சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்...ஒரே மதத்தின் இருவேறு உலகங்கள்.

RAW உளவுப்‌பிரிவின் முஸ்லீம் அதிகா‌ரி ஒருவர் தனது டீமுடன் இணைந்து நியூயார்க் நகரை அல்கய்தாவின் தாக்குதலில் இருந்து காப்பதுதான் விஸ்வரூபத்தின் ஒன்லைன்.விக்ரம் படத்தின் அடுத்தக்கட்டமாக இதனை சொல்லலாம். கதை அமெ‌ரிக்கா - ஆப்கான் என இரு தளங்களில் பயணிக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் நளினமான கமலை பூஜஅறிமுகப்படுத்தும் விதமும், அவர் கமலை திருமணம் செய்வதற்கான காரணமும், தனது பாஸுடன் அவருக்குள்ள நெருக்கமும் முன்பின்னாக சொல்லப்படும் விதம் தேர்ந்த கதை சொல்லியின் நேர்த்திக்கு உதாரணம். இந்த சில நிமிடங்களில் உனைக்காணாத பாடலும், கமலின் நளினமான நடிப்பும் சேர்ந்து நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்கிறது. தொடர்ந்துவரும் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிப்படும் இடம்வரை.... சான்ஸே இல்லை... க்ளாஸ்.
கமல் யார் என்பது நியூயார்க்கை அழிக்க திட்டமிடும் அல்கய்தாவின் முக்கிய தீவிரவாதி முல்லா உமருக்கு தெ‌ரிந்துவிடுகிறது. கமல் யார்? இதற்கு பதிலாக உம‌ரின் பார்வையில் ஆப்கான் காட்சிகள் வருகின்றன.
அல்கய்தாவில் ஊடுருவினோமா, அவர்களின் தலைமையை அழித்தோமா என்றில்லாமல் ஆப்கான் ஜனங்கள், ‌ஜிகாதிகளுக்கும், அமெ‌ரிக்க படைகளுக்குமிடையில் அவர்களின் வாழ்க்கை, மூளைச் சலவை செய்யப்படும் குழந்தைகள், ஆங்கில மொழியின் மீது ‌ஜிகாதிகளுக்கு இருக்கிற வெறுப்பு, போ‌ரில் மரணமடைவதை வீரமாகவும், துரோகத்துக்கு தண்டனையாக தூக்கிலிடுவதை அழியா பழியாகவும் கருதும் முரண் என்று கமல் அகலப்பார்வை பார்த்ததில், படத்தின் டெம்போ இறங்கிவிடுகிறது. ஆனால் ஒரு ஹாலிவுட் படத்தையும் விஸ்வரூபத்தையும் வேறுபடுத்துவது இந்தக் காட்சிகளே.
பின்லேடனை கொன்றதை அமெ‌ரிக்காவே கொண்டாடுகிற போது, ஒரு மனுஷன் செத்ததை இப்படியா கொண்டாடுறது என்கிறார் கமல். அசுரன் செத்தா கொண்டாடுறதுதானே என்கிறார் ஆண்ட்‌ரியா. அதை அசுரனின் மனைவி பிள்ளைகள் சொல்லணும் என்று பதிலளிக்கிறார் கமல். இப்படி ஓநாயின் பார்வையில் எதிர்தரப்பும், அதன் இருப்பும், படத்தின் ஆரம்பத்திலிருந்து படம் நெடுக வைக்கப்படுகிறது.

ஜிகாதிகள் ‌ரிலாக்ஸாக சி‌ரிப்பதையும், பந்து விளையாடுவதையும் இதில்தான் பார்க்கிறோம். அவர்கள் பயிற்சி செய்யும் காட்சிகள் நெடுக, எங்கள் ஆயுதம் எது என்பதை எதி‌ரிகள் தீர்மானிக்கிறார்கள் என்ற ‌ரீதியில் பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. தாலிபன்கள் நான்கைந்து அமெ‌ரிக்கர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள். அதை சாக்காக வைத்து முழுதாக ஒரு கிராமத்தையே நேட்டோ படைகள் குண்டு வீசி அழிக்கிறது. இந்த இரு தரப்புக்கும் நடுவில் சாதாரண ஜனங்கள் செத்தழிவதை, முதல்ல இங்கிலீஷ்காரன் வந்தான், அப்புறம் ரஷ்யாக்காரன், பிறகு தாலிபான், அமெ‌ரிக்கா, இப்போ நீங்க... முன்னால் வால் முளைத்த குரங்குகளா என்று உயிர் பிழைத்த முதாட்டியின் வாயிலாக சொல்லுமிடம் நச். முன்னால் வால் முளைத்த குரங்குகள்... ஆண்களின் ஈகோ-வுக்கு பெண்கள் பலிகடாவாவதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது. கிளைமாக்ஸில் நை‌‌‌ஜீரியா இளைஞன் குண்டை வெடிக்க வைப்பதற்கு முன் தொழுகை நடத்தும் அதேவேளை அவன் அறைக்கு வெளியே அழிவை தடுக்கவரும் கமலும் தொழுகையில் ஈடுபடும் காட்சி, ஒரே மதத்தின் இருவேறு உலகங்கள்.  tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக