புதன், 24 ஏப்ரல், 2013

கோர்ட்டுக்கு வந்தது வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்!

மாஜி  திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி, முதல் மருமகள் இணைந்து, இரண்டாவது மனைவி உட்பட, எட்டு வாரிசுதாரர்களுக்கு, வீரபாண்டி ஆறுமுகம் எழுதிக் கொடுத்த, சொத்து பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், பூலாவரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சோழக்கவுண்டர்.  இவரது மகன் வீரபாண்டி ஆறுமுகம். 1973 முதல் சேலம் மாவட்ட, தி.மு.க., செயலராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தார்.

தி.மு.க.,வின் அமைச்சரவையில் 1989, 1996, 2006 ஆகிய காலங்களில் உள்ளாட்சித் துறை, விவசாயத் துறை அமைச்சர் பதவிகளை வகித்தவர். அவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி ரெங்கநாயகி; இரண்டு மகன்; இரண்டு மகள் உள்ளனர்.
மூத்த மகன் நெடுஞ்செழியன், தி.மு.க., மாவட்ட செயலராக இருந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இரண்டாவது மகன் ராஜா, கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
இரண்டாவது மனைவி லீலா; இவருக்கு ஒரே மகன் உள்ளார். இவர்கள், சென்னையில் வசிக்கின்றனர். சேலம் மாவட்ட, தி.மு.க.,வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய, வீரபாண்டி ஆறுமுகம், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நில அபகரிப்பு வழக்கு மட்டுமின்றி, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உயிருடன் இருந்த போது, குடும்பத்தில் எந்த பிரச்சனையும் எழவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 2012 நவம்பர், 23ம் தேதி இறந்தார். அதன் பின், பிரச்னை எழுந்தது.
சொத்து பிரச்னை, தற்போது விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி ரெங்கநாயகி, மூத்த மருமகள் பிருந்தா செழியன் சார்பில், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலா, அவர் மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா; செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து; ராஜாவின் மகள்கள், கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு எதிராக, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,  ‘’வீரபாண்டி ஆறுமுகம், 2007 செப்டம்பர், 6ல், அழகாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண அய்யர் மகன் ஜனார்த்தன ராவிடம் இருந்து, 97.5 சென்ட் நிலத்தையும், ஜனார்த்தன ராவின் சகோதரர் கங்காராமிடம் இருந்து, 50.5 சென்ட் நிலத்தையும் வாங்கி, ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகியோர் பெயரில், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்தார். இந்நிலையில், 2011 டிசம்பர், 23ம் தேதி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகிய இருவரையும், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கடத்திச் சென்று, இந்த இரண்டு சொத்துக்களில் பங்கு, மேலும் எட்டு சொத்துக்களை, தன் பெயருக்கு பெற்றுக் கொள்வதாக மிரட்டி, இருட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
ரெங்கநாயகி, தன் கணவருக்கு தானமாக கொடுப்பதாகவும், மருமகள் பிருந்தா செழியன் அந்த நிலத்தை, 37.66 லட்சம் ரூபாய்க்கு, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிருந்தா செழியன், தன் பங்கை விற்பனை செய்ததற்காக, ஐந்து காசோலைகளை, வீரபாண்டி ஆறுமுகம், பல்வேறு தேதிகளில் வழங்கினார். அதில், நான்கு காசோலைகளை தலா, 9 லட்சம் ரூபாய்க்கும், ஐந்தாவது காசோலையை, 1.66 லட்சம் ரூபாய்க்கும் வழங்குவதாக தெரிவித்த போதிலும், அதை வழங்கவில்லை. சொத்துக்களை, பிருந்தா செழியன் விற்பனை செய்த நிலையில், அவருக்கான எந்த பலனையும் (பணமோ, நிலமோ) வீரபாண்டி ஆறுமுகம் கொடுக்க வில்லை.
இதனால், அந்த சொத்து பதிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முதல் மனைவி ரெங்கநாயகியின், இரண்டாவது மகன் ராஜா, உயிருடன் உள்ள நிலையில், அவரின் பங்கை கொடுக்காமல், இரண்டாவது மனைவி லீலா, அவர் மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து, ராஜாவின் மகள்கள் கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த தான சொத்து பரிமாற்ற பதிவு செல்லாது என, அறிவிக்க வேண்டும்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுக்களை ஏற்ற, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், ஜூன், 13ம் தேதிக்குள், எதிர் தரப்பினர், இந்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக