வியாழன், 7 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !

obamaabdullah2லகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
ஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.
ஆனால், முசுலீம் மதவாத அமைப்புகளோ, இசுலாத்துக்கெதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் என்றும், அதற்கெதிரான தமது புனிதப் போரில் உலக முசுலீம்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறை கூவுகின்றனர்.
”முசுலீம்களே, ஜிகாத்துக்குத் தயாராகுங்கள்” என்று டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் அறைகூவல் விட்ட போது அதை எதிர்த்து கண்டித்தார், நடிகை ஷபனா ஆஸ்மி. ஸ்டார் டி.வி நடத்திய விவாதமொன்றில் ஷபனா ஆஸ்மியை ‘கூத்தாடி-விபச்சாரி’ என்ற பொருள்பட பகிரங்கமாக ஏசினார், இமாம்.
வரவேற்கத்தக்க நல்ல வசவு தான்! காசுக்காகத் தன் உடலை விற்பதுதான் விபச்சாரம் என்றால், டாலருக்காகத் தன்னையும் தன் நாட்டையும் சேர்த்து விற்றுக்கொண்ட தாலிபான், பின்லாடன், சதாம், சவுதி ஷேக்குகள் ஆகியோரைப் பற்றித்தான் நாம் முதலில் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
ஆனால் முசுலீம் அமைப்புகளோ பின்லாடனையும், தாலிபானையும் இசுலாத்தைக் காக்க வந்த மாவீரர்களாகச் சித்தரிக்கின்றனர். வளைகுடாப் போரின் போது இந்த மாவீரன் பட்டத்தை சதாம் உசேனுக்கு வழங்கியிருந்தனர்.

திப்பு சுல்தான், பேகம் அசரத் மகல், அஷ்பதுல்லா கான், ஓமர் முக்தர் பொன்ற எண்ணற்ற முசுலீம்களை மாவீரர்கள் என்று உலகமே கொண்டாடுகிறது. அவர்கள் முசுலீம்க்ள் என்பதனால் அல்ல; அவர்கள் அப்பழுக்கற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் என்பதனால் நாம் போற்றுகிறோம். நம் வழிகாட்டிகளாக அவர்களை மதிக்கிறோம்.
ஆனால், சதாமும் பின்லாடனும் தாலிபானும் எப்பேர்பட்டவர்கள் ? அமெரிக்க அடிவருடித்தனத்தில் தான் இவர்களது அரசியல் வாழ்க்கையே தொடங்குகிறது.

சதாம் உசேன் : ஒரு கையாள் மாவீரனான கதை :

  • 1958-இல் ஈராக்கில் கம்யூனிஸ்டு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அப்துல் கரீம் காசிம் அமெரிக்க, பிரிட்டிஷ், ஐரோப்பிய நிறுவனங்களை வெளியேற்றி எண்ணெய் வயல்களை நாட்டுடைமையாக்கும் சட்டத்தை 1961-இல் கொண்டு வந்தார். காசிமின் ஆட்சியை கவிழ்க்க சி.ஐ.ஏ. போட்ட சதித்திட்டத்தை நிறைவேற்றியது சதாம் உசேனின் பாத் கட்சி. சி.ஐ.ஏ. கொடுத்த கொலைப்பட்டியலின்படி ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களை வேட்டையாடிக் கொலை செய்துவிட்டு, எண்ணெய் வயல்களை அந்நிய நிறுவனங்களிடமே மீண்டும் ஒப்படைத்தது.
  • 1973-இல் அமெரிக்க ஆதரவுடன் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை (அவர்களும் முசுலீம்கள் தான்) வேட்டையாடிக் கொன்றது சதாமின் ஆட்சி.
  • 1980-இல் ஈரான் மீது படையெடுத்தார் சதாம். அமெரிக்கக் கைக்கூலியான மன்னன் ஷா தூக்கியெறியப்பட்டதற்குப் பழிவாங்க, ஈரான் மீது சதாமை ஏவிவிட்டது அமெரிக்கா. ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நா வில் ஈரான் கொண்டு வந்த முறையீட்டையும் தனது “வீட்டோ” அதிகாரத்தின் மூலம் தடுத்தது. சதாமுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து உதவியது.
  • 1984-இல் ஈரான் மீது இரசாயன ஆயுதத்தை (நரம்பு வாயு) ஏவினார் சதாம். இதற்காக ஐ.நா ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. தடையை எதிர்த்தது அமெரிக்கா.
  • 1987-இல் சதாமுக்கு ஆதரவாகத் தனது கடற்படையை அனுப்பி ஈரானை மிரட்டியது அமெரிக்கா. ஈரானியப் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. எட்டாண்டுகள் நடந்த இந்தப் போரில் கொல்லப்பட்டவர்கள் 10 லட்சம் பேர்.
  • 1988-இல் சொந்த நாட்டின் குர்து இன மக்கள் மீது இரசாயன ஆயுதங்களை ஏவினார் சதாம். “இப்போதாவது ஈராக் மீது பொருளாதரத் தடை விதிக்க வேண்டும்” என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிய போது சதாமுக்கு ஆதரவாக அதைத் தடுத்தார் அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன்.
சதாம் உசேனால் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஈரான் – ஈராக் நாடுகளைச் சேர்ந்த முசுலீம் மக்கள் தான். பாலஸ்தீனத்தில் இசுரேல் கொன்ற மக்களைப் போலப் பல பத்து மடங்கு முசுலீம் மக்களைக் கொலை செய்திருக்கிறது, சதாம் ஆட்சி.
அமெரிக்க ஆதரவுடன் திமிரெடுத்து திரிந்து கொண்டிருந்த சதாம் 1991–இல் குவைத்தை ஆக்கிரமிக்கப் போகிறாரென்று ஏற்கெனவே தெரிந்திருந்தும் “செய்யட்டும்” என்று வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்தது, அமெரிக்கா.
சதாமின் கழுத்துக்குச் சுருக்குப் போட்டு விடுவதும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயலை விழுங்கி விடுவதும் அமெரிக்காவின் திட்டம். அமெரிக்க இராணுவத்தை பாக்கு வெற்றிலை வைத்து அழைத்தனர் குவைத், சவுதி ஷேக்குகள்.
ஈராக் மீது படையெடுப்பது என்று முடிவு செய்தவுடனே 30 ஆண்டுகாலம் தனக்கு அடியாள் வேலை செய்த சதாமை ”சர்வாதிகாரி”, ”கொடுங்கோலன்” என்று அமெரிக்கா தூற்றத் தொடங்கியது. இது அமெரிக்காவின் கபட நாடகம் என்பது எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் உலகறிந்த இந்த அமெரிக்கக் கைக்கூலியை இசுலாமிய அமைப்புகள் கதாநாயகனாகக் கொண்டாடினார்களே அது என்ன வகை நாடகம் ?
ஈராக் மக்களின் படுகொலைக்கும் துன்பத்துக்கும் அமெரிக்காவை கண்டிக்கும் இசுலாமிய அமைப்புகள், அந்த அமெரிக்காவை பாக்கு வைத்து அழைத்த சவுதி ஷேக்குகளை கண்டிக்காத மர்மம் என்ன ?
இசுலாமிய அமைப்புகள் எனப்படுவோர் யாருடைய பிரதிநிதிகள் ? கொல்லப்பட்ட லட்சக்கணக்கான முசுலீம் மக்களின் பிரதிநிதிகளா அல்லது சதாம்கள், ஷேக்குகளின் பிரதிநிதிகளா ? அன்று சதாம் இன்று பின்லாடன்.

பின்லாடன் : சி.ஐ.ஏ. வளர்த்த கடா!

1967 – இல் வளைகுடா நாடான தெற்கு ஏமனிலிருந்து பிரிட்டிஷார் வெளியேற்றப்பட்டவுடன் தெற்கு ஏமனில் சோவியத் ஒன்றியத்தின் சார்பு ஆட்சி அமைந்தது. அது இசுலாமுக்குத் தடையேதும் விதிக்கவில்லை. சொல்லப் போனால் இசுலாமுக்கே ஏகாதிபத்திய எதிர்ப்பு–முற்போக்கு விளக்கம் கொடுத்தது. அவ்வளவு தான். இசுலாமுக்கு ஆபத்தில்லையென்றாலும் தன் சொத்துக்கு ஆபத்து என்பதால் பிரிட்டிஷாரோடு பின்லாடனின் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறினார்.
கட்டுமானத் தொழில் முதலாளியான பின்லாடனின் தந்தைக்கு மெக்கா, மெதினா நகரங்களை புதுப்பிக்கும் பணி மட்டுமின்றி, சவுதி அரசின் கட்டுமான காண்டிராக்டுகள் ஏராளமாக ஒதுக்கப்பட்டன. சவுதி மன்னர் குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பமானது பின்லாடன் குடும்பம்.
பாலஸ்தீன இசுலாமியத் தீவிரவாத அமைப்பான ஹமாஸின் தலைவர் மற்றும் எகிப்திய இசுலாமியத் தீவிரவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட பின்லாடனை ”சி.ஐ.ஏ.- ஐ.எஸ்.ஐ – சவுதி கூட்டணி” ஆப்கனுக்குக் கொண்டு வந்தது. சோவியத் ஆக்கிரமிப்புக்கெதிரான புனிதப் போரில் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைகளும் இறங்கினால் அதைக் காட்டி ஏழை முசுலீம் இளைஞர்களைப் பல நடுகளிலிருந்தும் கவர்ந்திழுக்கலாம் என்பது சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ. திட்டம்
பாகிஸ்தான் இராணுவம் சவுதி இளவரசரை அழைத்ததாகவும், அவருக்குப் பதிலாக பின்லாடன் பெயரை சவுதி அரசு சி.ஐ.ஏ வுக்குச் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறார் தாரிக் அலி. (Bombs, Blowback and the Future)
ஆப்கன் போருக்கு ஆளெடுப்பது, நிதி திரட்டுவது, போதை மருந்துக் கடத்தல், ஆயுதம் வாங்குவது, ஆயுதக் கிடங்குகள் அமைப்பது ஆகிய அனைத்துப் பணிகளிலும் சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ யுடன் தோளோடு தோள் நின்று பின்லாடன் வேலை செய்தது மறுக்கவியலாத உண்மை.
சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் சவுதி திரும்பிச் சென்றதும் பின்லாடனை குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொண்டது. ’அல்காயிதா’ படையின் துணை கொண்டு சதாமை முறியடிக்கலாம் என்ற தனது யோசனையை ஏற்காமல், இசுலாம் தோன்றிய புனித மண்ணில் மாற்று மதத்தினரை (அமெரிக்கப்படையை) கால் வைக்க அனுமதித்தது தான் தனது கோபத்திற்கு காரணம் என்று பின்லாடன் ஒரு பேட்டியில் கூறியதாகச் சொல்கிறார் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர். ஆனால், அதன் பின்னும் சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ. – பின்லாடன் உறவு தொடர்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
இன்று பின்லாடன் எனும் மனிதனுக்கு எதிராக அமெரிக்க வல்லரசே கச்சைக் கட்டி நிற்கிறது என்ற காரணத்தினால் பின்லாடனைக் கதநாயகனாக்க முடியாது. அல்லது ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை சுகபோகங்களை விட்டு காட்டில் அலைந்து திரியும் ’தியாகத்தை’ மெச்சியும் பின்லாடனை மதிப்பிட முடியாது.
பின்லாடன் சி.ஐ.ஏ. வளர்த்த கடா. அது அமெரிக்காவின் மார்பிலேயே பாய்கிறது. அதற்காக கடாவிற்கு மாலை போட்டு மாவீரன் பட்டம் கொடுக்க முடியாது.

தாலிபான் : அமெரிக்காவின் காசில் ஐ.எஸ்.ஐ வளர்த்த பாசிசக் கும்பல்!  

பின்லாடன் சி.ஐ.ஏ. வின் வளர்ப்பு மகன் என்றால், தாலிபான்களோ அமெரிக்காவே சோறு போட்டு வளர்த்த சொந்தப் பிள்ளைகள். சோவியத் யூனியனிலிருந்து மத்திய ஆசிய நாடுகளை உடைக்கவும் அங்கு இசுலாமியத் தீவிரவாதத்தைப் பரப்பவும், மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்திற்கு துணை நிற்கவும், எண்ணெய்க் குழாய் அமைக்கவும் தோதான ”இசுலாமிய ஆட்சி” யை ஆப்கனில் அமைப்பதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள்.
சோவியத் யூனியனை வெளியேற்றுவதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முஜாகிதீன்கள் 1992 இல் – ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் சொந்தக் காலில் நின்றுப் போராடும் விடுதலைப் படையாக இல்லாமல் கூலிப்படையாக வளர்ந்ததன் விளைவு உடனே தெரியத் தொடங்கியது. தோஸ்தம் – ஹெக்மத்யார் – மசூத் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு ஆப்கனை நிரந்தரத் துயரில் தள்ளினர்.
சோவியத் ஆக்கிரமிப்பால் பாகிஸ்தானில் அகதிகளாய் குடியேறிய ஆப்கன் மக்களின் பிள்ளைகளுக்கோ இது வெறுப்பை ஏற்படுத்தியது. வறுமை, வேலையின்மை, மடமையை போதிக்கும் மதறஸா கல்வி இவற்றுடன் இந்த வெறுப்பும் சேர்ந்து உருவான இளைஞர்கள் தாலிபான்கள்.
இந்த வெறுப்பையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஆப்கனில் ’கட்டுப்பாடான’ இசுலாமிய ஆட்சியை அமைப்பதற்கு இந்த இளைஞர்களைப் பயிற்றுவிக்க அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் காசு கொடுத்தனர்; பாகிஸ்தான் பயிற்சி கொடுத்தது. அமெரிக்கக் கைக்கூலிகளின் இரண்டாவது தலைமுறை (தாலிபான்) தயாரானது.
இவர்கள் இசுலாமிய அறிஞர்கள் அல்ல; கல்வியறிவு இல்லாத கிராமத்து முல்லாக்கள் ‘இசுலாம் என்று எதைச் சொல்லிக் கொடுத்தார்களோ அதை அவர்கள் உறுதியாகப் பிடித்துக் கொண்டனர். “விவசாயம், கால்நடை மேய்த்தல், கைவினைத் தொழில் என்ற எந்தத் தொழிலும் தெரியாத இந்த கூட்டத்தை என்னவென்று அழைப்பது ? மார்க்சின் மொழியில் சொன்னால் இவர்கள் ஆப்கானிஸ்தானின் லும்பன்கள்” என்கிறார் அகமத் ரஷீத். (Taliban–Islam, oil and the New Great Game)
புரியும்படி சொல்வதானால், இந்து முன்னணி, பஜ்ரங் தள் கும்பல் சங்கராச்சாரியின் தலைமையில் ’இந்து ஆட்சி’ அமைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது முல்லாக்களின் தலைமையிலான தாலிபான்களின் இசுலாமிய ஆட்சி.
“காலப்போக்கில் இவர்களும் சவுதி ஷேக்குகளைப் போல வளர்ந்து விடுவார்கள். நம் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்படும்… ஒரு எமிர் (அரசன்) இருப்பார், பாராளுமன்றம் இருக்காது, நிறைய ஷரியத் சட்டம் இருக்கும். அதனால் நமக்கொன்றும் சிரமம் இல்லை.”
- இது தாலிபன் ஆட்சி பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியின் கருத்து (அகமத் ரஷீத் நூலிலிருந்து).
ஆனால் தாலிபான்கள் ஷேக்குகளாக வளரத் தொடங்கும் முன் ஒரு உண்மையான அராபிய ஷேக் (பின்லாடன்) அங்கு வந்துவிட்டார். பின்லாடனின் நிதி உதவி, இராணுவ உதவி ஆகியவற்றுடன் இசுலாமிய சர்வதேசியம் என்ற கருத்தில் இரு தரப்புக்கும் இருந்த ஒற்றுமை அவர்களை ஓரணியாக்கிவிட்டது.

இது இஸ்லாத்துக்கு எதிரான போரா ?

இப்போது பின்லாடனும் தாலிபானும் அமெரிக்க ஆதிக்கத்தை ஒழித்து இசுலாத்தை நிலைநாட்டும் புனிதப்போரை நடத்துவதற்காகவே பிறந்து வந்தவர்கள் போல வீர வசனம் பேசுகிறார்கள். ஆப்கன், பாலஸ்தீனம், செசன்யா, போஸ்னியா, காஷ்மீர் என உலகெங்கும் முசுலீம்கள் மட்டும் தான் ஒடுக்கப்படுவது போலச் சித்தரிக்கிறார்கள்.
வரலாற்று அறிவற்ற நபர்கள் மட்டும் தான் இதை நம்ப முடியும். தனது சுரண்டலுக்காகவும் ஆதிக்கத்திற்காகவும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்கள் கொலைகளை ஒப்பிடும் போது இவர்கள்  போடும் பட்டியல் மிகச்சிறியது. தனது ஆதிக்கத்தை எதிர்த்த பாதிரியார்களையும் ஆர்ச் பிஷப்புகளையும் கூடச் சுட்டுக்கொல்ல அமெரிக்கா தயங்கியதில்லை என்பதே வரலாறு.
அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பை ”இசுலாத்துக்கெதிரான போர்” என்று சித்தரிப்பதன் மூலம் ஏதோ மத நோக்கங்களுக்காக கிறித்தவ–யூதக் கூட்டணி இசுலாம் மீது போர் தொடுத்திருப்பதாக உலக முசுலீம்களை நம்பச் சொல்கிறார்கள். யூனோகால் எண்ணெய் முதலாளிகளுடன் தாலிபான் முல்லாக்கள் 1997–இல் அமெரிக்கா போனார்களே அது ஹஜ் யாத்திரையும் அல்ல; இப்போது அமெரிக்கா தொடுத்திருப்பது கிறித்தவத்தை நிலைநாட்டும் போரும் அல்ல.
நிறவெறியும், இசுலாமிய மதவெறுப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டின் ஒரு முகம். அவ்வளவு தான். அதன் சாரம் உலக மேலாதிக்கம். இதை இருட்டடிப்பு செய்துவிட்டு ஜார்ஜ் புஷ்ஷின் வசனத்தைப் பிடித்துக்கொண்டு ’ஜிகாத்து’க்கு அணி திரளுமாறு கூறுவதன் மூலம் இன்றைய போருக்கு மட்டுமல்ல, நாளைய இசுலாமியக் கொடுங்கோல் ஆட்சிக்கும் இப்போதே அச்சாரம் போடுகிறார்கள்.

எது புனிதப் போர் ?

தாலிபானின் முல்லா ஓமர் “அமெரிக்க இசுரேல், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக ஜிகாத்” என்று அறிவித்திருக்கிறார். அருமையான அறிவிப்பு தான் ! ஆனால் தாக்குதலுக்குத் தளம் கொடுத்து நேரடியாக அமெரிக்கக் கைக்கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் அரசு, உஸ்பெக் அரசு, நேட்டோ கூட்டணியின் துருக்கி, வடக்கு முன்னணிக்கு ஆயுதம் தரும் ஈரான், அமெரிக்காவின் அருமை நண்பனான சவுதி அரேபியா போன்ற முசுலீம் நாடுகளுக்கு எதிராகவும் ’ஜிகாத்’ என்று முல்லா ஓமர் ஏன் கூறவில்லை ?
ஏனென்றால் ”இன்ஃபிடல்களுக்கு” (இசுலாத்தின் நம்பிக்கையற்றவர்களுக்கு) எதிராக மட்டும் தான் ’ஜிகாத் நடத்த முடியும். இந்த இரட்டை வேடத்திற்குப் பெயர் புனிதப் போர் !
சவுதியின் புனித மண்ணில் ”இன்ஃபிடல்கள்” ஆள் வைத்ததனால் கொதித்துப் போன பின்லாடன் ”இன்பிடல்களான” சி.ஐ.ஏ. கொலைகாரர்களிடம் காசும் ஆயுதமும் வாங்கிப் புனிதப்போர் நடத்தினாரே, அது அவமானமாகப் படவில்லையா ?
கஞ்சா வியாபாரம் செய்து புனிதப் போர் நடத்தலாம் என்று தாலிபானுக்கும், பின்லாடனுக்கும் சொல்லிக்கொடுத்தது மறை நூலா, சி.ஐ.ஏ. வின் பயிற்சி நூலா ?
சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆப்கன் போருக்கு ஆட்களும் காசும் தந்து உதவிய சவுதி மன்னர், அதே நேரத்தில் நிகராகுவாவில் ஏழை விவசாயிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொன்ற சி.ஐ.ஏ. காண்ட்ரா கொலைப்படைக்கும் காசு கொடுத்தார். அது பாவம் இல்லையா, கிறித்தவனை கிறித்தவன் கொல்லட்டும் என்ற ராஜதந்திரமா ?
ஆப்கனில் ஜிகாத் நடந்த அதே நேரத்தில் வெள்ளை நிறவெறி அரசின் கூலிப்படையான ரீனாமோ (Renamo) வுக்குக் காசு கொடுத்து மொசாம்பிக் விடுதலையை சீர்குலைத்தது யார் ? அதுவும் சவுதி மன்னர் தான். கருப்பின மக்கள் விடுதலைக்கெதிராக கிறித்தவ–வெள்ளை நிறவெறியர்களுடன் கூட்டு சேர்ந்து சவுதியின் இசுலாமிய அரசு நடத்திய இந்தப் போருக்கு என்ன பெயர் – ஜிகாத் தானா ?

எண்ணெய் வியாபாரத்தில் அமெரிக்கக்கூட்டு –பாலஸ்தீனத்துக்கு வேட்டு !  

பாலஸ்தீன மக்களின் தாயகத்தை மறுத்து, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கவும், இதுவரை சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீன மக்களைக் கொல்லவும் இசுரேலின் யூத வெறி அரசுக்கு உடந்தையாக இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் யூதர்கள் தான் இதற்கு காரணம் என்கின்றனர் இசுலாமிய அமைப்புகள்.
வளைகுடா ஷேக்குகளை அமெரிக்கா ஆட்டிப்படைக்க என்ன காரணம் ? பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எல்லா அரபு நாடுகளும் ஒன்று சேர என்ன தடை ? எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் கூட்டு; அமெரிக்க நிறுவனங்களில் ஷேக்குகள் வைத்திருக்கும் பங்கு. இந்தக்கூட்டணிக்கு எதிராக யார் புனிதப் போர் நடத்துவது ?
அமெரிக்கக் கைக்கூலியான ஷா அரசைத் தூக்கியெறிந்த ஈரான் மீது ஈராக்கை ஏவிவிட்டதும் இரண்டு தரப்புக்கும் ஆயுதம் விற்றதும் ரீகன்–சவுதிக் கூட்டணி தான் என்று பின்லாடனுக்குத் தெரியாதா ?
இந்தியாவின் ஏழை முசுலீம் சிறுமிகளை கிழட்டு ஷேக்குகள் நிக்காஹ் செய்வதும், பங்களாதேஷ் மூசுலீம் சிறுவர்களை விலைக்கு வாங்கி ஒட்டகத்தின் முதுகில் கட்டி பாலைவனத்தில் பந்தயம் விடுவதும், வீட்டு வேலைக்கு வரும் பெண்களை வைப்பாட்டியாக்கிக் கொள்வதும், சவுதி ஷேக்குகள் விலைமாதர்களுடன் நடத்தும் சல்லாபங்கள் லண்டன் பத்திரிகைகளில் சந்தி சிரிப்பதும் உலகுக்கே தெரியும் – ஷபனா ஆஸ்மியை விபச்சாரி என்று கூறும் இமாம்களுக்கு மட்டும் தெரியாதா ?

வெளிநாட்டு முசுலீம்களுக்கு சவுதியில் குடியுரிமை உண்டா ?

அகதிகளுக்குக் கூட பல நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன. ஆனால் பாலைவனத்தை பணம் காய்க்கும் தோட்டமாக மாற்றுவதற்கு 20, 30 ஆண்டுகள் உழைக்கும் தெற்காசிய முசுலீம் உழைப்பாளிகளுக்குக் கூட சவுதியில் குடியுரிமை கிடையாது. இந்த அநீதி ஏமனிலிருந்து சவுதிக்கு குடிபெயர்ந்த சர்வதேச இசுலாமியப் போராளி பின்லாடனுக்குத் தெரியாதா ? அல்லது கோடீஸ்வரனாக இல்லாத முசுலீம்களெல்லாம் ”இன்பிடால்கள்” என்று ஷரியத் கூறுகிறதா ?
வளைகுடாப் போரில் அமெரிக்க – சவுதி கூட்டணியை ஏமன் அரசு ஆதரிக்க மறுத்ததனால் ஒரே நொடியில் 10 இலட்சம் ஏமன் தொழிலாளிகளின் (இவர்களும் முசுலீம்கள் தானே) விசாவை ரத்து செய்து நாட்டை விட்டே துரத்தியதே சவுதி அரசு, அப்போது சவுதி தூதரக வாயிலில் எந்த இசுலாமிய அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதென்று சொல்ல முடியுமா ?
சுரண்டல், அடக்குமுறை, களவு, சூது, விபச்சாரம், அமெரிக்கக் கைக்கூலித்தனம் ஆகிய அனைத்தின் ஒன்று திரண்ட வடிவம் தான் சவுதி மன்னராட்சி. ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தொழிற்சங்க உரிமை என்று எந்த உரிமையும் அங்கு கிடையாது. ஆனால் குடிமக்கள் 5 வேளை தொழுகை செய்கிறார்களா என்று கையில் தடிக்கம்புடன் கண்காணிக்கும் முட்வா என்ற ”முல்லா போலீசுப் படை” உண்டு.
“ரசியாவில் எச்சில் துப்பும் உரிமை இல்லை, சீனாவில் சிறுநீர் கழிக்க உரிமை இல்லை” என்று உலக ஜனநாயகத்தைப் பற்றிப் பெரிதும் கவலைப்படும் அமெரிக்க அரசு சவுதியைப் பற்றி மட்டும் ஒரு வார்த்தை பேசியதில்லை. அந்தளவு புனிதமான சகோதரத்துவ உறவு!

தாலிபானின் வீரம் !

சவுதியின் இந்த ஜூனியர் தாலிபான்கள் தான் ஆப்கனின் சீனியர் தாலிபான்களை உருவாக்கினார்கள். இவர்களும் ஆட்சிக்கு வந்தவுடன் “ஐந்து வேளை தொழுகை செய்யாவிட்டால் தடியடி, பர்தா அணியாத பெண்கள் முகத்தில் திராவக வீச்சு, வேலைக்குப் போகும் பெண்களுக்கு தண்டனை” என்று கறாராக இசுலாமிய ஆட்சியை அமுல்படுத்தி அனைவருக்கும் சொர்க்கத்தில் இடத்தை உத்திரவாதம் செய்தார்கள்.
இந்த வீரப்புதல்வர்கள் பாகிஸ்தானில் பயிற்சி எடுத்த போது ஆட்சியிலிருந்தவர் பெனாசிர் பூட்டோ என்ற பெண்மணி. இசுலாமிய நாட்டைப் பெண் ஆளக்கூடாது என்று இவர்கள் எதிர்த்திருக்கலாம்; குறைந்த பட்சம் பர்தா அணியாததற்காக பெனாசிர் முகத்தில் ஆசிட் ஊற்றியிருக்கலாம்; அல்லது நவாஸ் ஷெரீபும், முஷாரப்பும் ஏன் தாடி வைக்கவில்லை என்று கண்டித்திருக்கலாம்.
ஆனால் காசு கொடுப்பவனிடமும், சோறு போடுபவனிடமும் எப்படி எதிர்த்துப் பேச முடியும் ? ஏழை எளிய இளிச்சவாய் முசுலீம்களுக்குத் தானே மத ஒழுக்கம்!
இமாம்களோ, சங்கராச்சாரிகளோ, ஆதீனங்களோ, போப்புகளோ… மதவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவும் மக்கள் விரோதிகளாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய மதவாதம் அமெரிக்க கையாள்!

இந்தோனேசியாவில் அமெரிக்காவை எதிர்த்த சுகர்னோவின் ஆட்சியைக் கவிழ்த்து 17 லட்சம் மக்களைக் கொலை செய்ய கொடுங்கோலன் சுகார்த்தோவுக்குத் துணை நின்றவை முசுலீம் மதவாத அமைப்புகள். கிழக்கு திமோரில் கொத்துக்கொத்தாக பல லட்சம் கிறித்தவ மக்களை சுகார்த்தோவின் இராணுவம் கொலை செய்த போதும் அமெரிக்கா கண்டு கொள்ளாததற்குக் காரணம் – சுகார்த்தோ ஒரு அமெரிக்கக் கைக்கூலி என்பது தான் .
பாகிஸ்தான் இராணுவம் வங்கதேச முசுலீம்களைக் கொன்று குவித்த போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா துணை நின்றதற்கு காரணமும் பாக். அரசு அமெரிக்க அடிவருடி என்பது தான்.
சமீபத்தில் எகிப்திய அரசு கொண்டு வந்த நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்துக் கலகம் செய்தவர்கள் வேறு யாருமல்ல; பின்லாடனை இசுலாமிய சர்வதேசியத்துக்குப் பயிற்றுவித்த ஜமாத்–ஏ–இஸ்லாமி அமைப்பினர் தான்.
பாகிஸ்தானில் நிலச்சீர்திருத்தம் என்பதே செய்யப்படாமல், 1000, 2000 ஏக்கர் பண்ணையார்களுக்கு ஆதரவாக நிற்பவையும் மதவாத அமைப்புகள் தான்.
“இசுலாமிய நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தொடர்ந்து கடைபிடித்து வரும் கொள்கைகள்” என்று பேசுபவர்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
முதலாவதாக ”இசுலாமிய மக்களுக்கெதிராக இசுலாமிய அரசுகள் கடைபிடித்து வரும் கொள்கைகள்” பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் ?
இசுலாமிய மதவாத அமைப்புகளின் துணையுடன், இசுலாத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் சர்வாதிகாரிகளின் துணையுடன் தான் அமெரிக்கா முசுலீம் நாடுகளைக் கொள்ளையடித்திருக்கிறது. ஒரு இறை நம்பிக்கை என்ற வரம்பைக் கடந்து பண்ணையார்களின் நிலத்தையும், ஷேக்குகளின் எண்ணெய் வயல்களையும் காப்பாற்றுவதற்கும், முசுலீம் மக்களின் சமூக வாழ்வைக் கட்டுப்படுத்தி ஜனநாயகத்தை மறுப்பதற்கும், இசுலாம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் வரையில் அமெரிக்கவுக்குக் கவலையில்லை. அமெரிக்காவும் சர்வாதிகாரத்தைத்தான் விரும்புகிறது – ஜனநாயகத்தை அல்ல;
இசுலாத்தைப் போலவே அமெரிக்காவும் சொத்துடைமையை பாதுகாக்கத்தான் விரும்புகிறது; சோசலிசத்தை அல்ல.
பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான பாசிச பாரதிய ஜனதா ஆட்சியின் துணையில்லாமல், இந்தியாவை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட முடியுமா ? பாரதிய ஜனதாவை எதிர்க்காமல் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்கதான் முடியுமா ?
பாரதிய ஜனதாவின் தலைமையின் கீழ் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்க முடியும் என்று எண்ணுவது முட்டாள்தனமென்றால், சதாம் உசேன்கள், பின்லாடன்கள் தலைமையில் அமெரிக்காவை வீழ்த்தலாம் என்று கனவு காண்பதும் முட்டாள்தனம் தான்.
இரண்டாவதாக இசுலாமிய நாடுகளுக்கெதிராக அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்ளைகள் எனப்படுபவை, உலக நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தொடுத்து வரும் தாக்குதலின் ஓர் அங்கம் தான். சந்தேகம் இருப்பவர்கள் வரலாற்றைப் படியுங்கள். அல்லது இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்புப் பட்டியலை படியுங்கள்.
உண்மை இவ்வாறிருக்க ”நிகராகுவா, எல்சால்வடார், கவுதமாலா, கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்தும் நரவேட்டையை கண்டுகொள்ள மாட்டோம்; இந்தோனேசிய அரசு கிழக்கு திமோர் (கிறித்தவ) மக்களை வேட்டையாடுவதையும், ஈராக் – துருக்கி குர்து மக்களை இனப் படுகொலை செய்வதையும், தாஜிக் – உஸ்பெக் – ஷியா முசுலீம்களை தாலிபான் படுகொலை செய்வதையும், பாகிஸ்தான் மொஹாஜிர்கள், பலூச்களை நசுக்குவதையும் கண்டுகொள்ள மாட்டோம்; ஆப்கன், போஸ்னியா, செசன்யா, ஈராக் தான் எங்கள் உலகம்” என்ற அணுகுமுறை விபரீதமானது. உலக மக்கள் பிறரிடமிருந்து முசுலீம்களைத் தனிமைப் படுத்தக்கூடியது.
முசுலீம்களை இவ்வாறு தனிமைப் படுத்தத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. அதனால் தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் பல்லாயிரம் மக்கள் பங்கு கொண்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தும் அமெரிக்கத் தொலைக்காட்சிகள் அவற்றை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. உலகெங்கும் முசுலீம்கள் மட்டும் தான் அமெரிக்காவை எதிர்ப்பது போலச் சித்தரிக்கின்றன. இசுலாமிய நாடுகள் என்று பிரித்துக் காட்டுவது அந்த வகையில் அமெரிக்காவுக்கு வசதியாகவே உள்ளது.

நாடுகளை மத அடிப்படையில் பிரிப்பது சரியா ?

நாடுகளை இசுலாம், கிறித்தவம் என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முசுலீம் நாடுகள்; வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சார விடுதியாகிப் போன தாய்லாந்தும் பவுத்த நாடுகள்; உலக மேலாதிக்கவாதி அமெரிக்காவும் அதனால் நசுக்கப்படும் நிகராகுவாவும் கிறித்தவ நாடுகள் என்று வகை பிரிக்க முடியுமா ?
இவ்வாறு பிரிப்பது அமெரிக்காவைப் போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத்தான் பெரிதும் பயன்படும் என்பதை சொல்லத் தேவையில்லை. பணக்காரன் ஏழையைப் பார்த்து நீயும் நானும் ஒரு சாதி என்பதும், முதலாளி தொழிலாளியிடம் நீயும் நானும் ஒரு மதம் என்று சொல்வதும் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதற்கல்ல, பாதுகாத்துக் கொள்வதற்குத்தான், ”நீயும் நானும் முசுலீம் நாடு” என்று பேசுவதும் இந்த ரகம் தான்.
இதற்கு மேலே ஒரு படி சென்று முசுலீம்களுக்கு தேசமில்லை என்கிறார்கள் மதவெறியர்கள். “காசுமீரி இனம், பண்பாடு என்று எதுவும் தனியாகக் கிடையாது என்றும் இசுலாமிய சர்வதேச இயக்கத்தின் அங்கம் என்ற முறையில் தாலிபான்களை காசுமீருக்கு வரவேற்பதாகவும்” (இந்து – 28.10.2001) இசுலாமியப் பெண்கள் அமைப்பின் தலைவி ஆந்த்ரபி பேட்டியளிக்கிறார்.
சமீபத்தில் பாரதிய ஜனதா அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் சிமி (SIMI) என்ற அமைப்பு, “ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேசியம், பல கடவுள் வழிபாடு, சோசலிசம்” ஆகியவற்றை ஒழிப்பது தான் எங்கள் கொள்கை என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்கிறது” ”இசுலாமிய ஆட்சி நடைபெறாத நாட்டில், இறைவனின் சட்டமின்றி வேறு சட்டத்திற்குப் பணிந்து வாழும் முசுலீம்கள் நரகத்திற்குச் செல்வார்கள்” என்று கூறும் குரான் வசனத்துடன் தொடங்குகிறது சிமியின் இணையதளம்.
சிமி மீதான தடையை ஜனநாயகவாதிகள் எவ்வாறு எதிர்ப்பது ? “பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்யாதபோது சிமிக்கு மட்டும் ஏன் தடை ?” என்று இந்துத்துவ அரசைக் கண்டிக்க மட்டும் தான் முடியும்.
இத்தகைய மதவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கை மூலம் சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுக்கும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை இந்து பாசிஸ்டுகளிடம் காவு கொடுக்கிறார்கள். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பல்வேறு உலக நாடுகளிலும் ஆப்கன் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இசுலாமியரல்லாத மக்களையும், அவர்களது ஜனநாயக உணர்வையும் கொச்சைப்படுத்துகிறார்கள்.

இஸ்லாமிய சர்வதேசியம் : ஒரு மாயமான் ! 

இசுலாமிய சர்வதேசியம் பேசுவோர் ஒரு உண்மையை தெரிந்துகொள்ளட்டும். உலக வர்த்தக மையமும் பென்டகனும் தகர்க்கப்பட்ட நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 20 ம் தேதியே துவங்கிவிட்டனர். அதாவது இசுலாமிய சர்வதேசியம் விழித்துக்கொள்ளும் முன்பே தொழிலாளி வர்க்க சர்வதேசியம் விழித்துக் கொண்டுவிட்டத்து. அமெரிக்க அரசின் போர்வெறிப் பிரச்சாரத்தையும் மீறி பல்லாயிரக்கணக்கில் திரண்டவர்கள் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள்.
தாலிபானின் மொழியில் இவர்களுடைய பெயர் காஃபிர்கள்; ஈரான் முதல் இந்தோனேசியா வரை பல்வேறு நாடுகளிலும் இசுலாமிய ஆட்சிகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகள் தான் போரை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
காஃபிர்கள் ‘முசுலீம்களுக்காக’க் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னும், ஆப்கன் குழந்தைகள் அமெரிக்க ஏவுகணைகளுக்கு பலியாகிச் சிதறத்தொடங்கிய பின்னரும், இசுலாத்தின் பிறப்பிடத்திலிருந்து, இசுலாமிய சர்வதேசியத்தின் பிறப்பிடத்திலிருந்து ஒரு சத்தத்தையும் காணோம். இசுலாத்தை உலகெங்கும் பரப்ப ஆண்டுக்கு ஐந்து பில்லியன் டாலர் செலவிடுகிறாராம் சவுதி அரசர். எப்படி இருக்கிறது இசுலாமிய சகோதரத்துவம் ?
இசுலாமிய அமைப்புகள் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, தங்கள் கோபத்தை அவர்கள் சவுதி அரச குடும்பத்தின் மீது காட்டட்டும். ஏழை முசுலீம்களை ஜமாத்தில் விசாரிப்பது போல சவுதி மன்னரையும் ஜமாத்தில் வைத்து விசாரிக்க முடியுமா என்று முயன்று பார்க்கட்டும். வர்க்க அரசியலின் உண்மை அப்போது விளங்கும்.
இப்படித்தான் 1987–இல் ஹஜ் யாத்திரை சென்ற ஈரானிய முசுலீம்கள் அங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நிராயுதபாணிகளான 400 யாத்ரீகர்கள் உடனே சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இந்த சவுதி அரச குடும்பத்தை அமெரிக்கக் கைக்கூலிகள் என்று சாடும் பின்லாடனுக்கு அன்று நடந்த இந்தச் சம்பவம் தெரிந்திருக்காது போலும். அவர் அப்போது ஆப்கனில் அமெரிக்க காசில் புனிதப் போர் அல்லவா நடத்திக்கொண்டிருந்தார் ! vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக