செவ்வாய், 5 மார்ச், 2013

சிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் Welcome

விஜய் மல்லையாசிதம்பரத்தின் கவலையை போக்க வந்த பெர்னோ ரிக்கா!"கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் ப சிதம்பரம், ‘நாட்டின் பெட்ரோல் தேவை, தங்க மோகம், நிலக்கரி இறக்குமதி, ஏற்றுமதி குறைவு இவற்றால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ரூ 3.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக’ கவலை தெரிவித்தார். ‘இதை சமாளிக்க ஒரே வழி மேலும் மேலும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதுதான்’ என்றும் ‘அந்த நோக்கத்தில் அன்னிய முதலீட்டாளர்களை கவர்வதற்கான திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாகவும்’ சொல்லியிருந்தார்.
நிதியமைச்சருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.
உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமான பிரெஞ்ச் பன்னாட்டு நிறுவனம் பெர்னோ ரிக்கா, ‘இந்திய மதுபானங்கள் சந்தையில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்’ என்ற மகுடத்தை முடிசூடா மன்னரான விஜய் மல்லையாவிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது.

அப்சல்யூட் வோட்கா, ஷிவாஸ் ரீகல் போன்ற மதுபானங்களை உற்பத்தி செய்யும் பெர்னோ ரிக்காவின் 2011-12ம் ஆண்டு இந்திய விற்பனை முந்தைய ஆண்டை விட 34 சதவீதம் அதிகரித்து ரூ 5,491 கோடியை எட்டியது; லாபம் ரூ 593 கோடியை தாண்டியது. உலக அளவில் பெர்னோ ரிக்காவின் நான்காவது பெரிய சந்தையாகவும், ஐந்தாவது அதிக லாபம் தேடித் தரும் நாடாகவும் இந்தியா வளர்ந்திருக்கிறது.
விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்பிரிட் அதே கால கட்டத்தில் ரூ 7,763 கோடி விற்பனை செய்து ரூ 343 கோடி மட்டுமே லாபம் ஈட்டியது. ‘பன்னாட்டு நிறுவனங்களின் மேம்பட்ட சந்தை உத்திகளும் உயர்தரமான பொருட்களும் கிடைக்கும் போது இந்திய நுகர்வோர் மல்லையா போன்ற உள்ளூர் சாராய வியாபாரிகளை புறக்கணித்து விடுகிறார்கள்’ என்பது இந்திய சந்தையின் முதிர்ச்சியையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.
“பெர்னோ ரிக்காவின் சாதனை ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது” என்கிறார்கள் கிரெடிட் ஸ்விஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்னாப் மித்ராவும் அக்ஷய் சக்சேனாவும். “10 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்திக் கொண்ட சியாக்ராம் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் பிராண்டுகளை புத்திசாலித் தனமாக பயன்படுத்தி தன் விற்பனையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது” என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கான பரிந்துரை குறிப்பில் அவர்கள் பெர்னோ ரிக்காவிற்கு புகழாரம் சூட்டுகிறார்கள்.
2000ம் ஆண்டில் 10 லட்சம் பெட்டிகள் (ஒரு பெட்டியில் 12 பாட்டில்கள்) மட்டும் விற்பனை செய்த பெர்னோ ரிக்கா 2012ல் 2.2 கோடி பெட்டிகள் விற்பனையை எட்டியிருக்கிறது. 13 கோடி பெட்டிகளை விற்று 25 கோடி பெட்டிகள் இந்தியச் சந்தையில் 55 சதவீதத்தை கைவசம் வைத்திருக்கிறது விஜய் மல்லையாவின் கம்பெனி. ஆனால், அதன் லாப வீதம் பன்னாட்டு சாராய கம்பெனி பெர்னோ ரிக்காவை விட குறைவாகவே இருக்கிறது.
சராசரியாக ரூ 720 விலைக்கு விற்கும் ஒவ்வொரு பெட்டிக்கும் விஜய் மல்லையா ரூ 70 மட்டுமே லாபம் பார்க்கிறார். அதாவது ஒரு பாட்டிலின் விலை ரூ 60, லாபம் ரூ 6 மட்டும் (டாஸ்மாக் கடைகளில் இதே மதுபானங்கள் விற்கும் விலையுடன் ஒப்பிடும் போதுதான் ஜெயா அரசு எப்படி மலிவு விலை உணவகங்களை நடத்த முடிகிறது என்பது புரிகிறது). ஆனால், பெர்னோ போன்ற பன்னாட்டு பிராண்டுகள் பெட்டிக்கு சராசரியாக ரூ 1,760 விலையும் ரூ 320 லாபமும் ஈட்டுகின்றன.
‘பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவது மூலம்தான் நாட்டின் பொருளாதாரம் வளர முடியும்’ என்ற அடுத்தடுத்த மத்திய அரசுகளின் கோட்பாட்டை நிரூபிக்கும் அசைக்க முடியாத ஆதாரமாக இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விற்பனை எண்ணிக்கையில் கூட பெர்னோ ரிக்கா உள்ளூர் நிறுவனங்களான ரேடிக்கோ கெய்த்தான், ஜகத்ஜித் இண்டஸ்ட்ரீஸ், கிஷோர் சாப்ரியாவின் அல்லைட் பிளெண்டர்ஸ் & டிஸ்டிலரீஸ் இவற்றை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியாவில் பெர்னோ ரிக்காவின் லாப வேட்டையை பார்த்து உலக அளவில் அதனுடன் போட்டியிடும் உலகிலேயே அதிக மது விற்பனை செய்யும் லண்டனைச் சேர்ந்த டியாஜியோ இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்க முடிவு செய்திருக்கிறது; விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் ப சிதம்பரம் பரபரப்பாக தேடிக் கொண்டிருக்கும் அன்னிய முதலீட்டை கணிசமான அளவு கொண்டு வரவிருக்கிறது.
சிதம்பரத்தின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையான ரூ 3 லட்சம் கோடியில் சுமார் ரூ 5,000 கோடி முதல் 10,000 கோடி வரை யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்-டியாஜியோ பங்கு விற்பனை மூலம் இந்தியாவுக்கு கிடைத்து விடும். யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் பங்குகளை டியாஜியோ வாங்குவதற்கான ஏற்பாட்டுக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலும் கிடைத்து விட்டது. ‘இந்திய சாராயச் சந்தையை உயர் விலை பொருட்களை நோக்கி செலுத்துவதற்கு இந்த உறவு உதவும்’ என்று அது திருப்தி தெரிவித்திருக்கிறது.
மராத்வாடா பகுதியில் நிலவும் வறட்சியால் கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுளள நிலையில் 1990 முதல் அடுத்தடுத்த மத்திய அரசுகள் பின்பற்றிய பொருளாதார கொள்கைகள் மூலம் உலகின் தலை சிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் வந்து குடிமக்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்துள்ளன. சுதந்திரமான சந்தை வர்த்தகத்தின் மகிமையை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக