புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆந்திர
முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகனின் ரூ.34 கோடி
வங்கி டெபாசிட்டை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. ஆந்திர முன்னாள்
முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீது சிபிஐ
மற்றும் அமலாக்கப்பிரிவினர் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த
வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். கடந்த
ஒரு ஆண்டாக அவர் ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன்
மனுக்களை சுப்ரீம் கோர்ட் இரண்டு முறை நிராகரித்து விட்டது.சொத்து
குவிப்பு புகாரில் சிக்கி உள்ள ஜெகனுக்கு ஐதராபாத் ஒரியன்டல் பேங்க் ஆப்
காமர்ஸ் ஜுப்ளி ஹில் கிளையில் ரூ.34.66 கோடி டெபாசிட் உள்ளது. ஜெகனுக்கு
சொந்தமான ஜெகதி பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தின் பெயரில் இந்த டெபாசிட்
உள்ளது. இதனை அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது. இதற்கு முன்பு ரு.51
கோடி, ரூ.71 கோடி மற்றும் ரூ.149 கோடி என மூன்று முறை ஜெகனின் சொத்துக்களை
முடக்க அமலாக்கப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. தற்போது ரூ.34 கோடி முடக்கத்தை
சேர்த்து இதுவரை மொத்தமாக ரூ.300 கோடிக்கும் அதிகமான ஜெகன் சொத்துக்கள்
முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக