சனி, 30 நவம்பர், 2013

ஏ.டி.எம். மையத்தில் தாக்கப்பட்ட பெண் அதிகாரி குணமடைகிறார்

பெங்களூர் ஜே.சி.ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இயங்கி வரும் ஏ.டி.எம் மையத்தில் கடந்த 19–ந் தேதி பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியான ஜோதியை, ஒரு மர்மநபர் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்து சென்றான். தலை, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜோதி முதலில் நிமான்ஸ் ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கெங்கேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.
ஜோதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாலும், அவர் பேச தொடங்கி விட்டதாலும், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு தனியார் ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்தது. அப்போது ஜோதி பேசியதாவது:–
“நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். தற்போது நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கூடிய விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்ப செல்வதையே விரும்புகிறேன். இதற்கு மேல் வேறு எதுவும் என்னால் தெரிவிக்க இயலாது“ இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தனியார் ஆஸ்பத்திரி துணை தலைவர் டாக்டர் வெங்கடரமணா நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி அதிகாரி ஜோதியை மர்மநபர் தாக்கியதில், அவரது முகத்திலும், மூளையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. மூளை அருகே ஜோதியின் எலும்புகள் முறிந்து போய் இருந்தது. இதனை குணப்படுத்த அவருக்கு மூளை, முகத்தில் 2 முக்கிய ஆபரேஷன்கள் செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு பின்பு அவரது உடல் நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனாலும் ஜோதியின் வலதுபுறம் முழுவதும் இன்னும் செயல்படாமல் தான் உள்ளது. கையை அவரால் அசைக்க கூட முடியவில்லை. கால்களை அவ்வப்போது ஜோதியே அசைக்கிறார். சில நேரத்தில் வேகமாக கூட கால்களை அசைக்கிறார். இது மிகுந்த ஆச்சரியமும், வியப்பும் அளிக்கிறது. ஜோதி குணமடைந்தது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
ஏனெனில் மர்மநபர் தாக்கியதில் அவர் எளிதில் குணமடைய வாய்ப்பு இல்லாதது போன்று இருந்தது. இதனால் குறைந்தது 6 மாதம் ஆகும் என்று நினைத்தோம். ஆனால் அவர் 3 மாதத்திலேயே குணமடைந்து விடுவார். இன்னும் ஒரு வாரத்தில் ஜோதி வீடு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஒரு வாரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு சென்றாலும், 3 மாதம் (பிசியோதெரபி)சிகிச்சையை தொடர வேண்டும். வீட்டில் இருந்த படியே அவர் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
அப்போது தான் இன்னும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து பூரண குணமடைய முடியும். யாரும் எதிர்பாராத வகையில் ஜோதி விரைவில் குணம் அடைந்திருப்பது ஆஸ்பத்திரி டாக்டர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஜோதிக்கு இதுவரை ஆன மருத்துவ செலவு எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் அரசு, பொதுமக்கள் உள்பட அனைவரும் ஜோதிக்கு உதவி செய்வதாக தெரிவித்து உள்ளார்கள்.”
இவ்வாறு டாக்டர் வெங்கடரமணா கூறினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக