ஞாயிறு, 10 நவம்பர், 2013

மாயை’ படத்துக்கு தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் கொடுக்க மறுப்பு

ஒருதலை காதலால் சந்திக்கும் விபரீதங்களை மையமாக வைத்து, ‘மாயை’ என்ற படம் தயாராகி இருக்கிறது. சில மோசமான மனிதர்களிடம் கதாநாயகனும், கதாநாயகியும் மாட்டிக்கொண்டு அவர்களிடம் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் கதையம்சம் கொண்ட படம் இது.
ஹாலம்மா டாக்கீஸ் சார்பில் ஜே.ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்துள்ள இந்த படத்தில் சஞ்சய், சனம் ஆகிய இருவரும் கதாநாயகன்–கதாநாயகியாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக ஜே.ஆர்.கண்ணன் நடித்துள்ளார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, சேரன்ராஜ், பாத்திமாபாபு ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

கே.அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, ஜே.ராஜ் இசையமைத்து இருக்கிறார். பின்னணி இசை, மணீஷ். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன்: ஜே.ஆர்.கண்ணன்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்கள். மிரட்டும் கதையம்சமும், அச்சுறுத்தும் காட்சிகளும் இருப்பதால், ‘யு’ சான்றிதழ் கொடுக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் கூறினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டபடி, சில காட்சிகளை நீக்கியபின், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக