ஞாயிறு, 17 நவம்பர், 2013

பீட்சா 2 வில்லா - விமர்சனம்!

அடுத்து இதுதான் நடக்கும் என்று படம் பார்க்கும் ரசிகர்களின் ஒட்டுமொத்த யூகங்களையும் அடுத்தடுத்த காட்சிகளில் உடைத்துப் போட்டது பீட்சா என்ற படம். புதிய சிந்தனைகளுக்கு வரவேற்பு உள்ளதையும், சிறு படங்களையும் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய படங்களாக மாற்ற முடியும் என்ற பெரும் நம்பிக்கையையும் திரையுலகில் அழுத்தமாக பதிவு செய்த படம் பீட்சா. அதன் இரண்டாவது பகுதியாக அதே பாணியில் வெளியாகி இருக்கும் படம் பீட்சா 2 வில்லா. படத்தின் முதல் காட்சியே கல்லரைத் தோட்டத்தில் துவங்குகிறது. தன் முதல் புத்தகத்தை எழுதிவிட்டு அதை வெளியிட எந்த பதிப்பகமும் முன்வராத காரணத்தால் விரக்தியில் இருக்கும் ஒரு எழுத்தாளன். அவன் தந்தை இறந்துவிடுகிறார். தனக்கென யாரும் இல்லை என புலம்பும் ஹீரோவை ஆறுதல் சொல்லி தேற்றுகிறார் காதலி.


தனக்கு தெரியாமல் தன் தந்தை புதுச்சேரியில் ஒரு வீட்டை (வில்லா) வாங்கி வைத்திருப்பதும், அதை தன்னிடம் சொல்லாமல் மறைத்ததும் தன் குடும்ப வழக்கறிஞர் மூலமாக ஹீரோவுக்கு தெரியவருகிறது. புதுச்சேரி புறப்பட்டு பல ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வீட்டை சுத்தம் செய்து அங்கேயே தங்கிவிட நினைக்கிறார். 

வீட்டை விற்றுவிட தன் தந்தை பல முயற்சிகள் எடுத்ததும் அதில் பல தடைகள் வந்ததையும் வழக்கறிஞர் மூலம் அறிந்துகொண்டவர். வீட்டை விற்க சில முயற்சிகள் செய்கிறார். தடங்கல் மேல் தடங்கல் வர ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. தன் இரண்டாவது  புத்தகத்தை எழுதத் தொடங்கும் நேரத்தில், முதல் புத்தகத்தை வெளியிட ஒரு பதிப்பகம் முன்வந்து முன்தொகை  தருகிறது. 


தன் வீட்டில் கதை எழுதும் ஹீரோ... அங்கு ஒரு மறைக்கப்பட்ட அறை இருப்பதையும், அதில் பல ஓவியங்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அது எல்லாமே தன் வாழ்வில் நடந்ததை பிரதிபலிக்கும் ஓவியங்களாக இருப்பதையும் காண்கிறார். என்றோ வரையப்பட்ட ஓவியங்களில் எப்படி இன்று நடக்கும் சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது என்று அதிர்ச்சியடைகிறார். இனி நடக்கப் போகும் கோர சம்பவங்களும் அந்த ஓவியங்களில் இருப்பதைப் பார்க்கிறார். 

இவை அனைத்திற்கும் அந்த வீடு தான் காரணம் என்பது விசாரிக்கும் போது உணர்ந்துகொள்கிறார் ஹீரோ. தன் தந்தை அந்த வீட்டை வாங்குவதற்கு முன்பு ஒரு கவிஞர் அந்த வீட்டில் வசித்ததும் அவர் எழுதிய கவிதைகளில் தன் அப்பாவின் மரணத்தை பல ஆண்டுகள் முன்பாகவே பதிவு செய்து வைத்திருப்பதையும் தெரிந்துகொண்டவருக்கு, இந்த ஓவியங்கள் தன் தந்தையால் தன்னைப் பற்றி வரையப்பட்டவை என்பதும் தெரியவர மேலும் அதிர்ச்சியடைகிறார். 

வீட்டை விற்கவும் முடியாமல், வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும் வழியில்லாமல் ஹீரோ குழம்பிப்போக, நண்பனின் மூலம் பேய்களைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆய்வாளரை சந்திக்கிறார்.


அது பிரெஞ்சு நாட்டை சேந்தவர் கட்டிய வீடு என்பதும், அவர் ஒரு சைக்கோ என்பதும், அந்த வீட்டைக் கட்டும்போதே பல எதிர்மறையான சிந்தனைகளை வைத்து கட்டியிருக்கிறார் என்பதும் சில புரியாத மாயமந்திரங்கள் மூலம் தெரியவருகிறது. இது முன்னரே முடிவானது என்பதும் அதை மாற்றியமைக்க யாராலும் முடியாது என்பதும் ஹீரோவுக்கு தெரியவருகிறது. மேலும் எதிர்பார்க்க முடியாத சில திருப்புமுனைகளை வைத்து புருவங்களை நிமிர்த்தக் கூடிய க்ளைமாக்ஸை கொடுக்கிறார் இயக்குனர் தீபன். 

பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை, ஆனால் பேய் இருக்கிறது என்று ரசிகர்களை நம்ப வைத்து இரண்டு மணிநேரத்திற்கு ஏமாற்ற முடியும் என்ற ஒன்று தான் பீட்சா படத்தை பெரும் வெற்றியடைய செய்தது. ஆனால், வில்லா படத்தில் பேய்  இருப்பது போல ஏதேதோ புரியாத விஷயங்களை காண்பிப்பதால் குழப்பமே மிஞ்சுகிறது. 


படத்தின் முதல் பாதியில் பல்பு உடைவது, மேசை அலமாறிகள் சரிந்துவிழுவது என பூச்சாண்டி காட்டி சிரிப்பை வரவழைப்பது  ரசிகர்களுக்கு ஏமாற்றம். இரண்டாவது பாதியில் சுவாரஸ்யம் காட்டி இருந்தாலும் திகிலூட்டும் காட்சிகள் என எதுவும் இல்லாதது படத்தின் மைனஸ். 

திறமையான கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் சுவாரஸ்யமில்லாமல் அதை வீணடித்திருக்கிறார் இயக்குனர். இசையிலும் புதுமை இருந்ததாகத் தெரியவில்லை. ஒளிப்பதிவு மட்டுமே பளிச்சென மனதில் பதிகிறது. தீபக் குமாரின் கேமரா தூரிகையாக  மாறி ஒவ்வொரு ஃப்ரேமையும் ஓவியமாய் வரைந்திருக்கிறது. இயக்குனரின் திறமையால் நச்சுன்னு அமைவது க்ளைமாக்ஸ் மட்டுமே! 
nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக