புதன், 28 ஆகஸ்ட், 2013

கலைஞர்: பசியை போக்கும் மணிமேகலையாக சோனியா திகழ்கிறார்

சென்னை : "பசியை போக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை
நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில், திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின், 115வது பிறந்த தின விழா சென்னையில் நேற்று நடந்தது. வழுவூர் ரவி வரவேற்றார். நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, நாதஸ்வர கலைஞர் கீவளுர் கணேசன், தவில் கலைஞர் இலுப்பூர் நல்லகுமார் ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பேசியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சுதந்திரம் பெற்றது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
உணவு உரிமை கிடைத்துள்ளது. சோனியா, தன் மனதில் தோன்றிய பெரிய காரியத்தை செய்து முடித்துள்ளார்.நாடு முழுவதும், பலர், ஒருவேளை உணவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் பசியை போக்க வேண்டுமானால், எத்தனையோ மணிமேகலை தேவைப்படுவர். அத்தனை மணிமேகலைகளையும் சேர்த்து ஒரு மணிமேகலையாக சோனியா, இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறந்த போது, என் கை, கால்கள் நடுங்கி, பேச முடியாத நிலைக்கு திக்குமுக்கு அடைந்தேன். அதேபோன்ற உணர்வு தான் சோனியாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, என் நெஞ்சு பதைபதைத்தது. அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என நினைத்தேன். உடல் நலம் பெற்று விட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

சோனியாவுக்கு கருணாநிதி பாராட்டு:

""உணவு பாதுகாப்பு மசோதாவை, கொண்டு வர காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:நாடு சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகளுக்கு பின், உணவு உரிமைக்கான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை, எளியோர் மகிழ்ச்சி பெருக்கோடு, இதை வரவேற்பர் என, நம்புகிறேன்.தி.மு.க., சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும், கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது.இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய, ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கிறேன்.இதுபோன்ற பிரச்னைகளில், வறட்டு பிடிவாதம் எதுவும் காட்டாமல், நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். முக்கிய எதிர்க்கட்சிகள், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விட்டு, அதே நேரத்தில் மசோதாவை வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாகச் செயல்படலாம்; ஆனால், எதிரிக் கட்சியாக இருப்பது நல்லது அல்ல.

இது தான் பார்லிமென்டில் நடந்த விவாதத்திலிருந்து, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.சுமூகமான முறையில், இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், தி.மு.க., தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அதற்கு ஓட்டு அளித்தவர்களுக்கும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த சோனியாவுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக