வெள்ளி, 18 அக்டோபர், 2013

விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை ! தனிகட்சி தொடங்குகிறார்? கேரளாவில் ரகசிய கூட்டம் !

நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி
வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின், அவருக்கும், ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட, அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் இறங்கினார். இதற்கிடையில், "தலைவா' படம் ரிலீசாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜயும், அவருடைய அப்பாவும், அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை, படம் ரிலீசாவதற்கு, சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது. இதனால் நொந்து போன நடிகர் விஜய், படம் ரிலீசாவதற்குள்ளாகவே, வெறுத்துப்போய், ஊட்டிக்குச் சென்று தங்கிவிட்டார்.
மிக நீண்ட போராட்டத்துக்குப் பின், படம் ஒருவழியாக ரிலீஸ் ஆனது. இருந்தாலும், "தலைவா' படம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது. படித்தால் நல்ல வேலை கிடைக்காது. ஆனால் சினிமாவில் நடித்தால் ஆள நாடே கிடைத்து விடும்
தற்போது, அவர் நடித்துக் கொண்டிருக்கும், "ஜில்லா' படம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவர் மீண்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறார். தன், "விஜய் ரசிகர் மக்கள் நல நற்பணி மன்றத்தை' மீண்டும் வேகப்படுத்தி, அரசியல் களத்தில், பரபரப்பாக செயல்பட வைப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியிருக்கிறார், "ஜில்லா' பட ஷூட்டிங், சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது. அப்போது தனக்கு மிகவும் நம்பகமான சில மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும், அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து, விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, "தலைவா படம், கேரளாவில் ஓரளவுக்கு வெற்றியடைந்தது. ஆனால், தமிழகத்தில் படம், படு தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று நடிகர் விஜய் கேட்டார். அதற்கு மாவட்டச் செயலர்கள் பலரும், பல விதமான கருத்துக்களைக் கூறினர். ஒரு சிலர், உருப்படியாகவும் நல்லவிதமாகவும் சில கருத்துக்களைக் கூறினர்.


அவர்கள் கூறியதாவது:

உங்களுக்கு, மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது. உங்கள் பலத்தை நீங்களே உணருவதில்லை. அப்படித்தான், "தலைவா' படம் ரிலீசுக்கு, அரசு தரப்பில் மறைமுகமாக தடை ஏற்பட்டதும், நீங்கள் அரசுக்கு சரண்டர் ஆகி விட்டீர்கள். முதல்வரை கெஞ்சி, வாழ்த்தி அறிக்கை கொடுத்தீர்கள். இதை உங்களுடைய ரசிகர்களும், மக்களும் ரசிக்கவில்லை. படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, உங்கள் இமேஜை குறைத்துக் கொண்டது தவறு. நடிகர்கள், கமல், ரஜினி போல, நீங்கள தைரியமாக அரசியல் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், நடிகர் விஜய் பேசியதாகக் கூறப்படுவதாவது: வரும் லோக்சபா தேர்தலிலேயே, நாம் யார் என்பதை, சிலருக்கு உணர்த்தியாக வேண்டும். அதனால் இப்போதிலிருந்தே, நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தலுக்குத் தயாராகுங்கள். கட்டாயம், 2016, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தனிக்கடசியை ஆரம்பித்து விடலாம். அதற்கு தேவையான எல்லா விஷயங்களையும், தொடர்ச்சியாக நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக