செவ்வாய், 19 மார்ச், 2013

ஞாநி : பரதேசி பாலாவுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது

ஞாநி திரைப்பட இயக்குநர் பாலாவுக்கு முதலில் என் நன்றி. நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்று முரட்டுத்தனமாக தான் அடித்துக் காட்டி நடித்துக் காட்டி வேலை வாங்குவதை பகிரங்கமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். தன் புதிய படத்துக்கு கவனம் ஈர்க்கும்  பப்ளிசிட்டிக்காக இந்த வேலையை அவர் செய்திருந்தாலும், இது தமிழ் சினிமா துறையில் காலம் காலமாக இருந்துவரும் சில கேவலங்களைப் பொது விவாதத்துக்குக் கொண்டு வர எனக்கு உதவியிருப்பதற்காக அவருக்கு நன்றி. பாலா நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நடிகர்களை  குச்சியாலும் கையாலும் காலாலும்; அடித்திருப்பது நிச்சயம் அவருடைய மனப் பிறழ்வைக் காட்டுகிறது. அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தன் மன வக்கிரங்களை ஒரு கலைஞன் கலையாக வடித்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் அந்த முயற்சி இதர மனிதர்களை வதைப்பதாக இருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.மிழ் சினிமாவில்தான் இந்த நடித்துக் காட்டுவது என்ற விசித்திரமான கேவலம் இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய திரைப்பட மேதைகள் யாரும்  தங்கள் நடிகர்களுக்கு நடித்துக் காட்டும் வழக்கம் கிடையாது. சிறந்த நடிகர்கள் யாரும் தமக்கு இயக்குநர் நடித்துக் காட்டுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அதை அவமதிப்பாகவே கருதுவார்கள்.நடிகரிடமிருந்து தனக்கு தேவைப்படுவது என்ன என்பதை ஒரு இயக்குநர் நடிகருக்கு சொல்லிப் புரியவைப்பது மட்டுமே தேவை. இயக்குநர் என்ன விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்ட நடிகர், தான் அந்தப் பாத்திரத்தை எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை இயக்குநருக்கு நடித்துக் காட்டியே உணர்த்த வேண்டும். தன் பாத்திரத்தைப் பற்றி சிந்திக்கவும் சிந்தித்துத் தீர்மானித்ததை தன் உடல் மொழியால் வெளிப்படுத்தவும் தெரிந்தவரே நடிகர். இயக்குநர் நடித்துக் காட்டியதை அப்படியே மிமிக்ரி செய்பவர் சிந்திக்க தெரியாத, இயலாத ஒரு  கருவி மட்டுமே.


தங்கள் நடிகர்கள் அப்படி இருப்பதையே பல இயக்குநர்கள் விரும்புகிறார்கள் என்பது வருத்தமான விஷயம். இயக்குநர் நடித்துக் காட்டுவார் அதை நாம் திரும்பச் செய்தால் போதும் என்ற மன நிலை  நடிகர்களிடமும் தமிழ்ச் சூழலில் ஆழமாக வேரூன்றிவிட்டது.  என்னிடம் பரீக்‌ஷா நாடகங்களில் நடிக்க வரும் இளைஞர்களில் பலர் சினிமா ஆசையில் நடிக்க வந்திருப்பவர்கள். ( கூத்துப் பட்டறையில் நடித்த ஒரு சிலர் சினிமாவில் பிரபலம் ஆகிவிட்டதால் நாடகத்துக்கு  ஏற்பட்ட அவலங்களில் இது ஒன்று. நாடகம் மீது எந்த காதலும் இல்லாமல் சினிமாவுக்கு செல்ல இது ஒரு உத்தி என்று கருதும் கும்பல், அவர்களுக்கு பயிற்சி தருகிறோம் என்று  வசூல் செய்யும் நாடகக்காரர்கள் எண்ணிக்கை எல்லாம் அதிகமாகிவிட்டது.) இந்த இளைஞர்களில் பலர் தங்களுக்கு நடிக்க வராதபோது, இயக்குநரான என்னை நடித்துக் காட்டச் சொல்கிறார்கள். இது சிந்திக்க முடியாத நடிகரின் பலவீனம் மட்டுமல்ல, இயக்குநரையும் பலவீனப்படுத்துவதாகும்.

ஆனால் தமிழ் சினிமாவில் இயக்குநர் நடித்துக் காட்டுவது என்பது  பதிந்துவிட்டதற்குக் காரணம், நடிகனாகவும் ஹீரோவாகவும் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்து அது முடியாமல்  போய் இயக்குநரானவர்கள் பலர் இருப்பதுதான். இயக்குநராக பிரபலமானதும் மறுபடியும் தங்கள் ஒரிஜினல் ஆசைக்கு அவர்களில் பலர் திரும்ப முயற்சிக்கிறார்கள்.

இந்த நடித்துக் காட்டுவதாவது அபத்தம். ஆனால் அசலாக தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று வதைப்பது கொடூரம்.  பல வருடங்கள் முன்பு ஒரு  சினிமா நடிகர்  நாடகத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதற்காக மொட்டை அடித்துக் கொண்டதைப் பலரும் பாராட்டியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் கேட்டார்: இதே நடிகர் இதற்கு முன்னால் முஸ்லிம் தளபதி வேடத்தில் நடித்தாரே, அதற்காக சுன்னத் செய்துகொண்டாரா  என்று. நடிப்பு என்பது அசலாக மாறுவதல்ல. அசலை உணர்த்துவதுதான்.  அடிக்கிற காட்சியில் அடிப்பது போல இருக்க வேண்டுமே தவிர அசலாக அடிக்க முடியாது. பாலா படங்களில் கொலைக் காட்சிகளும் பாலியல் வன்புணர்ச்சி காட்சிகளும் வந்தால் அவற்றையெல்லாம் அவர்  தன் நடிகர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பார் என்று கற்பனை செய்யவே கதிகலங்குகிறது.

பாலா போன்ற மனவக்கிரம் உடையவர்கள் இப்படி நடந்துகொள்வதை விட எனக்கு அதிக கவலை தருவது, அவர் படங்களில் நடிக்கும்  நடிகர்களும், இதர உதவியாளர்களும் இதையெல்லாம் ஏன் எதிர்க்காமல் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பற்றிதான்.  அறிவுஜீவிகள் என்று அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் நிஜ நாடக இயக்க மு.ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் பாலாவின் படங்களில் வேலை செய்திருக்கிறார்கள். நிச்சயம் பாலாவின் வக்கிரமான நடைமுறைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. இப்படி செய்வது தவறு என்று அவர்களெல்லாம் பாலாவுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? என்னிடம் கேட்ட விஷயம் தவிர வேறு எதிலும் நான் தலையிடுவதில்லை என்ற சாக்கு உதவாது.படைப்பாளிகள், அறிவுஜீவிகள் தாம் தொடர்புள்ள இடத்தில் தமக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் அது பற்றிய தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்வதுதான் நேர்மை.

ஆனால் தமிழ் சினிமா சூழல் எல்லாரையும் அடிமைமன நிலையில் மட்டுமே இயங்கும்படி நிர்ப்பந்திக்கிறது. அதற்குள்ளே நுழையும் சுதந்திர  மனமும் சிந்தனையும் உடையவர்களைக் கூட அந்த அடிமைச் சூழல் வேறு விதமாகவே நடந்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.  போலிகளாக இருக்கச் சொல்கிறது.

பாலாவுக்கு பல காலம் முன்பே பாலசந்தரும் பாரதிராஜாவும் நடிகர்களை அடித்த கதைகள் உண்டு. அப்படி அடிப்பதையெல்லாம் பெருமையாகவும் மோதிரக் கையால் குட்டு என்றும் அசட்டுத்தனமாகக் கொண்டாடும் அடிமை புத்திதான் அடிபட்டவர்களுக்கு இருந்துவந்திருக்கிறது. இயக்குநர்கள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள் முதல், நடன இயக்குநர்கள், எடிட்டர்கள் வரை தங்கள் உதவியாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை வேறு எந்த அறிவுசார்ந்த துறையிலும் பார்க்கவே முடியாது.

பத்திரிகை அலுவலகத்தில் ஓர் உதவி ஆசிரியர்  கட்டுரையில் தவறு செய்துவிட்டால், அவரை எந்த ஆசிரியரும் அடித்ததாக வரலாறே கிடையாது. ஆனால் சினிமாவில் உதவி இயக்குநருக்கு அடி விழும். ஸ்டோரி டிஸ்கஷனில் நல்ல சீன் சொல்லவில்லையென்பதற்காக, அறை வாசலில் மணிக் கணக்கில் உதவி இயக்குநரை கால் கடுக்க நிறுத்திவைத்து  தண்டிப்பது சகஜம். கெட்ட வார்த்தை வசவுகள் மிகச் சாதாரணம். ஒரு தொழிற்சாலையிலோ ஆலையிலோ ஒரு தொழிலாளியை இந்த வசவில் ஒரு வசவைச் சொல்லித் திட்டினால் கூட, நிச்சயம் அத்தனை பேரும் வேலை   நிறுத்தம் செய்வார்கள். அங்கே அடிப்படை சுயமரியாதை உணர்ச்சி இருக்கும்.  இங்கே யாரும்  கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற அடிமை மனநிலைதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

மிக வலிமையான தொழிற்சங்கங்கள் இருந்த துறை சினிமா என்றபோதும் இந்த கேவலங்களுக்கு எதிராக எந்த தொழிற்சங்க நடவடிக்கையும் கிடையாது.  கொத்தடிமை மாதிரி வேலை வாங்கிக் கொண்டு சமபளத்தையும் சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றும் சூழலில், உதவியாளர்களுக்கு சமபளத்தை வாங்கிக் கொடுப்பதே மிகப்பெரிய  தொழிற் சங்கப்பணியாகக் கருதப்பட்டுவிட்டது.  உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் போன்றோருக்கெல்லாம் தனி சங்கமே இல்லை. யார் இவர்களை வதைக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்தே ஒரே சங்கத்தில் இருக்கவேண்டிய நிலையில், யாரிடம் போய் புகார் செய்ய முடியும் ?

சினிமாவில் இந்த அடிமை நிலைமை இருப்பதற்குக் காரணம் பணம், புகழ் ஆசைகள்தான்.

இன்று நசுக்கப்படும் ஒவ்வொரு சின்ன நடிகனும்,  உதவி இயக்குநரும் நாளை தான் மேலே வந்து புகழையும் பணத்தையும் அடைந்துவிட்டால், தன் வாழ்க்கையே அடியோடு மாறிவிடும் என்ற கனவிலேயே இன்றைய அடிமைச்சுமையை சகித்துக் கொள்கிறார்கள். மேலே வந்ததும், அவர்களும் அதுவரை அவர்களை வதைத்தவர்களைப் போலவே தாங்களும் ஆகிவிடுகிறார்கள். அப்படி பிறரை வதைக்கும்போது , ‘நாங்கல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம் தெரியும் இல்ல ?” என்று கேட்கவும் செய்வார்கள். அதே கஷ்டங்களை அடுத்து வருபவர்களும் அனுபவிக்கக் கூடாது என்ற அக்கறையும் பரிவும் இருக்காது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் ஏராளமான இளைஞர்கள் நுழைந்திருக்கிறார்கள். இந்த வருகையால் சினிமாவின் உருவம் மாறியிருக்கிறது. தொழில்நுட்பம் மெருகேறியிருக்கிறது. ஆனால் பழைய அடிமைமுறை தொழில் நடைமுறைகள் மாறவில்லை. போலித்தனம் எனப்படும் ஹிப்பாக்ரசியே கோலோச்சுகிறது. இந்த ஹிப்பாக்ரசிதான் தமிழ் சினிமாவின் தாரகமந்திரம். பர்தா அணியும் பழக்கம் சரியா தப்பா என்ற ‘நீயா நானா’விவாதம் ஒளிபரப்பபடக் கூடாது என்று

சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வெற்றிகரமாகத் தடுக்கின்றன. அப்படி தடுக்க உதவியவர் இயக்குநர் அமீர் என்று அமைப்பைச் சேர்ந்த மார்க்க ‘அறிஞர்’பி.ஜே பகிரங்கமாகச் சொல்லுகிறார். என் வீட்டுப் பெண்கள் சினிமாவும் டிவியும் பார்க்கமாட்டார்கள் என்று எனக்கு அளித்த வெப் டிவி பேட்டியில் அமீர் சொன்னார்.  ஆனால் ‘கன்னித்தீவு பெண்ணா ’ என்று குத்தாட்டம் போட அவர் தயங்குவதே இல்லை. அமீர்  மட்டுமல்ல, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய ஒரு சிலரைத் தவிர அத்தனை தமிழ் சினிமாகாரர்களும் அதே போன்றவர்கள்தான். இந்த ஹிப்பாக்ரசிதான் தமிழ் சினிமா. அதன் இன்னொரு எவிடென்ஸ்தான் பாலாவின் ப்ரொமோ வீடியோ. கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தப்பட்ட வரலாற்றைப் பற்றிய படம் பரதேசி ! தமிழ் சினிமா அடிமைகளைப் பற்றி யார் எப்போது படம் எடுப்பார்கள் !?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக