ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு : புதிய அரசு சிறப்பு வக்கீல் நியமனம்

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் அரசு சிறப்பு வக்கீலை மாற்ற கோரிய வழக்கில் புதிய அரசு சிறப்பு வக்கீலை நியமித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், கவரப்பாளையத்தை சேர்ந்த மலையப்பன் மகள் பிளாரன்ஸ் மேரி(31). திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித அன்னாள் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தார்.இவருக்கும், திருச்சி பாதிரியார் ராஜரத்தினத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை பாதிரியார் ராஜரத்தினம் பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை மகளிர் போலீசில் 2010 அக்டோபர் 12ம் தேதி புகார் செய்தார். அதன் பேரில் பாதிரியார் ராஜரத்தினம், பிளாரன்ஸ் மேரியை மிரட்டியதாக பாதிரியார்கள் தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர் வேதம், கருகலைப்பு டாக்டர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2011ம் ஆண்டு ஜூன் 21ம்தேதி அனைவருக்கும் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் அப்போதைய மாஜிஸ்திரேட் இளங்கோவன் 88 பக்க குற்றப்பத்திரிகை நகலை வழங்கினார்.அதன் பிறகு இந்த வழக்கு ஜூலை 16ம் தேதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை மகிளா கோர்ட்டுக்கு மாற்றி 2012 பிப்ரவரி 23ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அரசு தரப்பு வக்கீல் அம்முவை நீக்கிவிட்டு வேறொரு அரசு சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும் என பிளாரன்ஸ்மேரி சார்பில் வக்கீல் இருதயசாமி, கலெக்டர் மற்றும் மகிளா நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதையடுத்து இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொள்ளவதாக வக்கீல் அம்மு கூறி விலகினார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த 30ம் தேதி வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 4ம் தேதிக்கு மாற்றி நீதிபதி திலகவதி உத்தரவிட்டார். இதற்கிடையில் அரசு சிறப்பு வக்கீலை நியமிக்க கோரிய வழக்கில் அரசு சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக அக்னல் ராஜன் என்பவரை நியமித்து அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக