புதன், 28 ஆகஸ்ட், 2013

வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் பயப்படவேண்டியதில்லை ! உங்களை பாதுகாக்கும் சட்டம் ஒருமனதாக ராஜ்யசாபாவில்

  புதுடில்லி:குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, நெருக்கடி கொடுக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை, பயனற்றதாக்கும் சட்ட திருத்த மசோதா, நேற்று, ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஊழல் கறைபடிந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் அளித்தது. அதில், "குற்ற வழக்குகளில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெற்றால், அவர்களின் பதவியை பறிக்க வேண்டும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது இதனால், அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. இதற்கு முட்டுக் கட்டை போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசும், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.
இதன்படி, "குற்ற வழக்குகளில், தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, 90 நாட்களுக்குள், மேல் முறையீட்டு மனு அல்லது மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தால், அவர்களின் பதவியை பறிக்க முடியாது' என, திருத்தம் செய்யப்பட்டது.இதுதவிர, மேலும் ஒரு திருத்தமும் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதம், நேற்று நடந்தது.

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், அருண் ஜெட்லி பேசுகையில், ""சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம், ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை முடிவு செய்யும் அதிகாரம், போலீசாரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது, ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற, அனைத்து கட்சி உறுப்பினர்களும், சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
விவாதத்துக்கு பதில் அளித்து, மத்திய சட்ட அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது: அரசியல்வாதிகள், பார்லிமென்ட், தேர்தல் கமிஷன் ஆகியவற்றுக்கு, பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். தேர்தலில் போட்டியிடும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளிக்க வேண்டிய கடமை, அரசியல்வாதிகளுக்கு உள்ளது.குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு, யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், அனைத்து அரசியல்வாதிகளையும், குற்றவாளிகளாக பார்க்க கூடாது.இவ்வாறு, கபில் சிபல் பேசினார்.

இதன்பின், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. "இந்த மசோதா, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால், ஜூலை மாதம், 10ம் தேதியிலிருந்து, முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக