திங்கள், 22 ஜூலை, 2013

விரைவில் நிதி நிறுவனங்களின், கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை

புதுடில்லி:""நிதி நிறுவனங்களின், கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; அத்தகைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும்,'' என, மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சச்சின் பைலட் கூறினார்.ஏமாற்றும் கும்பல்கள் அதிகரிப்பு:கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் பணத்தை திரட்டி, ஏமாற்றும் கும்பல்கள், நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் சட்டத்தின் பலவீனமான அம்சங்களை பயன்படுத்தி, நிதி திரட்டி, பொதுமக்களின் பணத்தை ஏமாற்றுவோர், அதிகரித்த வண்ணமாக உள்ளனர்.மேற்கு வங்கத்தில், "சாரதா சிட்பண்ட்' என்ற தனியார் நிதி நிறுவனம், பல ஆயிரம் முதலீட்டாளர்களின், பல ஆயிரம் கோடி ரூபாயை, "ஸ்வாகா' செய்து விட்டது. இது போல், நாட்டின் பல பகுதிகளிலும் மோசடி நிதி நிறுவனங்கள் பெருகிவிட்டன.அத்தகைய நிதி நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும், "டிவி'களில், கவர்ச்சிகரமான வகையில் விளம்பரம் செய்கின்றன. அவற்றை உண்மை என நம்பும் பொதுமக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதை தடுக்க, வலுவான சட்டங்கள் அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


விரைவில் கட்டுப்பாடு:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இளம் மத்திய அமைச்சர்களில் ஒருவரான, சச்சின் பைலட், இதுகுறித்து கூறியதாவது:சிகரெட், மதுபானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்கள், செய்தித்தாள், "டிவி' மற்றும் ரேடியோவில் வருவதில்லை. அதேபோல், இன்டர்நெட்டிலும் சில பொருட்களுக்கும், சில வகை சேவைகளுக்கும் கட்டுப்பாடு உள்ளது.அதேபோல், அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களுக்கும், அந்த நிறுவனங்கள் வெளியிடும், கவர்ச்சிகர விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வர உள்ளோம்."உங்கள் பணம், 5 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்; 10 மாதங்களில் மும்மடங்காகி விடும்' என, விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், இனிமேல் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். இது போன்ற விளம்பரங்களால், பொதுமக்களின் பணத்தை, சட்டவிரோதமாக சுரண்டும் பண முதலைகளின் கொட்டம் அடக்கப்படும்.பிரின்ட் மீடியா, எலக்ட்ரானிக் மீடியா என, எத்தகைய ஊடகத்திலும், அத்தகைய விளம்பரங்கள் வராமல் பார்த்துக் கொள்ள, சட்டங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் உண்மை என, பொதுமக்கள் கருதுவது போல், ஊடகங்களில் வெளிவரும் கவர்ச்சிகரமான நிதி அறிவிப்புகளையும் நம்பி ஏமாந்து விடுகின்றனர். அவற்றைத் தடுக்க, புதிய வழிமுறைகள் பின்பற்றப்படும்.இதற்காக, மத்திய நிதித் துறை, கம்பெனி விவகாரங்கள் துறை, பிற இலாகாக்களின் முக்கிய துறைகள் என, சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் இணைந்து, புதிய விதிமுறைகள் வகுத்து, கவர்ச்சி அறிவிப்பு வெளியிடும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவோம்.

"செபி' அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்:

பங்குச் சந்தை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும், "செபி' அமைப்புக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஆதாரங்கள் கொண்ட நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும், "செபி'க்கு அனுமதி அளித்துள்ளோம்.மோசடி நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகளின் உதவி நாடப்படும்.

மோடி தவறான பிரசாரம்:

"ஒளிரும் குஜராத்' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி மேற்கொள்ளும் பிரசாரம், வியாபார தந்திரம். அவர், குஜராத் முதல்வராக வரும் முன்னரே, குஜராத் மாநிலம், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், சிறப்பான இடத்தில் இருந்தது.அந்த வளர்ச்சியை, தான் ஏற்படுத்தியது போன்ற மாயையை, மோடி ஏற்படுத்துகிறார். 40, 50 ஆண்டுகளுக்கு முன்பே, அனைத்து துறைகளிலும் குஜராத் முன்னேற்றம் அடைந்த மாநிலம் தான். அந்த மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர், அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளில் பெரிய அளவில் உள்ளனர்.மேலும், குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள், வேண்டுமென்றே அதிகப்படியாக காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காக, குஜராத்தில் வளர்ச்சியே இல்லை என, நான் கூற மாட்டேன். மாறாக, குஜராத் மாநில வளர்ச்சி, சற்று அதிகப்படியாக காண்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, சச்சின் பைலட் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக