ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 3
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் 300 ஆண்டு வரலாறு இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. 18-ம்நூற்றாண்டில் ஆசியாவுடனான இங்கிலாந்தின் வர்த்தகத்திற்கு ஏகபோக உரிமையை பெற்று இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகர்கள் கிரிக்கெட்டையும் தம்முடன் கொண்டு வந்தனர். 1721-ம் ஆண்டு கட்ச் கடற்கரையில் (பரோடா சமஸ்தானம்) வந்து இறங்கிய ஆங்கிலேய மாலுமிகள் இந்திய மண்ணில் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடினர். அடுத்த 3 நூற்றாண்டுகள் இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை கொடூரமாக அழித்து தமது வர்த்தக சுரண்டலை நடத்துவதற்கு முன்பான போர் நடனமாக வேண்டுமானால் அதை வைத்துக் கொள்ளலாம்.
18-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக விரிவாக்கமும், அது நடத்திய போர்களும் இந்தியா முழுவதும் நிலப்பரப்புகளை பொசுக்கி எரித்தன. இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்விக்கும் விளைநிலமாகவும், அவற்றின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையாகவும் அடித்து, வளைத்து இந்திய மக்களை கடுமையாக சுரண்டிய ஆங்கில இராணுவ அதிகாரிகள் அணிக்கும், ஐரோப்பிய வர்த்தகர்கள் அணிக்கும் இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி 1751-ம் ஆண்டு நடந்தது. 1848-ல் காலனிய ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்த பார்சி வணிகர்கள் பார்சி கிரிக்கெட் அணியை உருவாக்கினார்கள். (19-ம் நூற்றாண்டில் சீனாவுக்கு அபின் ஏற்றுமதி செய்து வந்த டாடா குடும்பத்தினர் பார்சி இனத்தவர்தான்).
பார்சி வர்த்தகர்களைத் தொடர்ந்து காலனிய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாகி விட்டிருந்த இந்திய சமஸ்தானங்களின் மகாராஜாக்களும், ஆங்கிலக் கல்வி பயின்று ஆங்கிலேயருக்கு தொண்டூழியம் செய்த அதிகார வர்க்க இந்தியர்களும் தமது எஜமானர்களின் விளையாட்டத்தில் ஆர்வம் காட்டினர். அவர்களது சார்பில் 1907-ல் இந்துக்களின் அணியும், 1912-ல் முஸ்லீம்களின் அணியும் ஏற்படுத்தப்பட்டன. நவநகர் இளவரசர் ரஞ்சித் சிங், அவரது மருமகன் துலீப் சிங், பாட்டியாலா மகாராஜா, விழியநகரத்தின் மகாராஜகுமார், லிம்டியின் இளவரசர் கியான்சிங்ஜி, போர்பந்தர் மகாராஜா போன்றவர்களும், கர்னல் சி கே நாயுடு போன்ற இராணுவ அதிகாரிகளும் கிரிக்கெட் மூலம் தமது எஜமானர்களான ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அபிமானத்தை வென்று மக்களை சுரண்டுவதற்கான தமது அதிகாரங்களை உறுதி செய்து கொண்டார்கள். 1930-களில் ஆங்கிலோ இந்திய மற்றும் கிருத்துவ இந்தியர்களின் அணியும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டது.
லண்டனிலிருந்து செயல்பட்ட ஏகாதிபத்திய கிரிக்கெட் குழுமத்தில் (அப்போதைய ஐசிசி) சேருவதற்கு அகில இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்து, பஞ்சாப், பாட்டியாலா, ஐக்கிய மாகாணம், ராஜ்புதனா, ஆள்வார், போபால், பரோடா, கத்தியவார், மத்திய இந்தியா பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் ஒன்று கூடி 1928-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏற்படுத்தினர்.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் காங்கிரசிடமும், பாகிஸ்தானில் முஸ்லீம் லீகிடமும் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்த பல நிர்வாக, அரசியல் அமைப்புகள், சட்ட திட்டங்களை போல ஆங்கிலேய அதிகாரிகளாலும், ஆங்கிலேய இராணுவத்தாலும், இந்திய மகாராஜாக்களாலும் உருவாக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டை நிர்வாகித்து வருகிறது.
மாநில/பிராந்திய கிரிக்கெட் சங்கங்கள் கொடுக்கும் சந்தா தொகை மூலம் தனது நிர்வாக செலவுகளையும், இந்திய தேசிய அணிக்கான செலவுகளையும் வாரியம் பார்த்துக் கொண்டது. டெஸ்ட் போட்டிகள் நடக்கும் போது மைதானத்தில் டிக்கெட் விற்பனை மூலம் மாநில சங்கங்களுக்கு வருமானம் கிடைத்தது. கிரிக்கெட் வீரர்களுக்கு ரயில்வே, காவல் துறை, துணை இராணுவப் படை, அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் அப்போது நிலவிய பொருளாதாரச் சூழலில், தனியார் முதலாளிகள் அரசு உரிமங்கள் பெறுவதிலும், கான்டிராக்டுகள் எடுப்பதிலும் கவனம் செலுத்தினர். கௌரவ பதவியான கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை முன்னாள் ஆட்டக்காரர்கள், செல்வாக்கு மங்கி வரும் மகாராஜாக்கள், வயதான தொழிலதிபர்கள், ஓய்வு நேரம் இருக்கும் அரசியல்வாதிகள் ஒரு பொழுதுபோக்காக ஏற்று நடத்தி வந்தார்கள்.
1970-களில் ஒரு நாள் கிரிக்கெட் பிரபலமடைய ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் கேரி பேக்கர் என்ற ஊடக தொழிலதிபர் அதிகார பூர்வ கிரிக்கெட் வாரியங்களை புறக்கணித்து, உலகெங்கிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களை வரவழைத்து உலகப் போட்டித் தொடர் என்ற பெயரில் வண்ண உடைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளக்கொளியில் ஆட்டம் என்று ஒரு கொண்டாட்ட நிகழ்வை நடத்திக் காட்டி கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தும் வலிமையை நிரூபித்துக் காட்டினார்.
1980-களில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழில்நுட்பம் வளர்ந்து இந்தியா முழுவதும் பரவலானது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை முக்கியமான, கவர்ச்சியான சந்தையாக திறந்து விடப்படும் பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. கிரிக்கெட், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான விளையாட்டாக கச்சிதமாக பொருந்தியது. பங்களிப்பை விட பார்த்து மகிழ்வதற்கான வடிவத்தில், கோடிக்கணக்கான நுகர்வோரை ஒரே நேரத்தில் சென்றடைவதற்கான ஆதர்ச மேடையாக உருவெடுத்தது. இந்தியாவில் கிரிக்கெட் பெருவெடிப்பு நிகழ்வதற்கான அனைத்து நிபந்தனைகளும் நிறைவேறிக் கொண்டிருந்தன.
வங்காளத்தைச் சேர்ந்த டால்மியா தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா 1979-ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலடி எடுத்து வைத்தார். அவர் பொருளாளராக பொறுப்பேற்ற 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் உலகக் கோப்பை (8 நாடுகள்தான் விளையாடினாலும் அது உலகக் கோப்பைதான்)யில் இந்தியா வெற்றி பெற்றது. 1987-ல் உலகக் கோப்பை போட்டியை இந்தியா-பாகிஸ்தானில் கூட்டாக நடத்தும் உரிமையை வென்றது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்த போட்டிகளுக்கான புரவலர் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் தலைமை பூசாரியான அம்பானியின் ரிலையன்ஸ்.
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமடைய ஆரம்பித்தது. திறமையான, இளம் கிரிக்கெட் வீரர்கள் தேசிய ஹீரோக்களாக உருவாக்கப்பட்டனர். அவர்களை தத்து எடுத்துக் கொண்ட பெருநிறுவனங்கள் அவர்களது பெயரை தொழில்முறையில் வளர்த்தெடுத்து ரசிகர்களின் மனதில் வழிபடும் விக்கிரகங்களாக பதிய வைத்தன. 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடந்த போது மும்பையில் சச்சின் டெண்டுல்கர், கர்நாடகாவில் ராகுல் டிராவிட், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி போன்ற விக்கிரக வீரர்கள் அந்தந்த நகரத்துக்கு ஏலம் இல்லாமல் ஒதுக்கப்பட்டார்கள். மற்ற வீரர்களுக்கான அதிகபட்ச ஏலத் தொகையை விட 15 சதவீதம் அதிக பணம் அவர்களுக்கு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகள் தேச வெறி, போர் வெறியுடன் கலந்து கிரிக்கெட் போட்டிகளை ஒரு மத வழிபாட்டுக்கு நிகராக வளர்ப்பதற்கு உதவின.
இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர ஆதரவில் இந்திய கிரிக்கெட்டுக்கு பல பாட்டில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. அதன் மூலம் வளர்த்துக் கொண்ட புஜ (பண) பலத்தைக் கொண்டு 1996-ம் ஆண்டு அது வரை ஆங்கில முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பன்னாட்டு கிரிக்கெட் கழகத்தின் (இப்போதைய ஐசிசி) தலைமையையும் ஜக்மோகன் டால்மியா கைப்பற்றினார். இமய மலையில் புலிக்கொடியை நாட்டிய சோழனை போல லண்டனில் இந்திய முதலாளிகளின் கொடியை நாட்டினார் டால்மியா. ஆனாலும், அவர் குறுகிய நாட்டு விசுவாச உணர்வுகளால் கட்டுப்பட்டிருக்கவில்லை.
ஐசிசியின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சேம்பியன்ஸ் கோப்பை என்ற புதிய போட்டித் தொடரை பன்னாட்டு கிரிக்கெட் கழகத்தின் சொத்தாக உருவாக்கினார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தேசிய கிரிக்கெட் வாரியங்களிடமிருந்து கைப்பற்றி ஐசிசியின் பொறுப்பில் ஒப்படைத்தார். இதன் மூலம் இந்த போட்டிகளின் புரவலராக நீண்ட கால ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் வசதியை முதலாளிகளுக்கு ஏற்படுத்தினார்.
விளம்பரத் துறையில் ஐபிஎல், அல்லது இந்திய கிரிக்கெட் அல்லது ஒரு டெஸ்ட் போட்டித் தொடரை பிராப்பர்ட்டி அல்லது சொத்து என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இந்த சொத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது அதன் மதிப்பை தீர்மானிக்கிறது. கிரிக்கெட் வீரர்களை பிராண்டாக முன் நிறுத்துவது, திரைப்பட நடிகர்களை இணைத்துக் கொள்வது, புதுப் புது வடிவங்களை புகுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அந்த சொத்தின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். சூதாட்டம், பந்தயம் கட்டுதல், வேண்டுமென்றே மந்தமாக ஆடுதல் போன்றவை, இந்திய அணி அடிக்கடி தோற்றுப் போவது போன்றவை சந்தையில் சொத்தின் மதிப்பை குறைத்து விடும்.
பெருகி ஓடும் பண வெள்ளத்தில் தாமும் சில குவளைகள் மொண்டு குடிப்பதற்கு சில கிரிக்கெட் வீரர்களுக்கு வழி காட்டினார்கள் சூதாட்டத் தரகர்கள். அத்தகைய ஊழல் கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பை குறைத்து விடாமல் இருக்க சர்வதேச கிரிக்கெட் குழு ஊழல் தடுப்பு குழு, வீரர்களுக்கு எச்சரிக்கை என்று ரசிகர்களின் மற்றும் விளம்பரதார நிறுவனங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.
ஒரு நாள் போட்டி விதிகளில் பார்வையாளர் ஆர்வத்தையும், பரபரப்பையும் பராமரிக்கும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரபலமான தொலைக்காட்சி பார்வை நேரத்துக்கு ஏற்றபடி ஆட்ட நேரங்கள் திட்டமிடப்பட்டன. இந்திய அணியின் வெற்றி தோல்வியை சார்ந்திராமல் உத்தரவாதமான விளம்பர வாய்ப்புகள், இன்னும் அதிகமான விளம்பர வாய்ப்புகள், இந்தியச் சந்தையில் இன்னும் அதிகமான விரிவாக்கத்திற்கு முயலும் வர்த்தக முதலாளிகளுக்கு தேவைப்பட்டது. அதற்கு ஏற்றபடி கிரிக்கெட் என்ற சொத்தை (பிராப்பர்ட்டியை) மாற்றி அமைத்தால் இன்னும் அதிக விளம்பர வருமானம் கிரிக்கெட் வாரியத்துக்கு வரவிருந்தது.
அதிகரித்து வந்த கிரிக்கெட்டின் வணிக முக்கியத்துவம் கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றுவதற்கு முதலாளிகளுக்கிடையே கடும் போட்டியை உருவாக்கியது. ஸ்பிக் நிறுவனத்தின் ஏ சி முத்தையா, மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலை, விவசாய முதலாளியும் அரசியல்வாதியுமான சரத்பவார், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் முதலான பல இந்திய முதலாளிகள் போட்டியில் குதித்தனர்.
2005-ம் ஆண்டில் ஜக்மோகன் டால்மியாவின் பினாமியை தோற்கடித்து வாரியத் தலைவர் பதவியை சரத்பவார் கைப்பற்றியிருந்தார். 2007-ம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட டி-20 போட்டி வடிவத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு ஒரு திரைப்படம் போல 3 மணி நேர விளையாட்டு, பெண்களின் கவர்ச்சி ஆட்டம், விளையாட்டு வீரர்களின் ஆடைகள் என்று விளம்பர சாத்தியங்களை பல மடங்கு திறந்து விட்ட இந்தியன் பிரீமியர் லீக் லலித் மோடியால் உருவாக்கப்பட்டது.
இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்து வந்த பாதை.
1975-ல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 30 பிராந்திய/மாநில சங்கங்களின் கூட்டமைப்பாக செயல்படுகிறது. அந்த உறுப்பினர் சங்கங்கள் வாக்களித்து செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தலைவர் பதவியில் ஒருவர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டும்தான் இருக்க முடியும் என்ற விதி உள்ளது. அதற்கு பிறகு தமது சார்பில் பினாமி ஒருவரை நியமித்து கட்டுப்பாட்டை உறுதி செய்து கொள்வதுதான் வழி.
நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வாரியம் நடத்தும் போட்டிகளில் எந்த வர்த்தக நலன்களும் வைத்திருக்கக் கூடாது என்ற விதி ஐபிஎல் போட்டிகளுக்காக மாற்றப்பட்டு, ஐபிஎல், டி-20 போட்டிகளில் அத்தகைய வர்த்தக நலன்கள் இருக்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சொந்தமாக வைத்துக் கொண்டே, கிரிக்கெட் வாரிய பதவியையும் வகித்த சீனிவாசனுக்கு மட்டுமின்றி, பல ஐபிஎல் அணிகளில் பினாமி முதலீடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை கொடுத்தது.
வாரியத்தின் இப்போதைய/முன்னாள் உறுப்பினர்களில் காங்கிரஸ் (மத்திய பிரதேசத்தின் ஜ்யோதிராதித்ய சிந்தியா, உத்தர பிரதேசத்தின் ராஜீவ் சுக்லா), பாரதீய ஜனதா (குஜராத்தின் நரேந்திர மோடி, ராஜ்ய சபை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி), சமூக நீதிக் கட்சியினர் (பீகாரின் லல்லு பிரசாத் யாதவ், மும்பையில் சரத்பவார், உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி) என்று அரசியல் அரங்கில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் தலைவர்கள் உள்ளனர். இவர்கள், கிரிக்கெட் வாரிய ஊழல், மோசடி, ஒழுங்கின்மை பற்றி கூட்டு மௌனம் சாதிக்கிறார்கள்; முறைகேடுகளையும், ஊழல்களையும், கிரிமினல் குற்றங்களையும் வாரிய உறுப்பினர்களுக்கிடையேயே பேசி தீர்த்துக் கொள்கிறார்கள்.
கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு ரூ 25 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை ஆண்டு ஒப்பந்தத் தொகையாக வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ 25,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்திய அணிக்குள்ளும், ஐபிஎல் அணிகளுக்குள்ளும், வாரியத்திலும், அணி முதலாளிகள் மத்தியிலும் என்ன நடந்தாலும் மவுனம் சாதிப்பதை அவை உறுதி செய்கின்றன.
கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருக்கும் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ 3.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வாரியத்தின் நற்பெயரை காப்பதற்கான ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு விசுவாசமாக அவர்கள் நடந்து கொள்கிறார்க்ள. உதாரணமாக, ஐபிஎல் சூதாட்டம் பற்றிய விபரங்கள் வெளியானதும், கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக முதலில் வாதாடி களத்தில் நின்றவர் சுனில் கவாஸ்கர். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அவரவர் பங்கு பணம் ஆண்டுதோறும் தவறாமல் அனுப்பப்பட்டு விடுகிறது.
இத்தகைய கட்டமைப்பின் மூலம் எந்த தரப்பிலிருந்தும் தவறுகளை தட்டிக் கேட்க முடியாதபடி மவுனம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.
2013 ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனும் அதில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை ஐபிஎல் அணியை வைத்திருக்கும் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், சூதாட்டத் தரகர்களுடன் சேர்ந்து அணியின் உள் விவகாரங்களை கசிய விட்டு, தானும் சூதாடினார் என்ற குற்றச்சாட்டை முன்னிட்டு தான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை சீனிவாசன் நிராகரித்தார்.
சீனிவாசன் பதவி விலகுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் வாரியத்தின் பொருளாளர் அஜய் ஷிர்கேயும், செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் ஏற்கனவே பதவி விலகல் கடிதங்களை கொடுத்திருந்தனர். ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் ராஜினாமா செய்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான விசாரணை நடந்து முடியும் வரை வாரியத்தின் தலைவர் என் சீனிவாசன் பதவியிலிருந்து ஒதுங்கி இருப்பதாக முடிவு செய்ய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவது வரை வாரியத்தின் தினசரி நடவடிக்கைகளை தற்காலிகக் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
1997 உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய போது நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2006-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜக்மோகன் டால்மியா தற்காலிக நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் ஊழலை நீக்கி சுத்தப்படுத்தப் போவதாக டால்மியா கூறியிருக்கிறார்.
சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று வாரியத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஐ கே பிந்த்ரா மட்டும் குரல் எழுப்பினாராம். இந்த அவசர செயற்குழு கூட்டமே சட்ட விரோதமானது, மூன்று நாட்கள் முன்னறிவிப்புடன் நடத்தவில்லை என்ற வாதத்தையும் அவர் முன் வைத்திருக்கிறார். டெல்லியிலிருந்து தொலை தொடர்பு மூலம் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அருண் ஜேட்லி, கூட்ட முடிவுகளை முறையான செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறியிருக்கிறார்.
சீனிவாசன் தான் விரும்பியபடி பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலுடன் பேரம் பேசும் பொறுப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளாரா என்பதைப் பற்றியும் அவருக்கு சங்கடம் விளைவிக்கும் நோக்கத்தோடு, இக்கட்டான நேரத்தில் பதவி விலகிய வாரியத்தின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் பொருளாளர் அஜய் ஷிர்கேவும் மீண்டும் சேர்க்கப்படக் கூடாது என்ற அவரது நிபந்தனையை பற்றியும் வாரியம் எதையும் குறிப்பிடவில்லை.
ஆனால், இன்றைய ஆளும் வர்க்கமான முதலாளிகளின் மங்காத்தா இன்னும் மேம்பட்ட வடிவில், இன்னும் அதிக கொண்டாட்டங்களுடன், இன்னும் அதிகமான பணம் புரளும்படி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
கிரிக்கெட் மேட்ச் நடத்தப்படும் போது தொலைக்காட்சியில் பார்ப்பது, ஆர்வம் அதிகமானவர்கள் உள்ளூரில் நடக்கும் போட்டிகளுக்கு டிக்கெட் எடுத்து போய்ப் பார்ப்பது, செய்தித் தாள்களில் கிரிக்கெட் தகவல்களை படிப்பது, நண்பர்களுடன் விவாதிப்பது, ஆர்வமும் திறமையும் உடையவர்கள் ஏதாவது ஒரு வடிவில் மாலை நேரங்களில் அல்லது வார இறுதிகளில் தெரு கிரிக்கெட் விளையாடுவது. இதுதான் கிரிக்கெட்டுடன் ஒரு சராசரி ரசிகனின் உறவாக இருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலில் ஓட்டு போடுவது, சட்ட சபை தேர்தலில் ஒரு முறை, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முறை, உள்ளாட்சி தேர்தலில் ஒரு முறை என்று அவ்வப்போது தரப்படும் வாய்ப்புகளைப் பொறுத்து வாக்களிப்பது, ஒரு சிலர் சில கட்சிகளுக்காக வேலை செய்வது இதுதான் இன்றைய அரசுடன், ஆட்சியுடன் ஒரு சராசரி குடிமகனின் உறவு.
மற்றபடி கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, நாட்டின் ஆட்சி விவகாரங்களாயிருந்தாலும் சரி தினசரி நடைமுறைகளையும், சட்டங்களையும், பொருளாதார திட்டங்களையும் ஆளும் வர்க்கத்தினர் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்கின்றனர். அப்படி தீர்க்க முடியாமல் அம்பலப்பட்டு விடும் நேரங்களில் ஓரிருவரை பொதுமக்கள் முன் பலி கொடுத்து விட்டு தமது ஆட்சியை தொடர்ந்து நடத்துகின்றனர்.
இதுதான் கிரிக்கெட் மங்காத்தாவின் இன்னொரு முகம்.
(தொடரும்) vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக