சென்னை: ரூ 20 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள நடிகை லீனா, தான்
அப்பாவி என்றும், பெரிய இயக்குநர் என்று கூறி தன்னை சுகாஷ் ஏமாற்றிவிட்டான்
என்றும் கூறியுள்ளார்.
அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரைச்
சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்குகளில்
பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த இவன் தனது 19 வயதில் மோசடியை ஆரம்பித்தான். கடந்த 6
ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல
கோடியை மோசடி செய்துள்ளான்.
சில மாதங்களுக்கு முன்னர் அம்பத்தூர் கனரா வங்கியின் மண்டல மேலாளர் புகார்
அளித்த பின்னர்தான் சுகாஷ், சென்னையில் பதுங்கி இருந்து மோசடி செய்வது
அம்பலமானது. சுகாஷை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார்
களமிறங்கினர். இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது
மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தராதேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார்
ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
அப்போது சுகாஷ் தனது காதலியும் நடிகையுமான லீனாவின் டெல்லி பண்ணை வீட்டில்
பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார், நடிகை லீனாவை சுற்றி வளைத்து
கைது செய்தனர். ஆனால் சுகாஷ் சந்திரசேகர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி
ஓடிவிட்டான்.
லீனாவை ரயிலில் சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி
புழல் சிறையில் அடைத்தனர்.
சுகாஷ் பற்றி லீனாவிடம் கேட்டபோது, "அவனை பெரிய இயக்குநர், சினிமாவில்
செல்வாக்கு மிக்கவன் என்று நம்பி நான் ஏமாந்து போனேன். என்னிடம்
அறிமுகமானபோது, பெரிய டைரக்டர் என்று கூறினான். முன்னணி நடிகையாக்குவதாக
கூறினான். அதனால் அவன் காதல் வலையில் நான் விழுந்துவிட்டேன்," என்று
போலீசிடம் தெரிவித்துள்ளார்.
எனவே லீனாவை வைத்தே தலைமறைவாக உள்ள சுகாஷை பிடிக்க போலீசார்
திட்டமிட்டுள்ளனர்.
சுகாஷைப் பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை
தீவிரப்படுத்தியுள்ளனர். சுகாஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல்
தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களும்
உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பெங்களூரில் மட்டும் சுகாஷ் மீது 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில்
உள்ளன. தமிழகத்திலும் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன.
சுகாஷ் பற்றி மேலும் தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை போலீசார் காவலில்
எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை)
நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக