திங்கள், 29 ஜூலை, 2013

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் பஸ் TATA தயாரித்துள்ளது


வாகன உற்பத்தியில் நாட்டின் முதன்மை நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் பஸ்சை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன்(இஸ்ரோ) இணைந்து தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மஹேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் சோதனை மையத்தில் இந்த புதிய பஸ் குறித்த செயல்விளக்கம் நேற்று நடைபெற்றது. இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் மத்தியில் இந்த புதிய பஸ் வெற்றிகரமாக சோதித்து காண்பிக்கப்பட்டது. இது நம் நாட்டு போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கு அடிகோலியுள்ளது.
பஸ்சுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் அமைப்பை இஸ்ரோ வடிவமைத்து வழங்கியுள்ளது. பஸ் தயாரிப்பு பணியை டாடா மோட்டார்ஸ் ஏற்றது
ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பில் இஸ்ரோ நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்த கிரையோஜெனிக் எஞ்சினில் திரவ நிலை ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருளை தயாரித்து, மிகுந்த பாதுகாப்போடு கையாளும் முறையில் கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோ நிபுணத்துவம் பெற்றுள்ளது.
ஆனால், கிரையோஜெனிக் எஞ்சினில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் தொழில்நுட்பதிற்கும், இந்த பஸ்சுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் அமைப்புக்கும் முற்றிலும் வேறுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பஸ்சின் கூரையில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் அடங்கிய 8 எரிபொருள் பாட்டில்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஹைட்ரஜனிலிருந்து மின் உற்பத்தி செய்து, அதிலிருந்து எலக்ட்ரிக் மோட்டார்களை வைத்து பஸ் இயங்கும். டீசல் நிரப்புவது போன்றே பஸ்சுக்கு தினசரி இரவு இந்த ஹைட்ரஜன் எரிபொருள் பாட்டில்களை மாற்றிக்கொள்ள முடியும்.
tamil.drivespark.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக