திங்கள், 14 அக்டோபர், 2013

குஜராத் போலி என்கவுண்டர் அமித் ஷாவிடம் சி பி ஐ விசாரணை

கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கடந்த 2004ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் தீவிரவாதிகள் ஜாவித் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகியோரை போலீஸôர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 9 ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "போலி என்கவுன்ட்டரில் மத்திய உளவுத் துறை (ஐ.பி.) இயக்குநர் ராஜேந்திரகுமாருக்கும் தொடர்பு உள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் தெரிந்தே போலி என்கவுன்ட்டர் நடந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், காவல்துறை இயக்குநர் வன்சாரா உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வன்சாரா கடந்த 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். வன்சாரா தனது ராஜிநாமா கடிதத்தில், "குஜராத் அரசின் வழிகாட்டுதல் மற்றும் கணகாணிப்பில்தான் போலி என்கவுன்ட்டர் நடந்தது' என்று குறிப்பிட்டார். அதில் அவர் முதல்வர் நரேந்திர மோடி மீதும் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பா அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சபர்மதி சிறையில் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, அமித் ஷாவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் மீது சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகிய போலி என்கவுன்ட்டர் வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளில் 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக