புதன், 18 செப்டம்பர், 2013

சொத்துகுவிப்பு வழக்கில் திமுக கிடுக்கி பிடி போட்டு பவானி சிங்கை நீக்கியதை ஜெயலலிதா லேசில் மறக்க மாட்டார் !

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்குவது தொடர்பாக அரசு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடகா அரசு, அவரை வழக்கில் இருந்து ஒரேயடியாக நீக்கியுள்ளது.
இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சார்பாக நடந்து கொள்வார் என தி.மு.க. குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில், பவானி சிங்கை நீக்கக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
1991-96-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு பல்வேறு வாய்தாக்கள் மற்றும் இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டால், நிலைமை கவலைக்கிடம் ஆகும் என்பதே, முதல்வர் ஜெயலலிதா தரப்பின் நம்பிக்கை.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், பவானிசிங். அவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.
பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக கர்நாடக அரசு, அம்மாநிலத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய மாநில அரசு, ஆலோசனையின் பின் பவானி சிங்கை ஒரேயடியாக நீக்கியே விட்டது. இதனால், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இன்னமும் தொடர்கிறது
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக