வெள்ளி, 17 மே, 2013

ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !

muslims-prayingதேசீய முன்னணியின் அடைப்பக்காரர்கள் அதன் சகல திட்டங்களையும் ஆதரித்து ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் – ஆளும் வர்க்க ஊதுகுழல்களான பத்திரிக்கைகள், அறிவுஜீவிகள் – பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு முன் வைக்கப்படும் பேச்சு வார்த்தைகளையும் ‘ஆகா’ என்று கொண்டாடுகிறார்கள். பேச்சு வார்த்தைகளோ, கமிஷன்களோ பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைத் தீர்த்துவிடுமா? தீர்க்குமென்றே வைத்துக் கொண்டாலும், அதுவே இந்து முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா? ஒற்றுமை வந்துவிடுமா?
பாப்ரி மஸ்ஜித் மட்டுமல்ல, எல்லா சமூகப் பிரச்சனைகளையுமே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறர்கள். 1857 சுதந்திர எழுச்சியையே மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்புப் பிரச்சனையாக, இந்து – முஸ்லீம் கலகமாகச் சித்தரிக்கிறார்கள். பள்ளிகளில் ‘சிப்பாய்க் கலகம்’ என்று நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.
வெண்மணி, பெல்ச்சியிலே தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஏதோ சில அசம்பாவிதச் சாதி மோதல் என்று குறுக்கிச் சித்தரிக்கிறார்கள். 5000 பேர் போபாலில் அமெரிக்கக் கம்பெனி யூனியன் கார்பைடு விஷவாயுவால் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை அதை ‘விபத்து’ என்று தானே சொல்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய உயிர்களை அற்பமாகக் கருதுகிறது; கொலை நடத்திவிட்டு உயிருக்குப் பேரம் பேசி நட்டஈடு நாடகம் நடத்துகிறது என்று இவர்கள் ஒருக்காலும் சொல்ல மாட்டார்கள். எந்த ஒரு சமூகப் பிரச்சினையானாலும் வெட்டிச் சுருக்கிச் சுளுவாக ஒதுக்கிவிடுகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையையும் இப்படித்தான் செய்கிறார்கள்.
மொத்தம் இத்தனை சதுர அடிநிலம் – இதில் எவ்வளவு யாருக்குச் சொந்தம்? – இதுதான் இந்து முஸ்லீம்களின் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையா? அப்படியானால் ‘தகராறு’ இந்தியப்பரப்பு முழுவதும் அலை அலையாக விரிகிறதே, ஏன்? காரணம் இது சதுர அடிப் பாகப்பிரிவினை, பங்கீட்டுப் பிரச்சினை அல்ல. மத நம்பிக்கைகளை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடும் பணமூட்டைகள் விசிறிவிட்டு வளர்க்கின்ற மதவெறிகளே அடிப்படைப் பிரச்சினை. பல இன-மத மக்கள் பல நூறாண்டுகளாக உலகெங்கும் ஒன்று கலக்கிறார்கள் –ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் போன்ற ஆதிக்கசக்திகள், மனிதகுல எதிரிகள் இதற்கு உலகெங்கும் முட்டுக்கட்டைகள் போடுகிறார்கள்.

கம்யூனிசம் மனிதகுல விடுதலைக்கான விடாப்பிடியான பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தை முன்வைக்கிறது. ஏகாதிபத்தியம் கம்யூனிசத்துக்கு எதிராக கிறித்துவ இறையியலின் மூலம் ஊடுருவி சதி வேலைகளை நடத்துகிறது. இஸ்லாமிய இந்து மதவெறிகள் அடிப்படையிலேயே கம்யூனிச எதிர்ப்பை முன்வைக்கின்றன. பல மத-இன மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதை கம்யூனிசம் மட்டுமே விரும்புகிறது. மற்ற தத்துவங்களும், அரசியல் முறைகளும் அதை எதிர்க்கின்றன. இந்தியாவில் உள்ள இந்து – முஸ்லீம் பிரச்சினையும் அப்படிப்பட்டதுதான்.
சாதாரண நாட்களில் ஒரு வர்க்கத்தின் மீது மற்ற மதத்தவர் ஏறி நின்று மிதிக்கிறார்களா? கழுத்தை நெறித்துக் கொல்வதுண்டா? தெரிந்த முகம், சொந்த ஊர், எவ்வளவோ உதவிகள் செய்தவர்கள் என்று பார்ப்பவர்கள் ஒரு நொடியில் அந்நியர்களாகி விடுகிறார்கள் – எதனால்? மதவெறியால். மதவெறிக்கலகங்கள் போர்களைப் போலத்தான் – ஆனால் அழிவுகள் அதிகம் பேசப்படுவதில்லை. சமூகத்தை எப்போது நினைத்தாலும் உடைத்துவிடுவேன் என்று மதவெறி அமைப்புகள் மார் தட்டுவதற்கு என்ன காரணம்? என்ன அடிப்படை?
ஆர்.எஸ்.எஸ். இந்துமத வெறி பார்த்தீனிய விஷச் செடி போல இந்நாட்டில் குறுக்கிலும் நெடுக்கிலும் ஊடுருவியிருக்கிறது. ஜனநாயகம் இங்கு இல்லை என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. இந்துமதவெறிக்கு எதிர்வினையாகப் பலவேறு கட்டங்களில் முளைவிடத் தொடங்கி, வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் இஸ்லாமிய மதவெறியாகும்.
உலக அளவில் குறிப்பாக ஆசியாவில் மூண்டுவரும் இஸ்லாமிய மதவாதம், இந்தியாவில் முஸ்லீம்களின் தற்பாதுகாப்புக்கு ஒரு ஆயுதமாக மாறிவருகின்றது. ஏன்? பின்தங்கிய ஏழைநாடான இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு தேசீய இனங்கள், மதங்கள் அடிப்படையில் மக்கள் வாழ்கிறார்கள். மேலும் மேலும் ஜனநாயகத்தை நம்புவதற்கு மாறாக எதிர்த்திசையில் மக்கள் இழுக்கப்படுகிறார்கள் – இது ஏன்? இவை ஏன் எதனால் என்று பார்ப்பதும் இஸ்லாமிய மதவெறி குறித்து சில எச்சரிக்கைகளைக் கொடுப்பதும் எமது கட்டுரையின் நோக்கமாகும்.
**
பாப்ரி மஸ்ஜித், ராம ஜன்மபூமி விவகாரத்திற்குப் பிறகு அரசின் மெத்தனப் போக்கு முஸ்லீம்களுக்குத் தெளிவாகிவிட்டது. மீரட், மலியானா, ஹசாரிபாக், பாகல்பூர் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டதை எப்படி மறப்பார்கள்? தாறுமாறாகச் சிதைந்து மிச்சம் மீதிக் கனவுகளோடு எரிந்து போன வீடுகள், பூக்கள் நிரம்பிய குளங்களில் நிரம்பிய பிணங்கள், கிணறுகளில் பிணங்கள், நொறுக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில், தரைகளில் ரத்தக்கறைகள், துயரம், கலக்கம், பீதியோடு அகதிகள் – இவற்றை யாரால் மறக்க முடியும்?
தேசிய முன்னணி முஸ்லீம்களை இருகரம் நீட்டி வரவேற்பது போலத் தோற்றம் தருகிறது; ஆனால் அதன் கழுத்தில் பாரதீயஜனதா – இந்துமதவெறிச் சுருக்குக்கயிறு அலங்கரிப்பதைப் பார்த்த பிறகுமா விளங்கிக் கொள்ளாமல் இருப்பார்கள்? முஸ்லீம்கள் ஒதுக்கப்படுகிறார்கள்; வாழ்க்கை பலியாகிப் போவதைப் பார்த்துக் குமுறுகிறார்கள்; படிப்பறிவில்லை – அல்லது அரைகுறைப் படிப்பு – வேலையில்லை – வெம்பித் தவிக்கும் இவர்கள் மற்றவர்களோடு ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்ளக்கூடத் தயங்குகிறார்கள்; இநதுக்களின் தவறான எண்ணங்களைப் போலவே மேலும் கூடுதலாகத் தவறான எண்ணங்களோடு சேரிக்குள் கூட்டுக்குள் ஒடுங்கி விடுகிறார்கள்.
இந்த நிலைமை முஸ்லீம் மதவெறியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. காய்ந்து சலசலவெனப் பறக்கும் சருகுகளை தீ பிடிக்காதா?
மதரஸா கல்வி
இஸ்லாமிய மதவெறி அமைப்புக்களில்தான் எத்தனை வகைகள்? ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், சையத் ஷஹாபுதீன் குழு, இவைகள் பயன்படுத்தும் சிம் (எஸ்.ஐ.எம்- இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்) ஓட்டுப்பொறுக்கும் முஸ்லீம் அமைப்புக்கள் சந்தர்ப்பவாதிகளாகவே இருக்கின்றன; அதையும் காரணம்காட்டி ஜமா அத்தே இஸ்லாம், சிம் இரண்டுமே தீவிரம் காட்டுகின்றன. (சமீபத்திய தேர்தலில் ஜமா அத்தேகூட வரம்புக்கு உட்பட்ட ஓட்டுப்போடச் சொல்லியிருக்கின்றது.)

அடிமைச் சமுதாயத்தில் எழுதப்பட்ட குர்ஆனில் நவீன காலத்தின் அரசியலுக்கு எப்படி விடை கிடைக்கும்?
ஜமா அத்தே அமைப்பு புத்தகங்கள் வெளியிடுகிறது; மார்க்கக் கல்வி போதிக்கும் ஓராயிரம் பள்ளிகளை நடத்துகிறது; 400 படிப்புக் குழுக்கள் நடத்துகிறது; இவைகள் மூலம் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. குடும்பங்களில் முஸ்லீம் சடங்குகளை பின்பற்ற வலியுறுத்துகிறது; செயல்படுத்துவதை மேற்பார்வையும் இடுகிறது; கூட்டம் கூட்டமாக முஸ்லீம் கடைகளுக்குச் சென்று தொழுகைகளை, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்று நேருக்குநேர் சோதிக்கவும் செய்கிறது. கலவரங்களின் போது தேவைப்படும் பொதுக்கருத்தையும், அன்றாட அரசியல் சமூக கருத்து விமர்சனங்களையும் இந்த வழியேதான் முஸ்லீம்கள் மத்தியில் பாய்ச்சுகிறது; இவர்களிடமிருந்தே பண ஆதரவையும் பெறுகிறது.
ஒரு சில நூறு பணக்காரரிடம் இருந்து தனியே இவர்களுக்கு பணம் கிடைக்கிறது; நகரத்தை நோக்கி வந்து ஆயிரக்கணக்கில் பொறுக்கி வர்க்கமாக, குண்டர்களாக மாற்றப்படுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன; இருந்தாலும் பல்லாயிரக்கணக்கில் ஆதரவாளரைத் திரட்டுவதை இலக்காக வைத்தே ஜமா அத்தே வேலை செய்கிறது. அடிப்படையில் இதுதான் அபாயகரமான விஷயம்.
இஸ்லாமிய மதவெறி தூண்டப்படுவதற்கான முதல் அடிப்படை ஆர்.எஸ்.எஸ்- போன்ற இந்துமதவெறி அமைப்புகளின் வெறியாட்டங்கள்; முஸ்லீம்கள் இதை தங்கள் மதவெறி கொண்டு எதிர்க்கிறார்கள். இன்னொரு மாற்று இருக்கிறது – ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்களோடு இணைந்து போராடி எதிர்க்க முடியும். ஆனால் இந்திய நிலவரம் விபரீதமாகவே உள்ளது. புரட்சியாளர்கள் மற்றும் ஒரு சில உதிரியான நபர்கள் தவிர ஜனநாயகத்துக்கான போராட்டமே மிக மிகக் குறைவு. இதன் விளைவுகளைத்தான் ஷாபானு ஜீவனாம்ச விவகாரத்தில் பார்த்தோம். திருவனந்தபுரத்தில் ஜமீலா பீவியை ஜமாத் விசாரித்து வீதியில் எறிந்ததைப் பார்த்தோம்; சல்மான் ருஷ்டி இஸ்லாமை விமரிசிக்கும் கதைப் பாத்திரங்களை எழுதினார் என்பதற்காக, உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி பம்பாயில் சூறையாடப்பட்டதையும், ‘எனக்கு ஆணையிடுங்கள். ரஷ்டியைக் கொன்று வருகிறேன்’ என்று முஸ்லீம் இளைஞர்கள் சூளுரை எடுத்ததையும் பார்த்தோம். இவை ஓரிரவில், ஒரு நாளில் விளைந்தவையல்ல; நிதானமான சிந்தனையில் தன்மானப் பிரச்சினையில் விளைந்ததும் அல்ல. மெல்ல மெல்ல ஜமா அத்தே இஸ்லாமி போன்ற மதவெறி அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட களங்களில்தான் கலவரங்கள் விளைகின்றன.
இந்திய நிலைமையில் களம், காலம் கனிய வைப்பது இந்த வெறியர்களின் வேலை. பெட்ரோல், குண்டு தயாரானதும் ஒரு சிறு பொறி பற்ற வைப்பதுதான் குறிப்பிட்ட தருணம். அதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லீம்களின் வாழ்க்கை படுகுழியில் சரிந்து கொண்டிருக்கிறது; வேறு சிறப்பான நிறுவனங்களும் இங்கே இருக்கின்றன. இன்று இதற்கு மிகப் பொருத்தமாக உலக நிலைமை மாறியுள்ளது. ஆசிய நாடுகள் அனைத்திலும் மதவாதம் – குறிப்பாக இஸ்லாமிய மதவெறி எரிகின்ற பிரச்சனை ஆகிவருகிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி) ஏகாதிபத்தியச் சீரழிவுகள் பின் தங்கிய ஆசிய நாடுகளின் வேர்களை அறுப்பதை கம்யூனிஸ்டுகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். மனம் வெதும்பும் செயலற்ற பழமைவாதிகள் நிலப்பிரபுத்துவ சித்தாந்தங்களை வெறியோடு திணிக்கக் கோருகிறார்கள். இஸ்லாமிய மதவெறியர்கள் இப்படிப்பட்டவர்கள்தாம். இவர்களுக்கு உலக மையம் ஈரானிய மதவாத அரசுதான். இஸ்லாமியப் புரட்சியின் கரு உருவாகி விட்டதால் அதைப் பரப்ப வேண்டும், தேசங்கடந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண வேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் கிளர்ந்துள்ள மீட்க முடியுமென்ற நம்பிக்கையை முன்னே நிறுத்தி இந்திய முஸ்லீம்களைப் பணயமாக வைக்கிறார்கள் மதவாதிகள்.
இஸ்லாமிய புரட்சியின் நடைமுறை - மவுதூதி
இஸ்லாமிய புரட்சியின் நடைமுறை – மவுதூதி
இவை கற்பனையான செய்திகள் அல்ல. 1960-ஆம் ஆண்டுகளிலேயே பாகிஸ்தானின் ஜமா அத்தே இஸ்லாமியை உருவாக்கிய மவுதூதி அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் இதற்குத்தான் அறைகூவல் விட்டார். இஸ்லாமியப் புரட்சியை எப்படிச் செய்வது என்பதுதான் அவரது உரையின் சாராம்சம். “தேசீய இனங்களைக் கடந்த, தேசங்களைக் கடந்த குர்ஆன் வழிப்பட்ட அரசை அமைக்க வேண்டும்; மேலை நாட்டுப் படிப்பால், பயிற்சியால் அவர்கள் சொல்லுகின்ற வரலாற்றை, வாழ்க்கையை, உலகக் கண்ணோட்டத்தைத்தான் இளைஞர்கள் பெறுகிறார்கள்; முஸ்லீம் மார்க்கக் கல்வி வேண்டும்; முஸ்லீம் விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், வரலாற்று ஆசிரியர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் வேண்டும். எல்லாவற்றிலும் இஸ்லாமியச் சித்தாந்தம் தோய்ந்திருக்க வேண்டும். இஸ்லாமிய அரசை நடத்த வேண்டிய தனிநபர்கள் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும்.”
எப்படி இஸ்லாமியப் புரட்சி செய்வது என்பதற்கு இன்றுள்ள நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதைப் பற்றி விளக்கவில்லை மவுதூதி. பதிலாக, மதீனாவில் இஸ்லாமிய அரசை அமைக்க முகம்மது 13 ஆண்டுகள் கடுமையாகப் போராடியதை உணர்ச்சியோடு விளக்கினார். குரைஷிட்டுகள் ஹெட்ஜாசின் அரசராக முகமதுவை முடிசூட்டுவதாக மயக்கு வார்த்தைகள் பேசினார்கள்; அரேபியாவின் இணையற்ற அழகிகளைக் கொண்டு வந்து மணமுடித்து தருவதாகச் சொன்னார்கள். பதிலுக்கு, முகம்மது ‘லட்சியத்’தைக் கைவிட வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிபணியாத லட்சியவான் முகமது, அவரது மனைவி கதீஜா பற்றியெல்லாம் விளக்கி குர்ஆனில் சொல்லப்பட்டதே சரியான அரசு என்று அடித்துப் பேசுகிறார்.
ஓரிடத்தில் இஸ்லாமியப் புரட்சியைத் தொடங்கி நடத்தினால் உலகம் முழுவதும் பேதமற்ற ஒரே கடவுளின் ஒரே சமுதாயம் உருவாகும் என்று மவுதூதி அன்று சொன்னார். உலகின் பல நாடுகளில், பல மதத்தவரோடு வாழும் முஸ்லீம்கள் எப்படி இதைச் சாதிப்பது என்பதற்கு அவரிடம் விடை இல்லை.
இருக்கமுடியாது; அடிமை உடமை காலத்தில் எழுதப்பட்ட குர்ஆனில் நவீனகாலத்தின் அரசியலுக்கு எப்படி விடை கிடைக்கும்? கிடைக்கும் என்று மதவெறியர்கள் சொல்லுவார்கள். இவர்களின் ‘புரட்சிக்கு’ கோட்பாடு எங்கிருந்து கிடைக்கிறது? குர்ஆனிலேயேதான். குர்ஆன் சொல்கிறது: “(பல்வேறு) கடவுள்கள் மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் யாம் உங்களை மத்திய நாட்டு மனிதர்களாக படைத்தோம். உலக மக்களுக்கு நீங்களே சாட்சிகள்; தீர்க்கதரிசியார் உங்களுக்கு ஒரு சாட்சி.” (வேதம் 2:143).
உலகில் கடவுள்கள் இல்லை, ஒன்றே கடவுள் என்று குர்ஆன் சொல்கிறது. பல கடவுள்கள், பல தேசங்கள் என்ற முரண்பாட்டுக்கு அன்று முகம்மது கண்ட ஒரு முடிவுதான் ஒரு கடவுள், ஒன்றே உலகம் என்ற தத்துவம். தேசங்கள், தேசிய இனங்கள் என்பதை நவீன உலகம் முன் நிறுத்துகிறது. இதற்கான தீர்வை பழைய மதங்களில் காணமுடியாது. அஞ்ஞானத்திற்கு பதில் விஞ்ஞானரீதியான மார்க்சிய தத்துவத்தில் தான் முடிவை தேட வேண்டும்.
இஸ்லாமிய மதவெறி இந்து மதவெறியைப் போலவே உள்ளது. “இந்து நாடு, இந்து மதம், இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து பண்பாடு” என்று ஐந்தம்ச திட்டம் வைக்கும் ஆர்.எஸ். எஸ்ஸின் இந்து ராஷ்டிரத்தில் இருந்து இஸ்லாமிய புரட்சி சொல்லும் ‘புரட்சி அரசு’ எப்படி வேறானது? அதில் ‘இந்து’ என்ற சொல்லுக்கு பதில் ‘இஸ்லாம்’ என்றிருக்கும், அவ்வளவுதானே.
இந்தியா : தெருக்களில் மதவெறியர்களின் போர்
இந்தியா : தெருக்களில் மதவெறியர்களின் போர்
பல்வேறு இந்திய இஸ்லாமிய சிந்தனையாளர்கள், ஆலிம்கள் விருப்பப்பட்ட விளக்கம் கொடுத்து குட்டை குழப்புகிறார்கள். டெல்லி இமாம் ஒரு பேட்டியில் கூறினார்: “முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் இஸ்லாமிய அரசு இருக்க வேண்டும்; சிறுபான்மையாக உள்ள இடத்தில் மதச்சார்பற்ற அரசு இருக்க வேண்டும்”. மிகச் சுலபமாக ஆர்.எஸ்.எஸ். இந்த வாதத்தை எதிராக திருப்புகிறது. “பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இடத்தில் இந்து அரசுதானே இருக்க வேண்டும்.” என்கிறது ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே மதவெறி என்பதற்கும், இரண்டுமே மக்களுக்கு எதிரானது என்பதற்கும் வேறென்ன சான்று வேண்டும்? இதனால் தான் இந்திய முஸ்லீம்கள் பெரும்பான்மை இந்துக்களின் தயவில் வாழ்வது போல இருவருமே சித்தரிக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக இது அல்ல.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து மதவெறியை இனங்கண்டு ஒதுக்குவது போலவே இந்திய மக்கள் இஸ்லாமிய மதவெறியையும் எதிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதவெறியர்கள் தெளிவாக வேறு மதங்களையும் எதிர்க்கிறார்கள்; ஜனநாயகபூர்வமான கம்யூனிஸத்தையும் எதிர்க்கிறார்கள். இவர்கள் அடிப்படையிலேயே ஜனநாயக எதிரிகள்.
பிவாண்டி மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட முஸ்லீம் உழைப்பாளிகள் கிராமங்களிலிருந்து வறுமையால் வெளியேறியவர்கள் – இந்தப் பொருளாதார நிலமை பற்றியோ, காரணம் யார் என்றோ, எதிர்த்த போராட்டம் பற்றியோ மத வெறியர்கள் வாயே திறப்பதில்லை; தவிர, முஸ்லீம் உழைப்பாளிகள் முஸ்லீம் பண முதலைகளால், பண்ணையார்களால் சுரண்டப்படுவதை இவர்கள் எதிர்ப்பதும் கிடையாது. இவற்றுக்கு தமிழகத்தில் சான்று ஏதாவது உண்டா?
இன்றைய உற்பத்தி முறையின் முன்னே பழமையான இந்துமத மரபுகள் போலவே இஸ்லாமிய மரபுகளும் சரிந்து விழுகின்றன. இன்றைய சமுதாயத்தில் உள்ள, முதலாளி தொழிலாளி வர்க்கங்களுக்கான ஒழுக்க விதிகளை இந்த வர்க்கங்களே இல்லாத பழைய காலத்தின் தர்மமான குர்ஆனில் தேட முடியுமா? தேட முடியாதென்பதை மதவாதிகள் ஒப்புக் கொள்வார்களா?
நாம் பொறுமையாக சிந்திக்க கடமைப் பட்டவர்கள். நாம் தேச விடுதலை பற்றிச் சொல்லும்போது “பல தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து கூட்டாக புரட்சி நடத்தப்பட வேண்டும்; பல மதங்கள் இருக்கலாம், அவை ஜனநாயக பூர்வமாக, தனிநபர் உரிமையாக்கப்பட வேண்டும், அரசிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறோம். சிறுபான்மை முஸ்லீம் மதத்தினரின் உரிமைகள் நசுக்கப்படும் போது அதற்கு எதிராக நிச்சயம் நிபந்தனையின்றி ஆதரவு அளித்து போராடுவோம்; ஆனால் மத அரசை, மத அடிப்படை வாதத்தை – அது இந்து, முஸ்லீம் எதுவாயினும் – எதிர்ப்போம்.
இன்று இந்தியா முழுவதும் பெரும்பான்மை இந்து மதவெறி பற்றி எரிகிறது. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதைக் கேட்க முன் வரும் முஸ்லீம்களைப் பார்த்து “இவர்கள் மறுபடி இந்தியாவைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். தியோரஸ் அலறுகிறார். இவருக்கு பனத்துவாலா, சகாபுதீன், இமாம், ஜமா அத்தே இஸ்லாமி ஆகியோர் பதில் சொல்ல முடியாது. காரணம் அவர்கள் இஸ்லாமிய வெறியர்கள். ஆனால் ஏழை எளிய முஸ்லீம் உழைக்கும் மக்கள் பதில் கொடுக்க முடியும் – “எங்கள் பூமி இதுதான், எங்கள் நாடு இந்தியா தான். உழைக்கும் மக்களுக்கே இந்த நாடு சொந்தம்.” என்று முஸ்லீம் மதவெறியர்கள், சுரண்டும் இந்திய அரசு, இந்திய பாசிச கும்பலின் கூட்டாளிகள் இவர்களிடமிருந்து நாட்டை மீட்க உழைக்கும் முஸ்லீம் மக்கள் மற்ற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போதுதான் ஒளிமயமான இந்தியாவை அடைய முடியும்.
- பஷீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக