திங்கள், 14 அக்டோபர், 2013

வெளிநாடுவாழ் தமிழர் அமைச்சகம் கண்டிப்பாக துவங்கப்பட வேண்டும்! கேரளா போன்று தமிழகமும் செயல்படவேண்டும்

கோவை: கேரள மாநிலத்தில் இருப்பது போல், "வெளிநாடு வாழ் தமிழர் நல
அமைச்சகம்' தமிழகத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.
அமெரிக்கா,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பல தலைமுறையாக வசிக்கின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் மற்றும் குறைந்த கல்வித்தகுதி கொண்ட இளைஞர்கள் "பிட்டர்', "டர்னர்' உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். சர்வதேச நாடுகளில் வாழும் இந்தியர்கள், இனவெறி தாக்குதல், விபத்து, பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகள், குடும்ப தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும்போது, இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம், இந்தியாவிலுள்ள வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தினர் தேவையான உதவிகளை செய்து தருவர். எனினும் பெரிய அளவிலான பிரச்னைகளின்போது மட்டுமே அரசு சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நமது நாட்டிலிருந்து அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் வார, மாத, நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் வாழும் மலையாள மக்களின் நலனை காக்க உதவும் வகையில், அம்மாநில அரசு சார்பில், வெளிநாடு வாழ் கேரள மக்கள் நலப்பிரிவு"நோர்கா' கடந்த 1996 முதல் செயல்பட்டு வருகிறது. தவிர, வெளிநாடு வாழ் மலையாள மக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து, நேரடி களப்பணி மூலம்நடவடிக்கை மேற்கொள்ள "நோர்கா ரூட்ஸ்' என்ற பிரத்யேக அமைப்பு கடந்த 2002ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இவ்வமைப்புகளின் தலைவராக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர். திருவனந்தபுரத்தில், எட்டு தளங்களுடன் அமைக்கப்படும் பிரத்யேக கட்டடத்தில், விரைவில் "நோர்கா' மண்டல மையம் செயல்பட உள்ளது.
இதேபேல், "வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்' ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வெளிநாடு வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

கோவை, போத்தனூரை சேர்ந்த சவுதிஅரேபியா வாழ் தமிழர் அப்துல் சத்தார் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் கடுமையாக கெடுபிடிகள் காரணமாக,அமைப்புகள் துவக்கவோ, செயல்படவோ அனுமதிக்கப்படுவதில்லை. அங்குள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பெரிய அளவிலான பிரச்னைகளுக்கு மட்டுமே இந்திய அரசு வேகமாகநடவடிக்கை மேற்கொள்கிறது. சிறிய அளவிலான பிரச்னைகள் குறித்த தகவல்கள் சரிவர அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. நான் உள்ளிட்ட சவுதியில் வசிக்கும் சுரேஷ், பாரதி, வெங்கடேஷ் உள்ளிட்டோர், சவுதிஅரேபியாவில் வாழும் தமிழர்களின் பிரச்னைகள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னார்வ உள்ளத்துடன் ஈடுபட்டு வருகிறோம். எனவே, தமிழர்களின் நலன் காக்க, வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் துவக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அப்துல் சத்தார் தெரிவித்தார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக