செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஆளுங்கட்சியை அதிகம் விமர்சிக்கவேண்டாம் விஜயகாந்த் அறிவுரை ! திமுகவுடன் பேரம் பேச உதவியாருக்குமோ?


ஆட்சியையும், முதல்வரையும், அதிகம் விமர்சித்து பேச வேண்டாம்' என, தே.மு.தி.க., பேச்சாளர்களுக்கு, அக்கட்சி தலைமை, ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, 29 தொகுதிகளை கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற தே.மு.தி.க., உள்ளாட்சி தேர்தலில், கூட்டணியில் இருந்து கழற்றி விடப்பட்டது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உட்பட, அக்கட்சியினர் அரசுக்கு எதிராகவும், முதல்வரை விமர்சித்தும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்பி வந்தனர். இவர்கள் மீது, பல்வேறு மாவட்ட கோர்ட்டுகளில், அரசு தரப்பில் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க.,வினரை போலவே, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதும், நிலஅபகரிப்பு புகாரின் அடிப்படையில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது படலங்களும் அரங்கேறியுள்ளன.முதல்வரை சந்தித்த, ஐந்து தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இது, அ.தி.மு.க.,- தே.மு.தி.க., இடையே மோதலை அதிகரித்துள்ளது. "தே.மு.தி.க.,வினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்' என, சட்டசபையில், அக்கட்சி எம்.எல்.ஏ., பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். நிராகரித்த முதல்வர் ஜெ., "இந்த ஆலோசனையை, சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லுங்கள்' என, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
இதனிடையே, கசப்புணர்வுகளை மறந்து, அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் வளைப்பதற்கான, தீவிர முயற்சியில், தி.மு.க., தலைமையும் இறங்கியுள்ளது. "மே, 1ம்தேதி, தே.மு.தி.க., தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த பொதுக் கூட்டங்களில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்கவுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, தே.மு.தி.க., பேச்சாளர்களுக்கு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளில் பேச எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. வருமானம் இல்லாததால், பேச்சாளர்கள் தவித்து வந்தனர்; பலர், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.பேச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே, இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை, தே.மு.தி.க., தலைமை அறிவித்துள்ளது. பேச்சாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை, பொதுக்கூட்ட ஊதியமாக வழங்க வேண்டும் என, மாவட்ட செயலர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.இதனிடையே, "ஆட்சியையும், முதல்வரையும் அதிகம் விமர்சித்து பேச வேண்டாம்' என, தே.மு.தி.க., பேச்சாளர்களுக்கு, அக்கட்சி தலைமை, நேற்று ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான, விடை தெரியாமல், தே.மு.தி.க., பேச்சாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.-நமது நிருபர்-dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக