புதன், 18 செப்டம்பர், 2013

ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமாம் ! ஜெயாவின் கோரிக்கை

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் பவானி சிங் நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து கர்நாடக அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்துமாறும் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக அரசு, பவானி சிங்கை நீக்குவதாக முடிவெடுத்து அறிவித்தது. இதனால் 17-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பவானி சிங் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணா, இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இதனால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தற்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து விசாரிக்க வேண்டும். இதற்காக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும். விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் புதிய நீதிபதியை நியமித்தால் தீர்ப்பு வெளியாவது தாமதமாகும். வழக்கு நேர்மையாக நடக்க வாய்ப்பு இருக்காது. எனவே, புதிய நீதிபதியை கர்நாடக அரசு நியமிக்கக்கூடாது. புதிய நீதிபதியை நியமிக்க கர்நாடக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு வழக்கறிஞரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகக் கூடாது என்று கர்நாடக அரசு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக வழக்கில் கர்நாடக அரசு குறுக்கிடுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக