புதன், 31 ஜூலை, 2013

கேரளா திடீர் ஒப்புதல்! முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதுதான்..

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதுதான்.. எங்களுக்கு கவலை எல்லாம் பாதுகாப்பு பற்றிதான் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திடீரென தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதே- கேரளா திடீர் ஒப்புதல்! இந்த இறுதி விசாரணையில் தமிழக அரசு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கேரள அரசு தரப்பு வாதம் நேற்று தொடங்கியது. கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமனதுதான் என்று திடீரென ஒப்புக் கொண்டார். 1979ஆம் ஆண்டு அணையில் விரிசல் ஏற்பட்டதால் நீர் தேக்கம் 136 அடியாக குறைக்கப்பட்டது என்று கூறிய அவர், அணையில் நீர் எவ்வளவு தேக்க வேண்டும் என்ற அதிகாரம் கேரளாவுக்கே உள்ளது என்றார். அணையில் நீரை தேக்குவது தொடர்பான சட்டத்தை 2003ல் கேரளா கொண்டு வந்தது என்றும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி தான் கேரளாவுக்கு கவலை என்றும் அவர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதற்கு என்ன காரணம் என்று கேட்டனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் 15 நாளில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக