திங்கள், 30 செப்டம்பர், 2013

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இன்னும் பல இடங்களில் உள்ளன !

பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு: வேலூர்–திருவண்ணாமலை கலெக்டர்கள் நடவடிக்கைதண்ணீருக்காக ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைத்து விட்டு அதனை பாதுகாப்பற்ற முறையில் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.இதனால் அந்த பகுதிகளில் விளையாடும் குழந்தைகள் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் அபாய நிலை ஏற்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்த தேவி என்ற சிறுமி நேற்று முன்தினம் பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் எதிரொலியாக வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கர், திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்கள், பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறுகள் இருப்பின் உடனடியாக அதனை மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்ளை கிணறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் நகராட்சி 1–வது வார்டு ஷெரீப்நகர் 2–வது தெருவில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு தற்போது பாதுகாப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் இருந்து வந்தது.
பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே ஆழ்துளை கிணறு இருப்பதாலும், அந்த பகுதியிலேயே சிறுவர்கள் விளையாடி வருவதாலும் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து குடியாத்தம் தாசில்தார் கஜேந்திரன், நகரமன்ற தலைவர் அமுதா, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் தரணி, வருவாய் துறை உதவியாளர்கள் சிவராஜ், குகநாதன், குமார், பழனி உள்ளிட்டோர் விரைந்து சென்று பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூடி போட்டு மூடினர்.
இதேபோல் மாவட்டத்தில் எங்காவது ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பற்ற முறையில் இருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக