வியாழன், 7 பிப்ரவரி, 2013

பதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக்கு


copyright lockபதிப்பாளர்கள், எண்ணற்ற எழுத்தாளர்கள், எண்ணிலடங்கா புத்தகங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி நம்மை மலைக்கவைக்கிறது.  தினம் தினம் புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். பதிப்பாளர்களால் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். அதற்கான கட்டமைப்பு அவர்களிடம் உண்டு. உள்நாட்டின் மூலைமுடுக்கு தொடங்கி  வெளிநாடுகள் வரை ஒரு புத்தகத்தைக் கொண்டுசெல்லமுடியும் என்றால் அது பதிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களால்தான் முடியும்.
அதேபோல் என்னதான் வியாபார உத்தி கடைப்பிடிக்கப்பட்டாலும் புத்தகம் சுவாரஸ்யமாக இல்லை என்றால் வாசகர்கள் வாங்கமாட்டார்கள். புத்தகம் விற்காது. பதிப்பாளர்களுக்கு நட்டம்தான். ஒரு புத்தகம் மக்களிடையே பேராதரவைப் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளரும் தேவை, நல்ல பதிப்பாளரும் தேவை. இன்றைய புத்தக வியாபாரத்தில் பதிப்பாளரைச் சார்ந்து எழுத்தாளரும், எழுத்தாளரைச் சார்ந்து பதிப்பாளரும் இருக்கின்றனர்.

ஏனைய தொழிலைப் போல புத்தக வெளியீட்டிலும் வருமானத்தை வைத்துதான் வியாபாரம். புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பதிப்பாளரும், எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட விகிதக்கணக்கில் பங்கிட்டுக் கொள்கிறார்கள். புத்தக விற்பனையில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானத்துக்கு ராயல்டி என்று பெயர்.
பிரபலமான எழுத்தாளர் என்றால் அதிகமான ராயல்டி கிடைக்கும். புதிய எழுத்தாளர் என்றால் பதிப்பாளர் நிர்ணயிக்கும் ராயல்டிதான். சில எழுத்தாளர்களுக்கு, அவர்கள் புத்தகத்தை எழுதத் தொடங்கும் முன்பே பதிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ராயல்டி கொடுத்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு, ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதி வரும் ஜே.கே.ரவுலிங் என்ற எழுத்தாளருக்கு ஸ்காலஸ்டிக் என்ற புத்தக நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்பணமாக கொடுத்தது. ரவுலிங் எழுதிய சார்சரர்ஸ் ஸ்டோன் என்ற புத்தகம் உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்ந்தன.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. சந்தையில் வெளிவரும் புத்தகத்தின் பதிப்புரிமை யார் வசம் இருக்கிறது?  எழுத்தாளரிடமா? அல்லது பதிப்பாளரிடமா?
ஒப்பந்த அடிப்படையில் ஒரு எழுத்தாளர் பதிப்பாளருக்கு புத்தகம் எழுதிக்கொடுத்தார் என்றால், அந்த ஒப்பந்தத்தின்படி பதிப்பாளரிடம்தான் பதிப்புரிமை இருக்கும். ஏனைய சமயங்களில் எழுத்தாளரிடம் மட்டுமே புத்தகத்தின் பதிப்புரிமை இருக்கும். இந்த விவகாரத்தில் கேரள நீதிமன்றத்தின் வி.டி.தாமஸ் -எதிர்- மலையாள மனோரமா (AIR 1989 Ker 49)  என்ற வழக்கில் வெளியிட்ட தீர்ப்பு பிரபலமானது.
வி.டி.தாமஸ் மலையாள மனோரமா என்ற பத்திரிகை நிறுவனத்தில் கேலிச் சித்திர ஓவியராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊழியராக இருந்த சமயத்தில் மலையாள மனோரமா பத்திரிக்கைக்கு நிறைய கார்டூன்களை வரைந்துவந்தார். அதில் பொப்பன் மற்றும் மோலி என்ற கார்டூன்கள் மிகவும் பிரபலமானவை. மலையாள மனோரமா இந்த கார்டூன்களை வைத்து நிறைய படைப்புகளை வெளியிட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு வி.டி. தாமஸ் மலையாள மனோரமா நிறுவனத்தை விட்டு வெளியேறி, கலா கௌமுதி என்ற பத்திரிக்கைக்கு பொப்பன், மோலி கார்டூன்களை வரைந்து கொடுத்தார். மலையாள மனோரமா வி.டி. தாமஸ் மீது வழக்கு தொடர்ந்தது.  வி.டி.தாமஸ் தங்களுடைய நிறுவனத்தில் சம்பளத்திற்காக வேலை பார்த்தபோது உருவாக்கிய கார்டூன்கள்தான் இந்த பொப்பன் மற்றும் மோலி. ஆகவே, இந்த கார்டூன்களின் மீதான பதிப்புரிமை தங்களுடையது என்றது மலையாள மனோரமா தரப்பு. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவுக்காக வரைந்து கொடுத்த பொப்பன், மோலி கார்டூன்களின் பதிப்புரிமை மலையாள மனோரமாவிடம் இருப்பதாகவும், அதைத் தவிர வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவை விட்டு வெளியே வந்த பிறகு வரைந்த ஏனைய பொப்பன், மோலி கார்டூன்களின் மீது மலையாள மனோரமா சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.
சரி, ஒரு எழுத்தாளருக்கு தன்னுடைய படைப்புகளின் மீது எத்தனை ஆண்டுகள் பதிப்புரிமை இருக்கிறது? அவரது ஆயுள் முழுவதற்கும் உண்டு. பின்னர் அவர் இறந்து ஒருவருடம் கழிந்து 60 ஆண்டுகள் வரை அவருடைய வாரிசுகளுக்குப் பதிப்புரிமை உண்டு. பதிப்புரிமை காலம் முடிந்த பிறகு, ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பொதுவில் வந்துவிடும். பொதுவில் வந்த பிறகு அந்த புத்தகத்தை யார்வேண்டுமானாலும் அச்சிடலாம், வியாபாரம் செய்யலாம். எழுத்தாளரின் வாரிசுகளுக்குப் பதிப்பாளர்  ராயல்டி வழங்கவேண்டிய அவசியம் இல்லை.
பதிப்புரிமை நிலுவையில் உள்ள காலம் வரை ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பைப் பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்யலாம். அதே போல் ஒரு எழுத்தாளர் தான் எழுதப்போகும் புத்தகத்துக்கும் உரிமை மாற்று ஒப்பந்தம் செய்யலாம். ஆனால் அந்த ஒப்பந்தம் புத்தகம் வெளியிட்டபிறகுதான் அமலுக்கு வரும். இந்த உரிமை மாற்றம் பதிப்புரிமை காலம் முழுமைக்கும் இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும் இருக்கலாம். எவ்வளவு காலத்துக்கு உரிமை மாற்றம் இருக்கவேண்டும் என்பது ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.
உரிமை மாற்றம் எழுத்துப்பூர்வமாகத்தான் இருக்கவேண்டும். வாய்மொழி ஒப்பந்தம் செல்லுபடியாகாது. உரிமை மாற்று ஒப்பந்தத்தில் எந்த படைப்புக்காக உரிமை மாற்றம் செய்யப்படுகிறது, என்னவிதமான உரிமைகளெல்லாம் பதிப்பாளருக்கு வழங்கப்படுகிறது, எந்தெந்த இடங்களிலெல்லாம் சம்மந்தப்பட்ட படைப்புகளை விற்கலாம், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமை மாற்றம் செல்லும் என்பன போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும். ஒப்பந்தத்தில் உரிமை மாற்று காலம் குறிப்பிடப்படவில்லை என்றால் அது ஐந்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்று பதிப்புரிமை சட்டம், 1957 தெரிவிக்கிறது. மேலும் ஒப்பந்தத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் புத்தகம் விற்கப்படலாம் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை என்றால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தகத்தின் பிரதிகளை விற்கலாம் என்பதுதான் அதன் சட்டப்படியான அர்த்தம்.
பதிப்புரிமை உரிமை ஒப்பந்தம், உரிமை மாற்று ஒப்பந்தம் ஆகியன இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. முன்னாள் பிரதமர் நேருவின் சுயசரிதத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட சா.கணேசன் என்பவர் உரிமம் பெற்றிருந்தார். சா.கணேசன் நேருவுக்கு முறையாக ராயல்டி தராததால், நேரு அந்த உரிமையை ரத்து செய்துவிட்டு, புக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு உரிமையை வழங்கியிருக்கிறார். இருந்தபோதிலும் சா.கணேசனுடன் தொடர்புடைய திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் நேருவின் சுயசரிதத்தை தமிழில் வெளியிட்டது. இதை எதிர்த்து புக்ஸ் இந்தியா நிறுவனம் திருமகள் அண்ட் கோ நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கில் திருமகள் அண்ட் கோ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்,  நேரு தனது சுயசரிதை புத்தகத்தின் உரிமை மாற்றம் சம்மந்தமாக பிரேத்யேகமாக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் வாதி நிறுவனத்துடன் ஈடுபடவில்லை என்பதாகும். ஆனால் புக்ஸ் இந்தியா தரப்போ,  நேருவின் பிரதிநிதி நேருவின் விருப்பத்திற்கிணங்க எங்க்ள் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில், திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் தன்னுடைய சுயசரிதத்தை தமிழில் வெளியிட எந்த அதிகாரமும் இல்லை என்றும், எங்கள் நிறுவனமே தன்னுடைய சுயசரிதத்தை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நேரு’ என்று கூறியதோடு,  நேரு எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.
கடிதத்தை பரிசீலித்த நீதிபதிகள், பதிப்புரிமை சட்டத்தின் கீழ் பதிப்புரிமை உரிமை மாற்றத்துக்கென பிரேத்யேக ஆவணங்கள் ஏதும் தேவையில்லை, கடிதத்தின் மூலமாகக் கூட ஒரு படைப்பாளி தன்னுடைய பதிப்புரிமையை மற்றவருக்கு மாற்றம் செய்து கொடுக்கலாம் என்ற தீர்ப்பை வெளியிட்டது  (AIR 1973 Mad 49) பதிப்புரிமை உரிமை மாற்று ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏனைய உரிமை மாற்றத்துக்கு விதிக்கப்படும் முத்திரைத் தீர்வை (Stamp Duty)  இதற்குk கிடையாது. அதேபோல் பதிப்புரிமை உரிமை மாற்று ஆவணத்தை, மற்ற ஆவணங்கள் போல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. பதிப்புத்துறை நன்கு வளர வேண்டும், நாட்டில் மக்கள் படிப்பதற்கு புத்தகங்கள் மலிவான விலையில் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் சார்பாக முத்திரைத் தீர்வை வசூலிப்பதிலிருந்தும், பதிவுசெய்வதிலிருந்தும் விதி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது.
உரிமை மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பதிப்பாளர் ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்ட ஓர் ஆண்டுக்குள் செயல்படுத்தவில்லை என்றால் அந்த உரிமைகள் ரத்தாகிவிடும். ஆனால் ஒப்பந்தத்தில், ”பதிப்பாளர் எழுத்தாளரிடமிருந்து பெற்ற உரிமைகளை செயலபடுத்தாத போதிலும் சம்மந்தப்பட்ட ஒப்பந்தம் ரத்தாகாது” என்று ஷரத்து இருந்தால் மேலே சொன்ன சட்ட விதி பதிப்பாளரைப் பாதிக்காது. ஏனைய சமயங்களில், பதிப்பாளர் தனக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ச்செயல்படுத்தத் தவறும் பட்சத்தில், எழுத்தாளர் பதிப்புரிமை வாரியத்திடம் புகார் அளிக்கலாம். பதிப்புரிமை வாரியம் புகாரை விசாரித்து எழுத்தாளர், பதிப்பாளருக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யும். அதே போல் ஒப்பந்தம் சம்பந்தமாக எழுத்தாளருக்கும், பதிப்பாளருக்குமிடையே ஏதேனும் சண்டை சச்சரவு, ராயல்டி தொடர்பாகவோ அல்லது ஏனைய காரணங்களுக்காகவோ ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புரிமை வாரியத்திடம் புகார் செய்யலாம். புகாரை விசாரித்து பதிப்புரிமை வாரியம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். தேவைப்பட்டால் உரிமை மாற்று ஒப்பந்தத்தையே ரத்து செய்யலாம். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பரிகாரத்தை எழுத்தாளர் நலன் கருதி தேவைப்பட்டால் மட்டுமே வழங்க வேண்டும் என்று சட்டம் வரையறை அளிக்கிறது. மேலும் சட்டம் இன்னொரு நிபந்தனையயும் முன்வைக்கிறது. அதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு உள்ளாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பதிப்புரிமை வாரியத்திற்கு அதிகாரமில்லை.
பதிப்புரிமைச் சட்டம், 1957 ஒரு எழுத்தாளருக்கு பதிப்புரிமையைத் தவிர மேலும் ஒரு உரிமையை வழங்கியிருக்கிறது. அதன் பெயர் தார்மிக உரிமை. எழுத்தாளர் தன்னுடைய படைப்பை பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்து விட்டாலும் கூட அந்த படைப்பின் மீதான எழுத்தாளரின் தார்மீக உரிமையை பதிப்பாளர் உட்பட வேறு யாரும் மறுக்க முடியாது.
ஒரு படைப்பாளியின் தார்மீக உரிமைகள் என்னென்ன?
ஒரு படைப்பின் ஆசிரியர் தானே என்று பறைசாற்றும் உரிமை; தன்னுடைய படைப்பை மற்றவர்கள் திரித்துக் கூறாமல், உருக்குலைக்காமல், மாற்றி அமைக்காமல் இருத்தல். அவ்வாறு யாரேனும் செய்தால் அவர்களைத் தடுக்கவும், அவர்களிடமிருந்து நஷ்டயீடு பெறவும், ஒரு எழுத்தாளரின் தார்மீக உரிமை வழிவகை செய்கிறது.

{ஆழம் பிப்ரவரி 2013 இதழில் வெளியான கட்டுரை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக