புதன், 24 ஏப்ரல், 2013

பின்வாங்கி செல்லுங்கள்: சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு

புதுடில்லி : "இந்திய பகுதிக்குள் அத்துமீறல் செய்வதற்கு முந்தைய நிலை
தொடர வேண்டும்; பின்வாங்கி செல்லுங்கள்' என, சீனாவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரின், லடாக் பகுதியின் கிழக்கே, கடல் மட்டத்திலிருந்து, 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள, பனிமலைப் பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவ வீரர்கள், 50 பேர் ஆக்கிரமிப்பு செய்தனர்.இரு நாடுகளுக்கும் எல்லையாக கருதப்படும், நடைமுறை எல்லைக் கோட்டைத் தாண்டி, டி.பி.ஓ., என்ற இடத்தில், 10 கி.மீ., முன்னோக்கி, இந்திய எல்லைக்குள் வந்த சீன ராணுவத்தினர், கூடாரம் அடித்து முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை, ராணுவ விமானங்கள் இறக்கிச் சென்றுள்ளன.இதை அறிந்த இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை, கண்டனம் தெரிவித்தது. "தேசத்தின் நலன்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, ராணுவ அமைச்சர் நேற்று முன் தினம் அறிவித்தார்.


இந்நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர், வெய் வெய்யை, வெளியுறவுத்துறை செயலர், ரஞ்சன் மத்தாய், தன் அலுவலகத்திற்கு அழைத்து, அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது, முந்தைய நிலை தொடர வேண்டும் என, வலியுறுத்தினர்.

இதுகுறித்து, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், அக்பருதீன் கூறியதாவது: அத்துமீறல் குறித்து அறிந்ததும், சீன ராணுவத்திற்கு தகவல் தெரிவித்தோம். இன்று, இரு நாடுகளின் ராணுவ பொறுப்பாளர்களும், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள், எல்லையில் அடிக்கடி நிகழ்வது சகஜம் தான்.எனினும், அதை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அத்துமீறலுக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என, கண்டிப்புடன் கூறியுள்ளது. நடந்த சம்பவங்கள், இரு நாடுகளுக்கும் எல்லையாக உள்ள பகுதி எது என்பதை சரியாக அறிந்து கொள்ளாததால் ஏற்பட்டது தான்.இப்போதைய பிரச்னை, அமைதியாக தீர்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக