்த விரைவுச் சாலைகள் மூலம் தொழில் துறை வளர போதுமான வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த திட்டங்களின் அடிப்படை கருத்து தொழில் துறையை ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. பெங்களூர் விமான நிலைய விரைவுச் சாலை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந் தேதிக்குள் முடிக்கப்படும். அரசு–தனியார் பங்களிப்புடன் நடைபெறும் திட்டங்கள் நீண்ட காலத்தை கொண்டது. ஏனென்றால் அவர்கள் செலவு செய்த பணத்தை வசூலிக்க வேண்டும். திட்டங்களை பராமரிக்க வேண்டும்.
திட்டத்தை முடித்த பிறகு வெளியேற விரும்பினால் அவர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும். இதற்கு தேவையான நிதி வங்கி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க மின்னணு மூலம் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அதாவது செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பெற்று இருக்கிறோம். இது சோதனையில் உள்ளது. சுங்கச்சாவடியை நெருங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன் தங்கள் செல்போன் மூலம் இந்த கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாயில் கதவு திறந்திருக்கும். காத்திருக்காமல் தொடர்ந்து செல்லலாம். அடுத்த 3 மாதத்திற்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக