வெள்ளி, 18 அக்டோபர், 2013

பிரதமர் வேட்பாளர் மோடி நாளை சென்னை வருகை வரலாறு காணாத பாதுகாப்பு


சென்னை:பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஜ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி  கடந்த 26ம் தேதி திருச்சியில் நடந்த இளந்தாமரை  மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், மீண்டும் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இதற்காக அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு சென்னை விமானம் நிலையம் வருகிறார். அங்கு பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜ மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை கொடுக்கின்றனர்.


வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து  தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மோடி செல்கிறார். அங்கு மாநில, மாவட்ட  நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சுமார் 3 மணி நேரம் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்கிறார். மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நானி பல்கிவாலா ஆண்டு விழாவில் கலந்து கொண்டு  அருண்ஷோரி எழுதிய புத்தகத்தையும் வெளியிடுகிறார். நிகழ்ச்சியை முடித்து கொண்டு இரவு 8 மணிக்கு விமானம் நிலையம் செல்லும் அவர் தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு செல்கிறார்.

நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி  விமான நிலையம், கட்சி அலுவலகம், சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு அரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் 4 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகர் முழுவதும் இன்று காலை முதல் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், தி.நகரில் உள்ள பாஜ தலைமை  அலுவலகத்தை சுற்றியுள்ள தெருக்களில் போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த தெருக்களில் வசிப்போரின் முழு விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். மேலும், அங்குள்ள  தங்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களில் பலத்த சோதனை நடந்து வருகிறது. - See more at .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக