ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஏற்காட்டில் தே மு தி க ஏன் போட்டி இடவில்லை ?

ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிடாமல், தே.மு.தி.க., ஒதுங்கிக்கொண்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான, கடைசி நாள் வரை காத்திருந்த, அக்கட்சியினர், ஏமாற்றம் அடைந்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தின், "பின்வாங்கல்' முடிவால், தி.மு.க., ஆறுதல் அடைந்துள்ளது. ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கான, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஆளும் கட்சியை எதிர்த்து, தே.மு.தி.க., மட்டுமே போட்டியிடும் என்ற நிலை காணப்பட்டது. லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு, உள்கட்சித் தேர்தல் பணி காரணமாக, இடைத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவில், தி.மு.க., இருந்தது தான் அதற்கு காரணம். ஆனால், "ஆளும் கட்சியை எதிர்த்து, பிரசாரம் செய்யும் வாய்ப்பையும், அதற்கான களத்தையும், இழந்து விடக் கூடாது' என, சேலம் மாவட்ட தி.மு.க.,வினர் கொடுத்த அழுத்தம், தி.மு.க., தலைமையின் முடிவை மாற்றியது. நிற்பதற்கும், ஒதுங்குவதற்கும் கூட பெட்டி கிடைக்கிறது. அப்புறம் என்ன?

அவசர அவசரமாக ஆலோசனை நடத்தி, "போட்டியிடுகிறோம்' என, அறிவித்தார் கருணாநிதி. அந்த சூட்டோடு, தே.மு.தி.க., போட்டிக்கு வந்து விடாமல் தடுக்கும் சூட்சுமத்துடன், ஆதரவு கேட்டு, அந்த கட்சிக்கு பகிரங்க கடிதம் எழுதினார்.

அதுபோன்ற கடிதம், காங்.,- பா.ஜ., மற்றும் கம்யூ.,களுக்கும் போய் சேர்ந்தது. ஆனால், அவை எல்லாம் போட்டியிடும் சிந்தனையே இல்லாத
கட்சிகள் என்பது தி.மு.க.,வுக்கு நன்றாக தெரியும்.
அதனால், தே.மு.தி.க.,வுக்கு, "செக்' வைக்கும் விதமாகவே, இந்த தந்திரத்தை கையாண்டார் கருணாநிதி, என்கின்றனர் தி.மு.க.,வினர்."தி.மு.க., ஒதுங்கிக்கொள்ளும்; ஏற்காட்டில் களமிறங்கி, அ.தி.மு.க.,வை எதிர்க்கும் ஒரே கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம்' என, விஜயகாந்த் போட்ட திட்டம், கருணாநிதியின் கடிதம் மூலம்,ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட்டது.

வெளிப்படையாக தி.மு.க.,வை ஆதரிக்கவும் முடியாது; தேர்தலில் போட்டியிட்டு, தி.மு.க.,வை 3 வது இடத்துக்கு தள்ளவும் முடியாது; இப்படியொரு பலவீனமான நிலையில், என்ன செய்வது என்று விஜயகாந்த் யோசிக்கத் துவங்கியதில் இருந்தே, அக்கட்சியின் புறக்கணிப்பு முடிவு ஊகிக்கப்பட்டு விட்டது என்கிறது அறிவாலய வட்டாரம். விஜயகாந்தின் ஊசலாட்டத்தை பயன்படுத்திக் கொண்ட ஆளும் வட்டாரம், ஏற்காட்டில் உள்ள தே.மு.தி.க.,வினருக்கு எடுத்த எடுப்பிலேயே வலை விரித்து விட்டது. வலை, விலை, பேரம் என, சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜயகாந்த், விசுவாசி ஒருத்தரை வேட்பாளராக நிறுத்தலாம் என, தேடத் துவங்கினார்.ஏற்கனவே, 7 பேரை இழந்து விட்ட விஜயகாந்த், இனிமேல் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், தனக்கு துரோகம் செய்யாதவராக, தீவிர விசுவாசியாகத்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அதற்கான தேடலில், சிலர் சிக்கினாலும், ஆளும் கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும்எதிர்த்து நின்று செலவு செய்யும் பண பலம் இல்லாதவராக அவர் இருப்பது தெரியவந்தது.இந்த குழப்பத்தில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை, சஸ்பென்சை நீட்டித்து வந்த விஜய்காந்த், எதிர்பார்த்தபடியே, தேர்தலை புறக்கணித்துள்ளார். எப்படி பார்த்தாலும், இது தி.மு.க.,வுக்கு லாபம் என்பதால், அக்கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிப்பதற்கான முடிவு என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், எதற்காக இம்முடிவை தே.மு.தி.க., எடுத்துள்ளது? டில்லி தேர்தலா அல்லது வேறு காரணமா என்பதை விளக்குவதற்கான அறிக்கை, விரைவில் விஜயகாந்திடம் இருந்து வெளிவரும் என்கிறது தே.மு.தி.க., வட்டாரம்.
நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக