திங்கள், 30 செப்டம்பர், 2013

திருவிழா வசூல் பணம் பிரிப்பதில் ஓட்டல் ஊழியர் வெட்டி கொலை 2 பேர் கைது

சென்னை:கோயில் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பது தொடர்பாக
ஏற்பட்ட மோதலில் நட்சத்திர ஓட்டல் ஊழியர் சரமாரி வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். ஆயிரம் விளக்கு பகுதியில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு ஆனந்த் தியேட்டர் பின்புறம் உள்ள ரங்கோன் தெருவை சேர்ந்தவர் வினோத் (36). அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமையல்காராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது வீட்டின் அருகே பிளாட்பாரத்தில் மாதா கோயில் உள்ளது. அப்பகுதி மக்களிடம் பணம் வசூல் செய்து, கோயிலில் விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. விழாவின்போது வினோத், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த செல்வின் (18), மார்ஷல் (22) மற்றும் வேறு சிலருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். போதை ஏறியதும் அவர்கள் பாட்டு பாடி ஆட்டம் போட்டுள்ளனர். விடிய விடிய கொண்டாட்டம் நடந்துள்ளது.அப்போது, கோயில் விழாவுக்கு பணம் வசூல் செய்ததில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், சண்டையை விலக்கிவிட்டு அவர்களை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில், நேற்றிரவு 10 மணி அளவில் வினோத், அண்ணா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வின், மார்ஷல் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்தது. திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதத்தால் வினோத்தை சரமாரியாக வெட்டினர். அலறித் துடித்த வினோத், தப்பியோட முயன்றார். ஆனால், அந்த கும்பல் அவரை தப்ப விடாமல் வெட்டிச் சாய்த்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த வினோத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வினோத், நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்ததும் ஆயிரம் விளக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி செல்வின், மார்ஷல் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். கோயில் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஆயிரம் விளக்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக