சனி, 2 பிப்ரவரி, 2013

ஞாநி: கட்டைப் பஞ்சாயத்தை ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக பரிந்துரை

விஸ்வரூபம் பட விவகாரத்தில் கடைசியில் யாருக்கும் வெட்கமில்லை என்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், சட்ட நெறிமுறை எல்லாம் எல்லாராலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. கமல்ஹாசனின் படம் தமிழக முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா என்ற கருத்தை படத்தை மக்களிடம் வெளியிட்டபின்னர்தான் தீர்மானிக்கமுடியும்.முன்கூட்டியே தாங்கள் மட்டும் பார்த்து தீர்மானிக்கும் அதிகாரம், தங்களைத் தாங்களே எல்லா முஸ்லிம்களுக்கும் பாதுகாவலர்களாக அறிவித்துக் கொண்டுள்ள  மத அடிப்படைவாதத் தலைவர்களுக்குக் கிடையாது. எல்லா ஹிந்துக்களுக்கும் தாங்கள்தான் பிரதிநிதி என்று சங்கபரிவாரம் நிலைநிறுத்த முயற்சிப்பதற்கு சரிநிகர் சமானமான அபத்தம் இது. ஒரு படம் இந்திய சட்டப்படி தணிக்கை செய்யப்பட்டபிறகு அது வெளியாவதை யாரும் எதிர்க்கமுடியாது. படத்துடன் பிரசிச்னை இருந்தால், எப்படி அனுமதித்தீர்கள் என்று தணிக்கை வாரியத்திடம்தான் கேட்கவேண்டும். அடுத்து மேல் முறையீடாக நீதிமன்றத்துக்கு செல்லவேண்டும்.  மாநில அரசிடம் மனு கொடுத்து படத்தை அரசு தடை செய்யவைத்த முஸ்லிம் அமைப்புகள் யாரும் நீதிமன்றத்துக்குப் போகவில்லை. அவர்களுக்கு படத்தை கமல்ஹாசன் போட்டுக் காட்டியது, மும்பை தாதா பால் தாக்கரேவுக்கு தன் பம்பாய் படத்தை மணிரத்னம் போட்டுக் காட்டிய தவறுக்கு நிகரான தவறு.

கூடங்குளம் அணு உலைபிரச்சினைக்காக இது வரை ஒரு நிருபர் சந்திப்பைக் கூட நடத்தாத ஜெயலலிதா  சினிமா காரர்களையும் முஸ்லிம் மதவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காக நிருபர்களை அழைத்து விளக்கக்கூட்டம் நடத்தியிருக்கிறார். அரசு தடை செய்தது சரி என்றும் கமல்ஹாசன் முஸ்லிம் அமைப்புகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா அதில் அறிவித்திருப்பது படு ஓட்டையான வாதம்; சட்ட நெறிகளுக்கு புறம்பானது. அதை கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டிருப்பதும், கடைசி நிமிடம் வரை கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமல் பம்மிவிட்டு கிளைமாக்சுக்குப் பின்னர் வரும் சினிமா போலீஸ் மாதிரி கடைசியில் கூட்டமாக வந்த சினிமா துறையினர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதும் வெட்கக்கேடானவை.
தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை அதன் பின் வேறு யாருக்கும் போட்டுக் காட்டி அனுமதி பெறவேண்டியதில்லை என்ற அடிப்படையான சட்ட உரிமையை ஜெயலலிதாவும் கமல்ஹாசனும் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்.
ஏன் ஜெயலலிதா அரசு தடை விதித்தது என்பதற்கு கருணாநிதி சொல்லும் ‘அவதூறான ‘ காரணங்களை ஒதுக்கிவிடலாம். ஜெயலலிதாவே சொன்ன காரணம் ஒன்றே ஒன்றுதான்.  படத்தை வெளியிட அனுமதித்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு வன்முறை நிகழும் என்று உளவுத்துறை தகவல்கள் சொன்னதால் ஆட்சியர்கள் தடை விதித்தார்கள் என்கிறார் ஜெயலலிதா.
அப்படித் தகவல் கிடைத்திருந்தால், வன்முறை செய்யப்போவது யார் ? சாதாரண முஸ்லிம்களா? அல்லது 24 அமைப்புகளின் தலைவர்களும் தொண்டர்களுமா? தி.மு.கவும்ம்  இடதுசாரி கட்சிகளும் கடை அடைப்பு போராட்டம் அறிவித்தாலே, முன் இரவே எல்லா கட்சி முக்கியஸ்தர்களையும் தடுப்புக் காவலில் கைது செய்யும் போலீசார், ஏன் உளவுத் துறை தகவல்கள் கிடைத்தும் 24 அமைப்புகளின் பிரமுகர்களையோ முக்கிய அமைப்பாளர்களையோ தடுப்புக் காவல் கைது செய்யவில்லை ?
கமல்ஹாசன் முஸ்லிம் தலைவர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று இப்போது அறிவிக்கும் ஜெயலலிதா , தம் அரசிடம் முஸ்லிம் அமைப்புகளின் முதல் மனு வந்தபோதே ஏன் இதைச் சொல்லவில்லை ? ஏன் அப்போதே கமல்ஹாசனை அழைத்து அதை அறிவுறுத்தவில்லை ?அவர் தரப்பு கருத்தையோ, தணிக்கை வாரியத்தின் கருத்தையோ கேட்காமலே ஏன் அரசு தடைவிதித்தது ?
நீதிமன்றம் அரசு விதித்த தடையை ரத்து செய்த மறு காலையிலேயே தியேட்டர் மீது தாக்குதல் என்று பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதை ஜெயலலிதா சுட்டிக் காட்டுகிறார்.  ஏன் தீர்ப்பு வந்த இரவே தடுப்புக் காவல் கைதுகளை செய்யவில்லை ? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் ?
இப்போது பேசித் தீர்க்கும் கட்டைப் பஞ்சாயத்தை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கும் முதலமைச்சர், தன் அரசு சார்பில் நீதிமன்றத்தில் சொன்னதை  ஏன் திரும்பச் சொல்லவில்லை ? கட்சித் தொண்டர் போல, ‘ஹானரபிள் புரட்சித்தலைவி அம்மா’ என்று பேட்டி கொடுக்கும் அரசின் அட்வகேட் ஜெனரல், சென்சார் பெரும் ஊழல் செய்ததாக நீதிபதியிடம்சொன்னாரே, அது இப்போது என்ன ஆயிற்று ?  அதற்கு தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சனின் கடும் கண்டனத்துக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?
விஸ்வரூப பட தடை தொடர்பாக இதுவரை நடந்தது எல்லாம் கேவலமான அரசியல், மதவாத, பாசிச நாடகம்.
ஓட்டுக்காக முஸ்லிம் அமைப்புகளை ஜெயலலிதாவும்,தங்கள் மதவெறி அரசியலுக்காக ஜெயலலிதாவை அந்த அமைப்புகளும் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு பகடைக்காயாக பயன்பட்ட கமல்ஹாசன் நொந்து நூலாகி, வணிக சிக்கலிலிருந்து மீள்வதற்காக கொள்கை சமரசத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார். இதை விட அவர் திவாலாகி தமிழகத்தை விட்டு வெளியே குடியேறும் நிலை ஏற்பட்டிருந்தால், அவரது லட்சோபலட்சம் ரசிகர்கள் ஆளுக்கு  நூறு ரூபாய் கொடுத்து அவரையும் கருத்துச் சுதந்திரத்தையும் காப்பாற்றியிருக்கமுடியும்.
எதுவுமே நடக்காதது போல அடுத்த சில வாரங்களில் எல்லாரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். யாருக்கும் வெட்கமில்லை. gnani.net
தமிழ் இந்தியா டுடேவுக்காக-1.2.2013 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக