புதன், 31 ஜூலை, 2013

Delhi Gang rape பாலியல் கொடுமை: சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் தடை

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பரில், டெல்லியில், ஓடும் பேருந்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மீதான வழக்கில் தீர்ப்பு ஆகஸ்ட் 5-ம் தேதி வழங்கப்படும் என்று டெல்லி சிறார் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனிடையே சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நேரத்தில் சிறார் குற்றவாளிக்கு எப்படி தீர்ப்பளிக்க முடியும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவை சிறார் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர் சுப்பிரமணியசாமிக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக