திங்கள், 8 ஏப்ரல், 2013

அழகிரி கனிமொழி சந்திப்பு இதுதான் பின்னணி

மதுரை:.மு.க. பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு, ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் என கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மு.க.அழகிரியை இன்று கனிமொழி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் பதினைந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டது தி.மு.க தலைமை. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அழகிரி ஆதரவாளர்கள், நாங்கள் நடத்திய அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் விழாவில், கலந்து கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர் கேள்வி கேட்டார்கள். இதனால் குழப்பமான மன நிலைக்கு ஆளானது அறிவாலயம்.

இந்த நிலையில்தான், கனிமொழி தலைமையில் செயல்படும் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் ஜி.பி.ராஜாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கனிமொழி மதுரை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வழக்கத்திற்கு மாறாக, அவரை வரவேற்க, அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மூர்த்தி, மன்னன், மிசா பாண்டியன், கவுஸ்பாட்சா, எஸ்ஸார் கோபி என பெருங்கூட்டமே விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் என பெரும் வரவேற்ப்பை கொடுத்தனர்.
அங்கிருந்து கிளம்பிய கனிமொழி, நேராக அழகிரி வீட்டுக்கு சென்றார். ஆதரவாளர்களை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு கனிமொழியை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார் அழகிரி. உள்ளே ஒரு மணி நேரம் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார்கள். அதில், ‘அப்பா, ஸ்டாலினையே அடுத்த தலைவராக கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார். அதற்காக குறுக்கு வழியில் அத்தனை வேலைகளையும் செய்கிறார். என்னிடம் கேட்காமல் மதுரையில் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் போட்டு, அதற்கு போகாத எனது விசுவாசிகளுக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்புகிறார். அதற்கு முன்பு, பார்மாலிட்டிக்காக கூட, என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. ஏற்கனவே, என்னைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசிலிருந்து விலகும் முடிவை எடுத்து, கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள். இதே போலத்தான் 2ஜியில் நீ மாட்டிக் கொண்டு சிறைக்கு சென்றபோதும், ஸ்டாலின் தரப்பினர் மகிழ்ச்சியாக இருந்தனர். தயாநிதி மாறனை தப்பிக்க வைத்தார்கள். அவருக்கு ஸ்டாலின் சப்போர்ட். இப்படியே நிலைமை போனால், பத்து வருடத்துக்கு முன்பு எடுத்த முடிவு போல், அதிரடியாக நான் எடுத்து விடுவேன். அதற்கு பின் ஸ்டாலின் என்ன, கட்சியே இருக்காது’’ என்று உணர்சிகரமாக பேசியிருக்கிறார் அழகிரி.
கனிமொழியும் அழகிரியின் வேதனைக்கு ஆறுதல் சொன்னதோடு,‘‘ நானும், ஸ்டாலினுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், அவர் என்னை எதிரியாகவே பார்க்கிறார். சமீபத்தில் விழுப்புரத்தில் எனது அமைப்பினர் ஏற்பாடு செய்த கூட்டத்தை நடத்த விடாமல் செய்தார்’’ என்று பல விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார். இவர்கள் பேசும்போது காந்தி அழகிரியும் உடன் இருந்திருக்கிறார்.
‘‘கவலைப்படாதே, நான் இருக்கிறேன். விரைவில் நான் யாரென்று ஸ்டாலினுக்கும், அப்பாவுக்கும் காட்டுவேன்’’ என்று, உற்சாகமாக கூறியிருக்கிறார் அழகிரி. இருவரும் டிபன் சாப்பிட்டு விட்டு, ஜி.பி.ராஜாவின் திருமண விழாவுக்கு ஒரே காரில் சென்று, வாழ்த்திவிட்டு, அங்கிருந்து நேராக, நேற்று காலமான பி.டி.ஆரின் அண்ணன் கமல தியாகராஜனின் வீட்டிற்கு சென்று, ஆறுதல் சொன்னார்கள். மதிய உணவையும் அழகிரியின் வீட்டில்தான் சாப்பிட்டார் கனிமொழி.
கட்சியினர் 15 பேர்களுக்கு நோட்டீஸ் விட்டது பற்றியும், நேற்று, கோ. சந்திரசேகரன் உட்பட ஆறு பேரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது பற்றியும் கனிமொழியிடம் கேட்டதற்கு, ‘‘அதற்கு தலைமைதான் பதில் சொல்லனும். நான் சொல்ல முடியாது’’ என்று, சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

வழக்கத்திற்கு மாறாக கனிமொழிக்கு அழகிரி ஆதரவாளர்கள் கொடுத்த வரவேற்பு, அண்ணனும், தங்கையும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தது, ஒரே காரில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டது என நடக்கும் சம்பவங்கள், வருங்காலத்தில்  தி.மு.க.வுக்குள் பெரும் புயலை ஏற்படுத்தலாம். இதற்கு பதிலடியாக ஸ்டாலின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

செ.சல்மான்

படங்கள்:
முத்துராஜ், பா.காளிமுத்து
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக