செவ்வாய், 30 ஜூலை, 2013

ஆந்திராவில் துணை ராணுவம் குவிப்பு ! இன்று தனி மாநில அறிவிப்பு ?

டெல்லி/ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம்
அமைப்பதற்கான அறிவிப்பு இன்று இரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது ஆந்திராவைப் பிரிக்க முடிவு செய்துள்ளது. அத்துடன் ராயலசீமா பகுதியில் 2 மாவட்டங்களையும் இணைத்து ராயல தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்க தீர்மானித்துவிட்டது. பரபர டெல்லி... டெல்லியில் இன்று மாலை நடைபெறும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இப்புதிய மாநிலத்துக்கான ஒப்புதல் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து பெறப்படும். தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதிய மாநில உருவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சிக்கல் ஏதும் இருக்காது என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா அல்லது ராயல தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தாலும் வன்முறைகள் வெடிப்பது உறுதியாகி உள்ளது. தனித் தெலுங்கானா என்ற அறிவிப்பைத்தான் ஏற்போமே தவிர ராயல தெலுங்கானாவை ஏற்க முடியாது என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் தெலுங்கானா பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தில் சீமாந்த்ரா ஆந்திராவைப் பிரிக்க காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது என்பதால் நேற்று முதலே சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அப்பகுதிகளில் காங்கிரஸைஸச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு வெளியே நேற்று தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாகப்பட்டினத்தில் டி.புரந்தேஸ்வரி , ஏலூருவில் கே.எஸ்.ராவ், விஜயவாடாவில் எல்.ராஜகோபால் ஆகியோரின் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. துணை ராணுவம் குவிப்பு ஆந்திராவில் வன்முறை வெடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் இதனை எதிர்கொள்ள துணை ராணுவப் படையைச் சேர்ந்த 1,200 பேர் ஆந்திராவில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 1,000 பேரை கொண்ட துணை ராணுவத்தை அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் கர்நாடகா ஆயுதப் படை போலீசார், தமிழக ஆயுதப் படை போலீசார் ஆகியோரும் வன்முறை வெடிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த ஆந்திராவுமே உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக