செவ்வாய், 30 ஏப்ரல், 2013

யாழ் உதயன் பத்திரிகையின் நிதி மோசடி வெளிச்சத்திற்கு வருகிறது பல கோடி அபேஸ்

 நிதி மோசடியில் இருந்து அரசியலுக்கு ஒரு புனித யாத்திரை 
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகை காரியாலயம்
தாக்கப்படுவதும், அதன் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த அளவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வேறு எந்தப் பத்திரிகையும் தாக்கப்படவில்லை எனக் கூறலாம்.இந்தப் பத்திரிகையின் உரிமையாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன். இவர் 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு, பொதுமக்கள் வைப்பிலிட்ட பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவான ‘சப்றா பினான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மோசடி குறித்து பல வருடங்களாக மக்கள் பலரிடம் முறையிட்டும் இன்றுவரை எந்தவிதமான விசாரணையும் நடாத்தப்படாததுடன், பாதிக்கப்பட்வர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் வழங்கப்படவும் இல்லை. மிக அண்மையில்தான் இதுபற்றி அரசாங்கம் விசாரணை நடாத்த முன்வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.உண்மையில் சரவணபவன் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளராக இருந்தாலும், அவரது மைத்துனர் ந.வித்தியாதரன் தான் இந்தப் பத்திரிகையின் அச்சாணியாக இருந்து செயல்பட்டவர். ஆனால் கடந்த பொதுத் தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நியமனம் கிடைக்கும் என வித்தியாதரன் எதிர்பார்த்திருந்த நிலையில், மைத்துனர் சரவணபவன் பின்கதவால் புகுந்து வேட்பாளர் நியமனம் பெற்று பாராளுமன்ற உறுப்பினராயும் ஆகிவிட்டதால், மைத்துனர்களுக்க்கிடையில் முரண்பாடு தோன்றி, ஒருவருடன் ஒருவர் பேச்சுவார்த்தைகூட வைக்காத அளவுக்கு நிலைமை முற்றியது. அதைத் தொடர்ந்து வித்தியாதரன் உதயன் பத்திரிகையிலிருந்து வெளியேறினார் அதன் பின்னர் வித்தியாதரன் கொழும்பிலிரு;து ‘டெயிலி மிரர்’ ஆங்கில நாளிதழ் தமிழில் நடாத்தும் ‘தமிழ் மிரர்’ என்ற இணையப் பத்திகையில் பணியாற்றுகின்றார். (அதனால்தான் ‘தமிழ் மிரர்’ இன்னொரு உதயனாக வெளிவந்து கொண்டிருக்கிறது)
இந்த நிலைமையால் அவர்களது குடும்பங்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டதால், அதை ஈடுகட்டுவதற்கு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் தனது மைத்துனர் வித்தியாதரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக்கி பிராயச்சித்தம் தேடுவதற்கு சரவணபவன் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, உதயன் அடிக்கடி ‘இனம்தெரியாத’ (இந்தப் பெயரில் முன்பு புலிகள்தான் படுகொலைகளைச் செய்து வந்தனர். இப்பொழுது வேறு யாரோ புலிகளது வழியைப் பின்பற்றுகிறார்கள் போலும்!) நபர்கள் தாக்கி வருவது குறித்து அதன் உரிமையாளர் சரவணபவனும், அவருக்கு ஆதரவான உள்நாட்டு சர்வதேச சக்திகளும் அரசாங்கத்தின் மீது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் மற்றப் பத்திரிகைகளை விட்டுவிட்டு உதயன் பத்திரிகை மட்டும் திரும்பத் திரும்பத் தாக்கப்படுவது ஏன், என்ற கேள்வி எழுகின்றது. இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதாவது வித்தியாதரன் பொறுப்பாக இருந்த காலத்திலேயே, உதயன் பத்திரிகா தர்மத்தை மீறி பல தடவைகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் உதயன் பத்திரிகைக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்ட போது, தனக்கு இருந்த ஊடக பலத்தை வைத்துக்கொண்டு பொதுமக்களை பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் திருப்ப முயன்றனர்.

அதுமாத்திரமில்லாமல், யாழ்ப்பாணத்தில் உதயனைத் தவிர வேறு பத்திரிகைகள் வெளிவராக்கூடாது என்பதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல அச்சுறுத்தல் நடவடிக்கைகளை உதயன் மேற்கொண்டது.

உதயன் பத்திரிகை ஒருபோதும் ஊடக தர்மத்தின்படி நடந்தது கிடையாது. பொய் செய்திகளைப் பரப்புவது, அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களுக்கு சேறு பூசுவது, மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவது போன்ற மாபியத்தனமான பாணியில்தான் உதயன் செயல்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களில் கணிசமான ஒரு பகுதியினருக்கு உதயன் மீது கோபம் உண்டு. அது தவிர உதயன் உரிமையாளர் சரவணபவன் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த சப்றா பினான்ஸ் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்ததாலும், அதன் மீது பொதுமக்களுக்கு வெறுப்பும் உண்டு.

‘உதயன்’ செய்து வரும் விசமத்தனத்துக்கு தற்பொழுது அது செய்து வருகின்ற ஒரு செயல் நடைமுறை உதாரணமாக இருக்கிறது. அது என்னவெனப் பார்த்தால் உதயன் செய்து வரும் பத்திரிகா தர்மம் என்ன என்பது தெரிந்து விடும்.வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக மோத உள்ளன.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கட்சிக்கும், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அதன் தேர்தல் நோக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மறுபக்கத்தில் கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் உட்பட வடக்கில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட்டு வந்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலிலும் அந்த நிலைமைதான் தொடரப் போகின்றது. அதில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் இதுவரை தகவல் எதுவும் இல்லை.

அப்படியிருக்க சில நாட்களுக்கு முன்னர் உதயன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஈ.பி.டி.பி கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகித் தனியாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நம்பிக்கையாகத் தெரிய வந்ததாக ஒரு பொய் செய்தியைக் கட்டவிழ்த்துவிட்டது. அதைத்தான் பத்திரிகைகள் வழமையாகச் செய்யும் ஒரு கயிறு திரிப்பு என்று விட்டுவிட்டாலும், அது பின்னர் செய்திருக்கிற ஒரு வேலை உதயன் பத்திhகையின் உச்ச கட்ட விசமத்தனத்தையும், கபடத்தனத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

வழமையாக உதயன் ஏதாவது தனக்குத் தேவையான ஒரு விடயம் குறித்துக் கருத்துக்கணிப்பு நடாத்துவதும், தானே தனக்குச் சாதகமாக அதன் முடிவுகளை அறிப்பதும் ஒரு நகைச்சுவையான நாடகம். அண்மையில் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடந்தபோது, அது சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறிய ஒரு கருத்தை வைத்து, அவருக்கு எதிராக ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தியது. அதற்கு முதல் தனது சக பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிரிக்கட் விளையாடியதை வைத்து அவருக்கு எதிராக சரவணபவன் உதயனில் ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தினார். (ஆனால் சரவணபவன் மட்டும் தனது மனைவி பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலரி மாளிகையில் நடாத்தும் விருந்துகளில் கலந்து கொண்டு கூடிக்குலாவி வருவார்)

இப்பொழுது அவர் அவர் நடாத்தும் விசமத்தனமான கருத்துக் கணிப்பு என்னவென்று பாருங்கள்!

வட மாகாணசபைத் தேர்தல் நடந்தால் அதில் வெற்றி பெறப் போவபர்கள் யார் என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பின்வரும் தெரிவுகளைக் கொடுத்துள்ளது உதயன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஈ.பி.டி.பி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
மேற்குறித்த எவரும் இல்லை

இந்தக் கேள்வி எடுத்துக் காட்டுவது என்ன? ஈ.பி.டி.பியும் அது அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றன என்பதுதானே? அந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, அப்படி ஒரு கதைகூட அரசியல் அரங்கில் எங்கும் பேசப்படவுமில்லை.

அப்படி இருக்க உதயன் ஏன் இந்த விசமத்தனத்தைச் செய்துள்ளது? அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள பிளவை மூடி மறைப்பது அதன் பிரதான நோக்கம். அதை மறைப்பதற்கு ஈ.பி.டி.பிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் பிளவு என்று ஒரு பொய்ச் செய்தியை முதலில் பிரசுரித்தது. அதை மக்கள் நம்பமாட்டார்கள் என்பதால், மக்களை அந்தப் பொய்யில் பங்குபற்ற வைப்பதற்காக, ஒரு பொய் கருத்துக் கணிப்பையும் நடாத்துகின்றது. அத்துடன் தனது வழமையான பாணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக ஆதரவு இருக்கின்றது என்று காட்டவும் முற்படுகின்றது.

இப்படியான விசமத்தனங்களைச் செய்யும் உதயன் மறுபக்கத்தில் தான் ஊடக தர்மப்படி செயல்படுவதால்தான், தன்மீது தாக்குதல் நடாத்தப்படுகிறது என ஒப்பாரியும் வைக்கிறது. அதை நம்பி அமெரிக்க அரசாங்கம் முதல் உள்ளுhர் கந்தையா அண்ணை வரை உதயனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்மீது உதயன் செய்த அவதூறுகளுக்காக 1000 கோடி ரூபா நஸ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்ததாகவும், அதற்கு அஞ்சி உதயன் நிர்வாகம் சமரசத்துக்கு வந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும், சப்றா புகழ் சரவணபவன் போன்ற ‘அஞ்சா நெஞ்சர்களை’ அசைக்க முடியாது. மக்களாக முன்வந்து ஏதாவது தீர்ப்பு வழங்கினால் மட்டும்தான் உதயனையும் அதன் உரிமையாளரையும் வழிக்குக் கொண்டுவர இயலும் போல் தோன்றுகிறது.
 thenee.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக