திங்கள், 18 மார்ச், 2013

காங்.,க்கு ராசா பதிலடி என்னை நேரில் விசாரிக்க என்ன பயம்?

  ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக் குழுத் (ஜே.பி.சி) தலைவர் பி.சி. சாக்கோ விடுத்த கோரிக்கையை முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா நிராகரித்து விட்டார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. யான பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள் உள்பட 20 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு முன்பு சமீபத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அட்டார்னி ஜெனரல் வாகனாவதி கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான செய்திக்குறிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவால் அது திருத்தப்பட்டதாகவும், சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் யோசனையை அவர் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
வாகானாவதியின் இந்தக் கருத்தை ஆ. ராசா மறுத்தார். நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க விரும்பிய அவர், இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 22 ம் தேதி மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதினார். மேலும் தி.மு.க. சார்பிலும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால், ஆ. ராசா நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ அனுமதி அளிக்கவில்லை.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ராசாவுக்கு சாக்கோ அனுப்பிய கடிதத்தில், 4 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு மட்டும் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு கூறியிருந்தார். இதைக் கண்டு தி.மு.க கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளது. சாக்கோவின் இந்தக் கோரிக்கையை ராசாவும் நிராகரித்து விட்டார். இதுகுறித்து சாக்கோவுக்கு அவர் எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில்,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கூட்டுக்குழு முன்பு நான் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவே விரும்புகிறேன். ஆனால், நான் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதை கூட்டுக் குழு ஏன் விரும்பவில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மேலும் இந்த பிரச்சனையில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ள பங்களிப்பு என்ன? என்பதை அறிவதற்காகத்தான் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கூட்டுக் குழுவின் முன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களுக்கும் நான் விளக்கம் அளிக்க முடியும். இந்த விவகாரத்தில் நான் பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் யோசனைகளை நிராகரித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக சி.பி.ஐ.யோ அல்லது ஜே.பி.சி.யோ பிரதமரிடமோ அல்லது நிதியமைச்சரிடமோ எந்த வாக்குமூலமும் பெறவில்லை. எனக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதி தந்தால், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அரசாங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் சம்மதத்தின் பேரில் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.
மேலும் அட்டார்னி ஜெனரல் அளித்த சாட்சியம் அடங்கிய பிரதி எனக்கு அளிக்கப்படாத நிலையில், அதுபற்றிய எனது பதில் கேட்கப்பட்டு உள்ளது. நியாயமான விசாரணை நடைமுறை கொள்கைகளுக்கு மாறாகவே கூட்டுக்குழு விசாரணை உள்ளது. அட்டார்னி ஜெனரல் தெரிவித்த கருத்துக்களை மறுக்க எனக்கு முறைப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால், உண்மையில் நடந்தது என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த பிரச்சனையில் எனது தரப்பு கருத்தை கேட்டு அறியாமல் கூட்டுக் குழு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் திறந்த மனதுடன் விசாரணையை தொடருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராசா. இதன் பின்னரும் ராசாவை நேரில் ஜேபிசி அழைக்காவிட்டால், இலங்கை விவகாரத்தில் டெசோவின் போராட்டம் தீவிரமாகும் என்று கருதப்படுகிறது.thinaboomi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக