வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ரூபாய் மதிப்பு கடும் சரிவு ! பிரதமர் பதவி விலக எதிர்கட்சிகள் கோரிக்கை !

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை ரூ. 68.80 ஆகச் சரிந்ததைத் தொடர்ந்து இக்கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: "நிதி நிலைமையைச் சீராக்குவதற்கான வழிகளும், யோசனைகளும் தெரியாமல் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தவிக்கின்றனர். இந்த நிலைக்கு பிரதமரும், அவரது அமைச்சர்களுமே காரணம். இறக்குமதி, ஏற்றுமதிக் கொள்கைகளை சரியான முறையில் வகுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இவர்களின் அலட்சியத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையும், தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆளுகைத் திறன் இல்லாவிட்டால் அதை ஒப்புக் கொண்டு பதவியில் இருந்து மன்மோகனும், சிதம்பரமும் விலக வேண்டும்' என்றார் பிரகாஷ் ஜவடேகர்.
யஷ்வந்த் சின்ஹா:÷பாஜக முத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த சின்ஹா கூறியது: ""பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் மத்திய அரசு உள்ளது. பங்குச் சந்தையும், ரூபாய் மதிப்பும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு பதவியிலிருந்து விலகி, தேர்தலைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும்'' என்றார்.

இதே கருத்தை பாஜக தலைவர்கள் வெங்கய்ய நாயுடு, ஷாநவாஸ் ஹுசேன் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியது: ""மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இந்த ஆட்சியின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதே இதற்குக் காரணம். நெருக்கடியான இச்சூழ்நிலையில், அரசு செலவினங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது'' என்றார்.
மார்க்சிஸ்ட்:÷மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியது:÷1991-ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி நிலைமை போன்று இப்போது இல்லை என்று பிரதமர் கூறினாலும், நடக்கும் நிகழ்வு அதைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. பணக்காரர்கள் தங்கம், வீட்டு மனைகளில் முதலீடு செய்கிறார்களே தவிர, கட்டமைப்புத் திட்டங்களில் ஆர்வம் காட்டுவதில்லை'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்:÷இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் து. ராஜா கூறியது:÷""ரூபாய் மதிப்பு சரிவால் தொழில் துறை, சேவைத் துறையின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரிக்கும். இந்த அளவுக்கு நிலைமை மோசமாக தவறான நிதி மேலாண்மையே காரணம். இதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பாகும். பொருளாதாரம் பற்றி தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்துடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இருக்கிறார்'' என்றார்.
அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறியது:÷""நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு நிலைமையைச் சீராக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை'' என்றார்.
ஐக்கிய ஜனதா தளம்: ஜக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கூறியது:÷""நாட்டை பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிட்டு மத்திய அரசு கவலைப்படாமல் உள்ளது. நிலைமையைச் சரி செய்ய அன்னிய முதலீடுகள் வரும் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், நிதி எங்கிருந்து வரும் என்பதை அவர் விளக்கவில்லை. இவ்வளவு மோசமான பொருளாதார நிலைமையை நாடு இதுவரை சந்தித்தது இல்லை'' என்றார்.
காங்கிரஸ் கருத்து:÷எதிர்க்கட்சிகள் கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ அளித்த பதில்:÷""பாஜக பொறுமை இழந்துவிட்டது. அதனால்தான், எந்த விவகாரமாக இருந்தாலும், அதற்கு பொறுப்பேற்று பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சி கோரி வருகிறது'' என்றார்.

ரூ. 68.80ஆக வீழ்ச்சி
மும்பை, ஆக. 28: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை ரூ.68.80ஆக மேலும் கடுமையாகச் சரிந்தது. செவ்வாய்க்கிழமை டாலரின் மதிப்பு ரூ.66.24 ஆக இருந்தது. சமீப காலத்தில் இல்லாத அளவாக ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 256 பைசா வீழ்ச்சியடைந்தது.
வீழ்ச்சிக்குக் காரணம்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும், வங்கிகளுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் டாலரின் தேவை அதிகரித்ததும் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைய முக்கியக் காரணமாக அமைந்தன.
அன்னியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை டாலரின் மதிப்பு ரூ.66.24 ஆக இருந்தது. புதன்கிழமை காலை தொடக்கத்தில் ரூ.66.90ஆகச் சரிந்தது. பின்னர் தொடர்ந்து சரிவைச் சந்தித்து ரூ.68.75 ஆனது.
ரூபாயின் மதிப்பு சரிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, பிற்பகலில் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது. எனினும், மாலையில் மீண்டும் சரிவுக்கு உள்ளாகி ரூ.68.80ஆக வீழ்ந்தது. சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூபாயின் மதிப்பு இப்போது ஒரே நாளில் 256 பைசா சரிந்துள்ளது. இது 3.86 சதவீத வீழ்ச்சியாகும்.
கடந்த 3 நாள்களில் ரூபாயின் மதிப்பு ஒட்டுமொத்தமாக 560 பைசா சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 840 பைசா குறைந்துள்ளது. நிகழாண்டில் மட்டும் ரூபாயின் ஒட்டுமொத்த வீழ்ச்சி 1,381 பைசாவாகும். இது 25 சதவீதத்துக்கும் கீழான சரிவு   dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக