ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மணல் கடத்தலை காட்டி கொடுத்த அண்ணன் தம்பியை உறவினர்களே கூலிப்படையை ஏவி கொன்றனர்

 திருச்சி அருகே மணல் கடத்தலை காட்டி கொடுத்ததால் அண்ணன்–தம்பியை உறவினர்களே கூலிப்படை யை வைத்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சியை அடுத்த ஆவூர் ஊராட்சி செங்களாக்குடியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன்கள் கார்த்திக்(வயது 30). டிரைவர். ராஜேஷ் (26). விவசாயி. அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோரையாற்றில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுபவர்கள் பற்றி வருவாய் துறையினருக்கும், போலீசா ருக்கும் தகவல் தெரிவித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன்பு அவர்கள் உறவினர் ஒருவர் லாரியில் மணல் அள்ளி சென்ற போது விராலிமலை போலீசாரிடம் கார்த்திக்கும் அவர் தம்பி ராஜேசும் ரகசியமாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணல் அள்ளியவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அண்ணல், தம்பிகள் மீது ஆத்திரத்துடன் இருந்தனர்.இந்த நிலையில் இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது உறவினர் ஒருவர் அருகில் உள்ள கோரையாற்றில் வாகனங்களில் சிலர் மணல் அள்ளுவதாக கூறி அழைத்து சென்றார். அவர்களுடன் 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது இருவரையும் கோரையாற்று அருகே தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திக்கும், ராஜேசும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தனர்.<
இவர்கள் இருவரையும் அழைத்து சென்ற நபரும், அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த இரட்டைக்கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை நடந்த இடத்திற்கு துப்பறியும் நாய் மார்ஷல் கொண்டு வரப்பட்டது. நாய் மோப்பம் பிடித்தபடி ஓடி அந்த ஊரை சேர்ந்த ஒருவர் வீட்டின் முன்பு போய் படுத்துக்கொண்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாத்தூர் மாரிமுத்து, விராலிமலை ராஜேந்திரன், இலுப்பூர் பாலசந்தர், கீரனூர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், ராஜேசும் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி வாகனங்களில் கடத்தப்பட்டது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே உறவினர்களே கூலிபடை ஏற்பாடு செய்து அவர்களை கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அரங்கில் கார்த்திக், ராஜேஸ் ஆகியோரின் உடல்கள் நீண்ட நேரமாக வைக்கப்பட்டு இருந்தன. அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். பகல் 1.30 மணி அளவில் உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு பல மணிநேரம் ஆகியும், இன்னும் பிரேத பரிசோதனை முடித்து கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த உறையூர் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், திருச்சி அரசு ஆஸ்பத்திரி சப்–இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, வாகனங்களை வேறுபாதையில் திருப்பிவிட்டனர். அதன்பிறகு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக